Tuesday, April 12, 2016


விபீஷணன் மானிடர் மேல் அளவற்ற அன்பு வைத்திருக்கிறான் என்பதை உணர்ந்து, வெந்தணலில் உருகுபவன் ஆனான் வேதம் ஆயிரம் வல்லானறிவாளன் இலங்கேஸ்வரன்…

 

விபீஷணனின் குணாதிசயங்கள் பற்றி, இதற்கு முந்தைய பதிவுகளிலேயே நான் விரிவாக எழுதியிருக்கிறேன்… செய்நன்றி மறந்தவன்… தந்தையைப்போல் பிரியம் காட்டி வளர்த்த தமையனுக்குத் துரோகம் செய்தவன்… அவன் சந்தர்ப்பவாதி… தற்கால அரசியலோடு ஒப்பிட்டால் ஜெயிக்கிற கட்சியோடு கூட்டுச் சேருகிற ஒரு அரசியல்வாதி… அவனுடைய விசுவாசமற்ற குணத்திற்காகவே, இதிகாசக் கதாபாத்திரங்களில் மிகவும் விமர்சிக்கப்படுகிறவன்…. கும்பகர்ணனைப்போல் செஞ்சோற்றுக்கடன் அடைக்காவிட்டாலும், கூட பரவாயில்லை… எந்தப் பக்கமும் சேராமலிருந்திருக்கலாம் அல்லவா…? இராவணன் என்று பெயர் வைத்துக் கொள்வதைப் பார்த்திருக்கிறோம்.. விபீஷணன் என்று யாராவது பெயர் வைத்துக் கொண்டிருக்கிறார்களா…? சமூகம் அவனை ஒதுக்கி வைத்துவிட்டது…!

 

 இராவணன் விபீஷணன்மேல் வெறுப்பை உமிழ்கிறான்…

  சிலநாட்களுக்கு முன்பு, ஒரு குரங்கு வந்து நமது அழகிய கற்பகவனத்தைச் சூறையாடுகையில், “ இதனைக் கொன்று தின்றிடுமின்..” என்று நான் கட்டளையிட, “ தூதுவர்களைக் கொல்லுதல் நன்றன்று “ என்று சொல்லித் தடுத்தாய்… அதற்கு ஏற்பவே, மலர்மார்பனாகிய அம்மானிடரையேத் துணையென மனத்தில் உறுதி செய்து கொண்டனை…”

 

“ நம் பகைவரைக் கண்டு பயந்தால் நீ போர் செய்வதற்குத் தகுந்த வீரன் ஆகமாட்டாய்… நமக்குப் புகலிடம் என்று மானிடரிடம் பற்றுக் கொண்டாய்… அரக்கர் பிறப்பொழுக்கத்தினின்று மாறுபட்டு, வஞ்சனை மனத்திடை வைத்தாய்… எனவே உன்னுடன் பொருந்தி வாழ்வதைக் காட்டிலும், நஞ்சையுண்டு வாழ்வது நன்று….”

 

வெளிப்பகையைக் காட்டிலும், உட்பகை மிகவும் கொடியது..

“ உறல்முறையான் உட்பகை தோன்றின் இறல்முறையான்

ஏதம் பலவும் தரும். “

குறள்… 885.

உறவுமுறையோடு உட்பகை உண்டாகுமானால், அது மன்னனுக்கு இறக்கும் வகையான குற்றம் பலவற்றையும் தரும்…

விபீஷணனோடு கொண்ட உட்பகை இராவணனுக்கு மரணத்தைத் தேடித் தந்தது….

 

“ உடன்பிறப்பைக் கொன்றானே என்ற பழிக்குப் பயந்து, நான் கொல்லத் துணியவில்லை…. “ பழியினை உணர்ந்து யான் உனைப் படுக்கிலேன்..” ( எத்துணைக் கொடியவரிடத்தும் ஒரு சிறிது நற்பண்பில்லாமற் போகாது என்ற கூற்றினை இங்கு உணரலாம் ) மானிடர் புகழ் பாடுவதை நீ இன்னும் விடுத்த பாடில்லை. என்னை விட்டுச் சீக்கிரமே செல்வாயாக.. என் கண்முன்னர் இனி நிற்பாயானால் நீ இறந்து படுவாய்…” என்று வெகுண்டு மொழிந்தான் இலங்கேஸ்வரன்…

 

இவ்வாறு இராவணன் கூறியவுடன், மேல் செய்யவேண்டியதை ஆலோசித்து; துணைவருடனே தானும் எழுந்து, வானத்திடைச் சென்று நின்றான் விபீஷணன்… இராவணனுக்கு நன்மை பயக்கத்தக்கச் சொற்களைக் கூறுவானானான்…..

 

“ வாழ்வை விரும்புபவனே… நான் மொழிவதைக் கேட்பாயாக… நெடுங்காலம் இருந்து வாழ்தற்குரிய உன் உயிரைப் பற்றி ஒன்றும் கருதாதவனாய், அறிவு ஒழுக்கங்களில் இழிந்தவர்களின் உரைகளைக் கேட்டு கெடுதலுக்கு உடன்படுவையோ…? சிறந்த வாழ்வென்பது தரும நெறியினின்றும் மாறினவர்கட்கு உண்டாகுமோ….?..”

 

“ புத்திரர் குருக்களின் பொருவில் கேண்மையர்

மித்திர ரடைந்துளோர் மெலியர் வன்மையோர்

இத்தனை பேரையு மிராமன் வெஞ்சரம்

சித்திர வதைசெயக் கண்டு தீர்தியோ….”

யுத்த காண்டம்…. வீடணன் அடைக்கலப் படலம்…

 

“ உன்னுடைய புதல்வர்களும், உன் ஆசிரியர் முதலிய பெரியோர்களும், ஒப்பற்ற உறவினரும், நண்பர்களும், உன்னைப் புகலாகச் சார்ந்தவர்களும், பலமற்றவர்களும், பலம் பெற்றவர்களுமான இத்தனை பேரையும் இராமபிரானின் அம்பு சித்திரவதை செய்வதைப் பார்த்துப் பின்னர் நீ உயிர் விடப் போகின்றாயோ…?..”

 

“ தொழுது மலர்கொண்டு தூபம்கை யேந்தி

எழுதும் எழுவாழி நெஞ்சே ! – பழுதின்றி

மந்திரங்கள் கற்பனவும் மாலடியே கைதொழுவான்

அந்தரமொன் றில்லை அடை. “

பொய்கையாழ்வார்…. முதல் திருவந்தாதி…

No comments:

Post a Comment