Thursday, January 8, 2015


தமிழில் தவறாகப் பொருள் கொள்ளப்பட்ட வார்த்தைகளுள் முக்கியமானது அல்குல்…

பெண்ணின் உடற்கூற்றில் இடையும், தொடையும் இணைகிற இடம் அல்குல்..குறுகி விரிந்த இடம் என்று பொருள்…

அணிமேகலை அழகு செய்கிற இடம் அல்குல்…படமெடுத்து நிற்கும் பாம்பின் வரி வரியான தோற்றமும், தேர்த்தட்டும் அல்குலுக்கு உவமையாகச் சொல்வது வழக்கம்…

தமிழ் இலக்கியத்தைப் புரிந்து கொள்தல் என்பது, ஆழ்கடலில் மூழ்கி முத்தெடுப்பதற்கு இணையானது…நுண்...மான் நுழைபுலம் சார்ந்து பொருள் கொள்ளவேண்டும்..கடலலையில் சற்றே காலை நனைத்துவிட்டு, ஆழ்கடல் அனுபவங்களைப் பேசுவதென்பது எத்துணை போலியானதோ, அத்துணை போலியாக அல்குலுக்கு வேறு அர்த்தம் கற்பிப்பவர்கள் தமிழில் எழுதி வருகிறார்கள்…கடற்கரை மணலில் கிளிஞ்சல்களை எண்ணிக் கொண்டிருப்பவர்களின் அறியாமை அது…!

பண்டைய தமிழ் இலக்கியத்தில் பரவலாகக் கையாளப்பட்ட வார்த்தை அல்குல்…பக்தி இலக்கியங்களில், குறிப்பாக.. திவ்யப் பிரபந்தத்தில் ஆழ்வார்கள் அல்குலுக்கு மிக அழகாக அணி செய்திருக்கிறார்கள்…

“ திதலை அல்குல் துயல் வரு கூந்தல்…” …ஐங்குறுநூறு…

“ திதலை அல்குல் அவ்வரி வாடவும்…” … அகநானூறு…

“ தித்திப் பரந்த பைத்தகவு அல்குல்…” …குறுந்தொகை…

” வரி ஆர் அகல் அல்குல்…” …கலித்தொகை…

“ பொலம் செய் பல்காசு அணிந்த அல்குல்…” …புறநானூறு…

” பாசிழைப் பகட்டு அல்குல்…” … பட்டினப்பாலை…

” பசும் காழ் அல்குல்…” …நற்றிணை…

“ தேர் கொண்ட அல்குல் துடி கொண்ட சிற்றிடை…” … நவநீதப் பாட்டியல்…

” நல் அரவின் படம் கொண்ட அல்குல் வேதப் பரிபுரையே…” … அபிராமி அந்தாதி…

“ அரைமதிக் குறழும் ஒண்ணுதல் வாட்கண் அலர் முலையணங்கனார் அல்குல்…” திருவருட்பா…வள்ளலார் சுவாமிகள்…

” புற்றரவு அல்குல் புனமயிலே போதராய்…” …கோதை நாச்சியர்…திருப்பாவை…

“ புற்றரவு அல்குல் அசோதை நல்லாய்ச்சி தன் புத்திரன் கோவிந்தனை…” …பெரியாழ்வார்…பெரியாழ்வார் திருமொழி…

“ நாடுடை மன்னர்க்குத் தூதுசெல் நம்பிக்கு என் பாடுடை அல்குல் இழந்தது பண்பே…” …நம்மாழ்வார்…திருவாய்மொழி…

கம்பனின் இராமாவதாரத்தில், சீதையை வர்ணிக்கும் இடங்களிலெல்லாம் அல்குல் வருகிறது…இந்த ஒரு வார்த்தையை வைத்து, கம்பரசத்தை, கம்பவிரசம் என்று சொன்னவர்களின் அறியாமையை நினைத்து, நகைப்பதைத் தவிர வேறு வழியில்லை…!

வார் ஆழிக் கலசக் கொங்கை வஞ்சிபோல் மருங்குலான் தன்
தார் ஆழிக் கலை சார் அல்குல் தடங் கடற்கு உவமை தக்கோய்
பார் ஆழி பிடரில் தாங்கும் பாந்தளும் பனிவென்று ஓங்கும்
ஓர் ஆழித் தேரும் ஒவ்வார் உனக்கு நான் உரைப்பது என்னோ…

கிஷ்கிந்தா காண்டம்….நாடவிட்ட படலம்…

சீதையின் அங்க அடையாளங்களை இராமன் அனுமனுக்குக் கூறுகிறான்….
“ சிறந்தவனே…கச்சை அணிந்த சக்கரவாகப் பறவையின் மென்மையையும், குடத்தைப் போன்ற கொங்கைகளையும், நீர்வஞ்சிக் கொடி போன்ற இடையையும் உடைய சீதையின் கிண்கிணி மாலை அணிந்த வட்ட வடிவமாகிய ஆடையைச் சார்ந்த அல்குல் என்னும் கடலுக்கு. உவமைப் பொருளாக உலகத்தைத் தாங்கும் ஆதிசேடனின் படத்தையும், பனியை அடக்கி மேல் தோன்றும் சூரியனின் தேர்த்தட்டையும் கண்கூடாகப் பார்த்த உனக்கு நான் புதியதாகச் சொல்லக் கூடியது யாது…?!......”

இஞ்சி இடுப்பழகி… குறுக்கு சிறுத்தவளே… பாடல்களைக் கேட்கும் போதெல்லாம் மங்கைப் பருவம் நினைவில் வந்து போகிறது..கல்லூரி நாட்களில், தோழிகள் நாங்கள் எல்லோருமே கோவில் சிற்பங்கள் போல் இருந்தவர்கள் தாம்…” அம்மா “ ஆன பிறகுதான் எங்களுக்கு உருமாற்றமே ஆரம்பித்தது…

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள்..நல்ல சிந்தனைகளை வளர்த்துக் கொண்டு, ஆரோக்கியமான உணவுப் பழக்க வழக்கங்களையும் மேற்கொண்டால் அகமும், முகமும் எப்போதும் பொலிவுற்றிருக்கும்… :)
See More
.
 
 
 


 

No comments:

Post a Comment