Monday, February 21, 2011

என் மனதைக் கொள்ளையடித்த எம்.எல்.வி.

1990-ம்  ஆண்டு,  சென்னை பாரதிய வித்யா பவனில் நான் இதழியல்( Journalism ) படித்துக் கொண்டிருந்தபோது, தமிழ் வார இதழ்களில் பகுதிநேர பத்திரிக்கையாளராக ( Freelance) எழுதிக்கொண்டிருந்தேன்.. 90-ம் ஆண்டை  பெண் குழந்தைகள் ஆண்டாக
அரசு அறிவித்திருந்தது.  அதையொட்டி ஒரு தொடர் எழுத,  'சுபமங்களா' பத்திரிக்கை என்னைப் பணித்தது..ஒவ்வொரு துறையிலும், பிரபலமாக இருப்பவர்களைச் சந்தித்து அவர்களின் கருத்துக்களைப் பதிவு செய்யலாம் என்று முடிவு செய்து. அந்தத் தொடரை எழுதி வந்தேன்.

இசைத்துறைக்கு  எம்.எல்.வி அம்மாவைச் சந்திக்கவேண்டும் என்று எனக்கு ஆசை..! காரணம்  நான் அவருடைய பரம விசிறி..!  அபிராமபுரத்தில் இருந்த அவருடைய வீட்டுக்குத் தொலைபேசியபோது, மறுநாள்
காலை பத்துமணிக்கு வரச்சொன்னார்.  சரியான நேரத்தில் அவருடைய வீட்டிலிருந்தேன்.  ஓய்வாக இருந்ததால், நைட்டி
அணிந்திருந்தார் எம்.எல்.வி அம்மா.  மாநிறமாகத்தான் இருப்பார்.  ஆனால் அந்தக்கண்கள் நம்மை வசீகரிக்கும்..!  என்னை
அவருக்கு அருகில் அமரச்சொன்னார்.  அவரை அவ்வளவு நெருக்கத்தில் பார்ப்பது, எனக்கு முதல்முறை..!  ஒருவித பயம்
கலந்த மரியாதை..! நான் 'நமஸ்காரம் அம்மா..!' என்றேன். என்னைப்பற்றிய விவரங்களைக் கேட்டறிந்தார்.  என்னுடைய
மாமி, கர்னாடக இசைக்கலைஞர் திருமதி. டி.வி.சுந்தரவல்லி எம்.எல்.வி அம்மாவுக்கு நன்கு பரிச்சயமானவர்.
" உன்னுடைய மாமி அருமையாக திருப்புகழ் பாடுவாள்.."  என்றார் எம்.எல்.வி. .எனக்கு பதினான்குவயதில்,  குடந்தை
கும்பேஸ்வரர் கோவில் நவராத்திரி விழாவில் எம்.எல்.வி.அம்மா பாடியதையும், அந்தக்கச்சேரி இரவு பதினொன்று மணிவரை
நீடித்ததையும், நான் முதல்வரிசையில் அமர்ந்து கேட்டதையும் அவரிடம் சொன்னேன்..!  என்னைப் பார்த்துப் புன்னகைத்தார்..!
"காவேரிக்கரையில்  பிறந்தவங்களுக்கு சங்கீத ரசனை இல்லேன்னாதான்  ஆச்சர்யம்...! நான் அங்கே பிறக்கலையேன்னு எனக்கு
எப்பவுமே குறை..!" என்றார் என்னிடம்.  எம்.எல்.வி. சென்னைவாசி.. மெட்ராஸ் லலிதாங்கி வசந்தகுமாரி..!    கான்வென்ட்டில்
படித்தவர்.  மருத்துவம் படிக்கவேண்டும் என்று விரும்பியவர். குடும்பச்சூழ்நிலை காரணமாக, இசையைத் தொழிலாக எடுத்துக்
கொண்டவர்.  வாழ்நாள் இறுதிவரை இசையரசியாக கோலோச்சியவர்..!

பெண் குழந்தைகள் வளர்ப்புபற்றி அவரிடம் கேட்டேன்..தாயார் லலிதாங்கி, தன்னை எப்படியெல்லாம் வளர்த்தார்?! என்பதுபற்றி சுவாரசியமாக சொன்னார்.  "சாதத்தோடு சங்கீதத்தையும் ஊட்டி வளர்த்தார்." என்று நடுவில் நான் கமெண்ட் அடித்ததை ரசித்தார்..எம்.எல்.வி அம்மாவின் திரையிசைப் பாடல்களில், எனக்கு மிகவும் பிடித்த பாடல்கள் என்று ஒரு பெரிய பட்டியலே
இருக்கிறது..! குறிப்பாக; மன்னாதி மன்னன், மதுரை வீரன். வணங்காமுடி, மணமகள், தாயுள்ளம்-- போன்ற படங்களில் அவர் பாடிய பாடல்கள் எனக்கு ரொம்பவே இஷ்டம்..அதைப்பற்றியெல்லாம் நான் அவரிடம் விரிவாகப் பேசினேன். "நான் ஐம்பதுகளில் பாடிய பாடல்கள், இந்த காலத்துப் பெண்களுக்குப் பிடிக்கிறதே..!" என்று ஆச்சரியப்பட்டார்.

மே மாதம் என்பதால், கோடை வெப்பம்;  நாங்கள் அமர்ந்திருந்த ஹாலில் எதிரொலித்தது.. " பூஜையறையில் ஏசி இருக்கிறது. அங்கு அமர்ந்து பேசலாம்." என்றார்.  நாங்கள் பூஜையறைக்குச் சென்றோம்.  நான்கடி உயரத்தில் குழலூதும் கிருஷ்ணர் சிலை, மண்டபம் போன்ற அமைப்பில் வைக்கப்பட்டிருந்தது..! "அம்மா  உங்களுடைய 'முரளிதர கோபாலாவுக்கும், முருகனின் மறுபெயர் அழகுக்கும்' நான் அடிமை..இந்த ரசிகையின் விருப்பம்; இரண்டு வரி பாடி காட்டுங்கள்...!" என்று கேட்டேன். "இதென்ன பிரமாதம்..பாடினாப்போச்சு.." என்றவர், இரண்டு பாடல்களையும் அற்புதமாகப் பாடினார்.  அன்று நடந்ததை, இப்போது நினைத்தாலும் புல்லரிக்கிறது.  நான் எம்.எல்.வி.அம்மாவின் கைகளைப் பிடித்துக் கொண்டேன்."நான் ரொம்ப
கொடுத்து வைத்தவள்.  யாருக்குக் கிடைக்கும் இந்த பாக்கியம்..?! என் மாமியிடம் சொன்னால் பொறாமைப்படுவாள்..!" என்றேன்.
என் கன்னத்தைத் தட்டி, வாஞ்சையுடன் சிரித்தார் எம்.எல்.வி..! வீட்டுக்குவந்து, விஷயத்தைச்சொன்னவுடன்,"என்னையும் அழைத்துக் கொண்டு போயிருக்கலாம்," என்று மாமி மிகவும் ஆதங்கப்பட்டார்.( என் பாஷையில் பொறாமைப்பட்டார்..!)

அப்போது; படப்பிடிப்பு முடிந்து, எம்.எல்.வி.அம்மாவின் மகள் நடிகை ஸ்ரீவித்யா உள்ளே நுழைந்தார். எம்.எல்.வி என்னை அறிமுகப்படுத்தி வைத்தார்.  "இந்தப்பெண் ரொம்ப ஜாலி டைப்... நீ பேசிப்பார்..!" என்றார்.  ஸ்ரீவித்யா என்னைப்பார்த்து "ஹாய்..!" என்றார். ஸ்ரீவித்யாவுக்கு நல்ல களையான முகம்..ஓராயிரம் கவிதைகள் பேசுகிற கண்கள்..!  நான் அவரிடம்,
"கண்களைப்பற்றி எழுதச்சொன்னால், ஸ்ரீவித்யாவின் கண்களைப் போல..!" என்றுதான் எழுதுவேன்..." என்றேன். "ஏய்..நீ ஐஸ் வச்சே ஆளைக்கவுத்துடுவே..பயங்கரமான ஆளு நீ..!" என்று என்னைக் கலாய்த்தார் ஸ்ரீவித்யா..! அரைமணிநேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு, ஓய்வெடுக்கச்செல்வதாக என்னிடம் கூறிச்சென்றார்.

எம்.எல்.வி.அம்மா என்னிடம், தன்மகள் ஸ்ரீவித்யா மதம் மாறித் திருமணம் செய்துகொண்டதையும், அந்தத்திருமணம் தோல்வியில் முடிந்ததையும் கூறி;  மிகவும் வருந்தினார்.  திடீரென்று, என்னைப்பார்த்து " லவ் மேரேஜ் பண்ணிக்க
மாட்டேன் என்று எனக்கு வாக்கு கொடு," என்றார்.  நான் அரண்டு போனேன்.  இதென்ன வம்பாப்போச்சு...வாக்கு கொடுத்தால், அதைக் காப்பாற்றவேண்டுமே..?! ஒருநிமிடம் யோசித்துவிட்டு, பிறகு கூறினேன்.."அம்மா...என் அப்பாஅம்மா மனம் புண்படும்படி, எந்த காரியமும் செய்யமாட்டேன். மதம் மாறித் திருமணம் செய்துகொள்ள மாட்டேன்.  என் மனதுக்குப்பிடித்து, என் அப்பாஅம்மாவும் ஏற்றுக்கொள்பவரைக் கல்யாணம் செய்துகொள்கிறேன்.." என்றேன்.  "இது நல்ல பெண்ணுக்கு அழகு" என்று கூறி என் முதுகைத் தட்டினார் எம்.எல்.வி...!

மிகவும் சுவாரசியமாகப்  பேசிக்கொண்டிருந்ததில்,  நேரம் போனதே தெரியவில்லை.  என் கைக்கடிகாரத்தைப் பார்த்தேன்.
நேரம் ஒருமணியாகிவிட்டிருந்தது..  "அம்மா நான் கிளம்புகிறேன்," என்றேன்.  என் தோளோடு சேர்த்து அணைத்து, என் கன்னத்தில் முத்தமிட்ட  எம்.எல்.வி.அம்மா,"உன்னை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கும்மா..!" என்றார்.  அந்த அன்பில் நான் நெகிழ்ந்தேன்..! "நீ எழுதியதை, நாளைக்கு கொண்டுவந்து காண்பி..நீ எப்படி எழுதியிருக்கிறாய் என்று நான் பார்க்கவேண்டும்.." என்று கூறினார்.  அவரிடம் விடைபெற்றுச்சென்றேன்.  மறுநாள் காலை, நான் எழுதியதைக் கொண்டுபோய் காண்பித்தேன்.  "நன்றாக எழுதியிருக்கிறாய்.." என்று பாராட்டினார். 

அக்டோபர்மாதம் முதல்வாரம்... என்னுடைய திருமணப்பத்திரிக்கையைக் கொடுப்பதற்காக, அவருடைய இல்லத்திற்குச் சென்றேன்.  அவர் உடல்நலமில்லாமல் இருந்தார்.. "உனக்கு இப்ப என்ன வயசு..?" என்று கேட்டார்." இருபத்துஒன்று முடிந்துவிட்டது.."என்றேன்.  "அதுக்குள்ள என்ன அவசரம் கல்யாணத்துக்கு..?" என்றார்.  மாப்பிள்ளைக்கு அவசரம் என்று
நான் எப்படிச்சொல்லமுடியும்...?! சிரித்து மழுப்பினேன்.  "எனக்கு உடம்பு சரியில்லையம்மா...என் ஆசிர்வாதம் எப்போதும் உண்டு உனக்கு..!மாப்பிள்ளையை அழைத்துக்கொண்டு வா ஒருநாளைக்கு..." என்று கூறினார். அவரோடு பேசுவது, அதுதான் கடைசிமுறை...என்பதை நான் அறிந்திருக்க வாய்ப்பில்லை...!

அக்டோபர்மாதம் 29ந்தேதி, கும்பகோணத்தில் எனக்குத்திருமணம்..! திருமணம் முடிந்து, கோவையில் இருக்கின்ற என்னுடைய புகுந்த வீட்டிற்குள் காலடி வைத்த நேரம்... யாரோ டீவியைப் போட்டார்கள்..செய்தியறிக்கை வந்தது...முதல்செய்தியே...சங்கீத கலாநிதி எம்.எல்.வி. மறைந்துவிட்டார்...என்பதுதான்..!  நான் திடுக்கிட்டுப் போனேன்..என் கண்ணில் நீர் கோர்த்துக் கொண்டது..எம்.எல்.வி.அம்மா என்மேல் வைத்திருந்த அன்புக்கு, கண்ணீரைத்தவிர நான் வேறெதைக் காணிக்கையாகத்
தரமுடியும்...?! அந்த அன்பு முடிவில்லாதது...என்றும் நிரந்தரமானது..!

என் கல்யாணநாள் வரும்போதெல்லாம், எம்.எல்.வி.அம்மா என்மேல் வைத்திருந்த, கள்ளங்கபடமற்ற அன்பு மனக்கண்ணில் வந்து நிழலாடும்...!

2 comments:

  1. Wonderful article! Felt I was there during your interview with MLV.

    ReplyDelete
  2. Very touching since it has been written genuinely from the heart.

    ReplyDelete