Saturday, June 11, 2011

பொன்னி நதிக்கரையோரம் ஒரு பல்கலைக்கழகம்

             பொன்னி நதி என்பது காவிரியைக்குறிக்கும்.  பொன்னி நதி பாய்ந்து வளம் செய்யும் சோழநாடு என்பார்கள்.  அந்த சோழ வளநாட்டில்,  திருச்சிராப்பள்ளி மாநகரத்தில்; காவிரியின் கரையில் அமைந்திருக்கின்ற எங்கள் கல்லூரியாம் சீதாலட்சுமி இராமசாமி மகளிர் கல்லூரியைத்தான்.. நான் பல்கலைக்கழகம் என்று சொன்னேன்...!ஒரே வளாகத்துக்குள்; தமிழக அரசுப்பாடத்திட்டத்தைப் பின்பற்றும்  சாவித்திரி வித்யாசாலா மகளிர் மேனிலைப்பள்ளி, மத்திய அரசு கல்விமுறையைப்
பின்பற்றும் காமகோடி வித்யாலயா, மகளிர் பாலிடெக்னிக், மற்றும் மகளிர் கல்லூரி.. என்று பெண்கல்விக்கல்விக்காகவே
துவக்கப்பட்ட ஒரு முன்னோடியான கல்விநிறுவனத்தை பல்கலைக்கழகம் என்று சொன்னதில் எந்த மிகையுமில்லை...!

          1950களில்..  பத்மபூஷண் இராமசாமி ஐயரால், அவருடைய மனைவி பெயரில் ஆரம்பிக்கப்பட்ட எங்கள் கல்லூரி;
ஆல் போல் தழைத்து, இன்று மிகப்பெரிய விருட்சமாய், விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது..! இந்த சமயத்தில் எனக்கொரு சம்பவம் நினைவுக்கு வருகிறது.  1996-ஆம் ஆண்டு இராமசாமி ஐயருக்கு நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது.. அச்சமயம் நான்  தில்லியில் வசித்து வந்தேன்.. நூற்றாண்டு விழா மலருக்காக, எங்கள் கணிதத்துறை சார்பாக நான் ஏதேனும் கட்டுரை எழுதி அனுப்பவேண்டும் என்று கல்யாணி மேம் எனக்குக் கடிதம்  போட்டிருந்தார்கள்.   பொன்னி நதிக்கரையோரம் ஒரு பல்கலைக் கழகம்...என்ற தலைப்பில் நான் ஒரு கட்டுரை எழுதியனுப்பினேன்.  விழாமலரில் என் கட்டுரை இடம்பெற்றது. நினைவுப் பரிசாக ஒரு வெள்ளி டாலரும்,  பாராட்டுக்கடிதமும் கல்லூரியில் இருந்து எனக்கு அனுப்பியிருந்தார்கள்.. இப்பவும், அந்தப் பரிசைப் பொக்கிஷம்போல் பாதுகாத்து வருகிறேன்...!


          1986-ஆம் ஆண்டு, ஜூலைமாதம்  கல்லூரியில் காலடி எடுத்து வைத்தபோது, அதன் பிரம்மாண்டத்தைப் பார்த்து
மலைத்துப்போனேன்.  வளாகத்தின் உள்ளே, அழகான சிறு ஆலயம் ஒன்று உண்டு.  இராமபிரான்; சீதையும், இலக்குவனும்
உடனிருக்க; அனுமன் வணங்கிநிற்கும் கோலத்தில் எழுந்தருளியிருப்பார்...இராமனை வணங்காமல், ஒருநாளும் நாங்கள்
வகுப்புக்குச்சென்றதில்லை.  கல்லூரி வளாகம் முழுக்கவே, இறையனுபவம் வியாபித்து நிற்பதை நான் கண்கூடாக
உண்ர்ந்திருக்கிறேன்.  சகமனிதர்களை நேசிக்கிற ஒருமனுஷியாக என்னை உருவாக்கியதில், இந்தக்கல்லூரிக்கு
மிகப்பெரிய பங்குண்டு,,,என் பிற்கால வாழ்க்கையைத் தீர்மானிப்பதற்கு; இந்த இடம் எனக்கொரு கருவாக, களமாக
இருந்திருக்கிறது..!

           எங்கள் கல்லூரியில், பாரம்பரியமாகக் கடைப்பிடிக்கிற வழக்கம் ஒன்று உண்டு.  ஸல்வார்கமீஸ் போன்ற வடநாட்டு உடைகளையோ, ஜீன்ஸ் போன்ற நாகரீக உடைகளையோ  மாணவிகள் அணிந்து வரக்கூடாது.. முதல் இரண்டுவருடங்கள் தாவணி அணிந்து வரலாம்.  இறுதியாண்டு கண்டிப்பாக, புடவைதான் அணியவேண்டும்.  இந்த விதியைத் தளர்த்த வேண்டும் என்று எப்போதும் கல்லூரிமுதல்வரிடம் நாங்கள் கோரிக்கை வைப்போம்...நான் இரண்டாம் வருடம் படிக்கும்போது, அப்போது முதல்வராக இருந்த கமலம் மேம்; ஸல்வார்கமீஸ் அணியலாம்..ஆனால் கண்டிப்பாக அதற்குமேல் துப்பட்டா அணியவேண்டும்  என்று விதியைத் தளர்த்தினார்.. அந்தப் புதியவிதி ஐந்துநாட்கள் கூட நீடிக்கவில்லை... காரணம்.. பல மாணவிகள் துப்பட்டா அணியாமல் வந்துவிட்டார்கள்...பிரின்ஸ்பால்;  ஒவ்வொரு வகுப்புக்கும் வந்துபார்த்து,  துப்பட்டா அணியாத மாணவிகளைப் பிடித்துவிட்டார்..அப்புறமென்ன..?! பழைய குருடி கதவைத்திறடி  கதைதான்...! நானும் இரண்டு நாட்கள் ஸல்வார்கமீஸ் அணிந்துகொண்டு சென்றேன்.  எங்கள் கணிதத்துறைத்தலைவர் (H.O.D) மைதிலிமேம் என்னைக்
கூப்பிட்டார்.  "உனக்கு ஸல்வார் நன்றாகத்தானிருக்கிறது...ஆனாலும்  நீ class representative  இல்லையா..?!( எங்கள் கல்லூரியில் class leader ஐ  representative என்று சொல்வது வழக்கம்) புடவை அணிந்து வந்தால்தான்,  மாணவிகளிடத்தில் உனக்கு மரியாதை கிடைக்கும்..." என்று சொல்லி, என் ஸல்வார் ஆசைக்கு குட்பை சொல்லிவிட்டார்.

                எங்களுக்குப் பாடமெடுத்த விரிவுரையாளர்களைப்(Lecturers)பற்றிய சுவையான தொகுப்பு இதோ::: பொதுவாக, ஆசிரியைகளை மேம் என்று குறிப்பிட்டுத்தான் இந்தப்பக்கத்தில் எழுதிவருகிறேன்.  ஆனால்..எங்களுக்கு
அப்படி அழைக்கிற வழக்கமேயில்லை.  சிறு குழந்தைகளைப் போன்று மிஸ் என்று தான் அழைப்போம்..  வசந்தாமிஸ், கல்யாணிமிஸ் என்றுதான் சொல்லுவோம்...தவிரவும், எங்கள் departmentஇல்; நாங்கள் படித்த சமயம், திருமணமாகாத Miss ஆசிரியைகள் நிறையபேர் இருந்தார்கள்.  அதனாலேயே, எல்லோரையும் மிஸ் என்று கூப்பிட்டே பழகிவிட்டோம்.. மேம் என்றுதான்  அழைக்கவேண்டுமென்று யாரும் எங்களைக் கட்டாயப்படுத்தவுமில்லை..

தமிழ் எடுத்த பானுநூர்மொஹிதீன் தூயதமிழில்தான் பேசுவார்.  " வகுப்புத்தலைவியே.. என் அறைக்கு வந்துவிட்டு போ.." என்பார் என்னிடம்...தோழிகள் கொல்லென்று சிரிப்பார்கள்..! மறக்கமுடியாத சம்பவம் ஒன்று நினைவுக்கு வருகிறது.. அகநானூறு பத்துசெய்யுட்கள் எடுக்கவேண்டும். மிகவும் அந்தரங்கமான, அகப்பொருள் அமைந்த பாடல்களாக இருந்ததால்; வகுப்பில் சொல்வதற்கு பானுமிஸ்ஸுக்கு தயக்கமும், கூச்சமுமிருந்தது.  நீங்களே படித்துக்கொள்ளுங்கள்
என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்.  தோழிகள் சும்மாயிருப்பார்களா...?! பத்துசெய்யுட்களுக்கும் நீதான் பொருள் சொல்லவேண்டுமென்று, கலாட்டா செய்தார்கள்.  பிறகென்ன...?! நான் ஸ்ருங்காரரசத்தோடு  அர்த்தம் சொல்ல,
வகுப்பு முழுவதும் ஒரே சிரிப்பலைகள்...!

இங்கிலீஷ் எடுத்த சகுந்தலாமிஸ், பிரமாதமாக ஜுலியஸ் ஸீஸர் நடத்துவார். அவருடைய English ரொம்ப அழகாக இருக்கும். எங்கள் கணிதத்துறையில்,  வசந்தாமிஸ், கல்யாணிமிஸ்,மைதிலிமிஸ், லீலாராவ்மிஸ், வாலாம்பாள்மிஸ், திலகவதிமிஸ், பழனியம்மாள், குமாரி, மீனாட்சி, ரஞ்சனி, உமாபார்வதி...என்று நீண்டுகொண்டேபோகும்...பழனியம்மாள்மிஸ்ஸுக்கு,
இனிஷியல் P.  நாங்கள் Psquare என்று தான் சொல்லுவோம்...!  படுவேகமாகக் கணக்குகளைப் போட்டுக்கொண்டே போவார்.  அவர் வேகத்திற்கு எங்களால் ஈடுகொடுக்கவே முடியாது.  Psquare படு ஸ்பீடாகப் போகிறது என்று புலம்பித்
தள்ளுவோம்...!  மீனாட்சிமிஸ்..புடவைக்கு மேட்சாக தோடும், வளையலும் அணிந்து வருவார்.  எனக்கு சுட்டுப்போட்டாலும் வராத Complex Analysis ( பெயரிலேயே Complex இருக்கிறது பாருங்கள்..!) மீனாட்சிமிஸ்தான் எடுத்தார். அவர் மூடி டைப்.. மாணவிகளோடு கலகலப்பாகப் பேசி நான் பார்த்ததில்லை.. நான் என்மகனிடம், அடிக்கடி சொல்வதுண்டு.  ஆசிரியரை
நாம் நேசித்தால்தான், அவர் எடுக்கிற பாடங்கள் நமக்குப்பிடிக்கும்.  ஆசிரியருக்கும், மாணவனுக்குமிடையே பரஸ்பர புரிதல் அவசியம்..நல்ல understanding இல்லையென்றால், பாடங்கள் நமக்கு கசக்கும்.  என் பள்ளி, கல்லூரிநாட்களில் நான் இதை அனுபவபூர்வமாக உணர்ந்திருக்கிறேன். 

                     கல்யாணிமிஸ்...கம்பீரமான தோற்றம் உடையவர்.  நல்ல குரல்வளம்.  அபாரமான ஸங்கீதஞானம் உடையவர். எங்கள் கல்லூரி விழாக்களில் அவருடைய பாட்டு அவசியம் இடம் பெறும். "எம்.எல்.வியைப்போன்று பாடுகிறீர்கள்", என்று நான் அவரிடம் சொல்வதுண்டு.  அவருடைய கணவர் மகாதேவன்ஸார் அருமையாக கிடார் வாசிப்பார்.  மகன் ப்ரதாப் பிரமாதமாகப் பாடுவான்.  நான் எப்போது அவர் வீட்டுக்குச்சென்றாலும், சாப்பிட்டுவிட்டுத்தான் போகவேண்டும் என்று வற்புறுத்துவார்.  என்னை உட்காரவைத்து, அவர் கையால் பரிமாறுவதில்
அத்தனை சந்தோஷம் அவருக்கு.. தாயினும் சாலப்பரிந்து என்பது இதுதானோ...?! சென்றவருடம்தான், எங்கள் கல்லூரி முதல்வராகயிருந்து ஓய்வு பெற்றிருக்கிறார். தற்போது திருச்சியில் வசிக்கிறார். 

                   வசந்தாமிஸ்...மிகவும் எளிமையானவர்.. சாந்தஸ்வரூபினி...அவர் யாரிடமும் கடுமையாகப்பேசி நான் பார்த்ததில்லை.  அவருடைய எளிமைதான், என்னை அவரிடம் நெருங்கிப் பழகவைத்தது...அவருடைய இருமகன்களும், மருமகள்களும் என்மீது அன்புமழை பொழிவார்கள்.. பெரிய கொடுப்பினையில்லையா  இது...?!தற்போது பெங்களூருவில்
வசிக்கிறார்.  நாங்கள் அடிக்கடி தொலைபேசிமூலம் பேசிக்கொள்வோம்.  அவர் சென்னைக்கு வரும்போதெல்லாம், நான் நேரில் சந்திப்பதுண்டு.  நான் நிறைய எழுதவேண்டும் என்று பேராசைப்படுகிற மனுஷி வசந்தாமிஸ்...!  அவருடைய
வற்புறுத்தலால்தான் நான் இந்த blogயையே ஆரம்பித்தேன்...!  இதோ..கல்லூரி முடித்து  இருபத்தியிரண்டு ஆண்டுகள். கடந்தபின்னரும்; கல்யாணிமிஸ், வசந்தாமிஸ்ஸுடனான  நட்பு தெளிந்த நீரோடைபோல ஓடிக்கொண்டிருக்கிறது... என் மனதில் தோன்றியதையெல்லாம், என் உள்ளக்கிடக்கையெல்லாம் நான் அவர்களிடத்தில் பகிர்ந்துகொண்டிருக்கிறேன். குரு-சிஷ்யை உறவு மீறிய ஒரு ஆத்மார்த்தமான நட்பு  எங்களுக்கிடையே உண்டு.

                                  1988-ம் ஆண்டு, நான் கல்லூரி இறுதியாண்டு படிக்கும்போது, தினமலர்-வாரமலரில் நான் எழுதிய, " இது வரலாற்றுக்காதல் அல்ல.." என்ற சிறுகதை பரிசு பெற்றது.  கல்லூரியில், எனக்கு முன்பின் அறிமுகமாகாதவர்கள் கூட என்னை அடையாளம் கண்டு கொண்டார்கள்.  எங்கள் கணிதத்துறையில், நான் நிறைய..நிறைய எழுதவேண்டும் என்று
உள்ளன்போடு வாழ்த்தினார்கள்.  இன்றளவும் அந்த வாழ்த்து நிலைத்து நிற்கிறது...!

                  என் வகுப்புத்தோழிகளைச்   சந்திக்கவேண்டுமென்று ஒரே ஏக்கமாயிருக்கிறது...என் திருமணத்திற்கு; சாந்தி, உஷா, ஜோதி வந்திருந்தார்கள். சாந்தியின் திருமணத்திற்கு நான் சென்றிருந்தேன்.. உஷாவின் கல்யாணம் பாலக்காட்டில் நடந்ததால் என்னால் போகமுடியவில்லை..ஜோதியின் கல்யாணத்திற்கும் என்னால் போகமுடியாமல் போய்விட்டது. பார்வதி, விஜி, குகாயினி, ஸ்வர்ணலதா, பத்மகுமாரி...எல்லோரும் எங்கிருக்கிறார்கள் என்றே தெரியவில்லை.
அன்னபூரணி, கவிதாமணி, அகிலா, லக்ஷ்மி---சென்னையில்தான் இருக்கிறார்கள்.  லக்ஷ்மி.. என்னுடைய நெருங்கிய தோழி என்பதால் அடிக்கடி சந்திப்போம்.. Facebook மூலம்..தோழிகள்..மீனா, புவனா, விமலா, நர்மதா, சித்ராவைக் கண்டுபிடித்தேன்.
நன்றி Facebook..!

                 இந்தப்பக்கத்தை டைப்படிக்கும்போது, ஒரு சுவாரசியமான சம்பவம் நினைவுக்கு வருகிறது.  எங்கள் வகுப்பு இருக்கும் கட்டடத்திற்கருகில் ரயில்வேலைன் ஓடுகிறது.  மாலையில், சரியாக 3.30மணிக்கு, கரூர் பாசஞ்சர் ரயில் அந்த வழியாகப்போகும்..அந்தச்சமயம் யார் எந்தப்பாடம் எடுத்தாலும் எங்களுக்குக் காதிலேயே விழாது.. பால்கனி கைப்பிடிச்சுவர் தாண்டிப் போகிற ரயிலை வேடிக்கைப் பார்ப்போம்.. " என்ன இது...குழந்தைகள்போல ரயிலை
வேடிக்கைப் பார்க்கிற பழக்கம்...?" என்று  கல்யாணிமிஸ்கூட கடிந்துகொள்வார்..ஆனாலும்.. நாங்கள் எங்கள் பழக்கத்தை
மாற்றிக்கொண்டதேயில்லை...!

                எங்கள் நட்பும்... நீண்ட, நெடிய... இரயில்பயணம்போலத்  தொடரவேண்டும் என்பதுதான்  என்னுடய ஆசை...!


3 comments:

  1. சுவாரஸ்யமான பதிவு.நடை நன்று

    ReplyDelete
  2. ஆண்டுகள் பலவானாலும் ஆசிரியர்களின் பெயர்களை ஞாபகம் வைத்திருந்து கட்டுரை எழுதியிருப்பது பாராட்டுக்குரியது.

    ReplyDelete
  3. பொன்னினதிக்கரையில் ஒரு பல்கலைக்கழகம் இப்ப தான் படிச்சேன் பகவதி .நம்ம காலேஜ் க்கு போயிட்டு வந்த திருப்தி. எல்லா டீசெர்சையும் பார்த்து பேசின ஒரு உணர்வு எனக்கு கிடைத்தது .மீனாஷி mam moody type கிடையாது .அவங்க எப்பயாவது ஜோக் அடிச்சாலும் நச்ன்னு இருக்கும்.subject ல expert.அவங்க dressing sense supera இருக்கும் .இதுக்காகவே அவங்க class miss பண்றது பலருக்கு பிடிக்காது.எனக்கும் அபபடித்தான்.

    ReplyDelete