Thursday, January 8, 2015

பரத கண்டத்தில் நதிகளுக்கெல்லாம் தாயாக கங்கைநதி போற்றப்படுகிறது..தீபாவளியன்று, கங்கா ஸ்நானம் ஆச்சா என்றுதான் கேட்கிறோம்...கங்கை என்றாலே புனிதமானது என்கிற நம்பிக்கை நம் எல்லோருக்கும் உண்டு..

எம்பெருமானின் ஜடாமுடியிலிருந்த கங்கையைப் பகீரதன் கடுமையான தவமிருந்து இந்தப் பாரதப்பூமிக்கு கொண்டு வந்ததாக ஐதீகம்..(கஷ்டமான வேலைக்கு பகீரதப்பிரயத்தனம் என்று சொல்வது வழக்கம்.) புராணத்தை அப்படியே நம்ப வேண்டும் என...்பதில்லை...கயிலாயமலைத் தொடரில் உள்ள மானசரோவர் ஏரியில் இருந்துதான் கங்கை உற்பத்தி ஆகிறது..கயிலாயம் எம்பெருமானின் இருப்பிடம் என்பது சைவர்களின் நம்பிக்கை..ஆக..விஞ்ஞானமும், புராணமும் கங்கை விஷயத்தில் உண்மையாகி விட்டது..

மகாபாரதத்தில் கங்கை, மன்னன் சாந்தனுவின் மனைவியாக, பீஷ்மரின் தாயாகப் போற்றப்படுகிறாள்..
இறைவனை கங்காதர மூர்த்தியாகத் துதித்து, ஏராளமான பதிகங்களை தேவாரத்தில் ஞானசம்பந்தர் பாடியிருக்கிறார்..

“வேயுறு தோளி பங்கன் விடமுண்ட கண்டன்
மிக நல்ல வீணை தடவி
மாசறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்....”

தேவாரம்...கோளறு திருப்பதிகம்..

பதினேழாம் நூற்றாண்டில், கும்பகோணத்திற்கருகில் உள்ள திருவிசநல்லூரில் ஸ்ரீதர வேங்கடேச அய்யாவாள் என்றொரு மகான் இருந்தார்..அந்தணரான அவர், முன்னோர்களுக்கு சிரார்த்தம் செய்து கொண்டிருந்த தினத்தன்று; அவர் வீட்டுவாசலில் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஒரு பரமஏழை பசியினால் களைப்புற்று, உணவு கேட்டான்..சமைத்து வைத்திருந்த உணவை அந்த ஏழைக்குக் கொடுத்து விட்டார் அய்யாவாள்...சிரார்த்த தினத்தன்று அன்னதானம் செய்யக்கூடாது என்பது சாஸ்திரம்..ஆசாரத்தை மீறி விட்டதாக, மற்ற அந்தணர்கள் அய்யாவாளைக் கடுமையாக எதிர்த்தார்கள்..கங்கையில் நீராடி பரிகாரம் செய்ய வேண்டுமென்றும் கூறிவிட்டார்கள்..போக்குவரத்து வசதியில்லாத அந்தக் காலத்தில் காசி சென்று வர வெகு நாட்களாகுமே என்றெண்ணிய அய்யாவாள்..அவருடைய வீட்டுக்கிணற்றடிக்குச் சென்று கங்கையைத் துதித்து கங்காஷ்டகம் பாடினார்...என்ன ஆச்சர்யம்...! அடுத்த கணமே கிணற்றுக்குள் கங்கை பொங்கி வழிந்து ஓட ஆரம்பித்தது..ஊரே வெள்ளக்காடாகி விட்டது..அந்தணர்கள் அய்யாவாளிடம் மன்னிப்பு கேட்டனர்..மீண்டும் ஒரு ஸ்லோகம் பாடி கங்கையைக் கிணற்றுக்குள்ளேயே அடங்கும்படி வேண்டினார் அய்யாவாள்..!

இப்போதும் கார்த்திகைமாத அமாவாசை நாளில், அந்தக் கிணற்றில் கங்கை வருவதாக ஐதீகம்..கும்பகோணம் நகர மேனிலைப்பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோது, அம்மாவுடன் சென்று, அந்தக் கிணற்றில் ஸ்நானம் செய்தது, பசுமையாக நினைவிலிருக்கிறது..கும்பகோணத்தில் வசித்தது என் வாழ்நாள் கொடுப்பினை..ஆன்மீகத்தின் மீதான நாட்டமும் அங்குதான் ஆரம்பித்தது..!

சோழ மாமன்னன் முதலாம் இராஜேந்திரசோழன் கங்கை வரை படையெடுத்துச் சென்று வடநாட்டவரை வென்று, அங்கிருந்து படகுகள் மூலம் கங்கை நீர் கொண்டு வரப்பட்டு, தான் கட்டிய கங்கை கொண்ட சோழீஸ்வரப் பெருவுடையாருக்குக் குடமுழுக்குச் செய்வித்தான்..தான் கட்டிய சோழகங்கப்பேரேரியில் (தற்போது பொன்னேரி என்ற பெயரில் சிறிய ஏரியாக இருக்கிறது..!) கங்கைநீரைக் கலந்தான்..

இராமாயணத்தில் கங்கைக்குத் தனி அத்தியாயமே உண்டு..இலங்கை வேந்தன் இராவணன் கங்கையைச் சூடிக்கொண்ட எம்பெருமான் அருள் பெற்றவன்..சீதையைக் கவர்ந்து செல்ல நினைக்கும் இராவணனுக்கு மாரீசன் அறிவுரை சொல்கிறான்..இராவணன் சினம் கொள்கிறான்…

கங்கை சடை வைத்தவனோடும் கயிலை வெற்பு ஓர்
அங்கையில் எடுத்த எனது ஆடு எழில் மணித்தோள்
இங்கு ஓர் மனிதற்கு எளிய என்றனை எனத் தன்
வெங்கண் எரிய புருவம் மீதுற விடைத்தான்..

ஆரணிய காண்டம்…..மாரீசன் வதைப்படலம்..

மாரீசனின் அறிவுரையைக் கேட்ட இராவணன், “ கங்கையைத் தன் தலையில் வைத்திருக்கும் சிவனோடு அவனது கயிலாய மலையை ஓர் உள்ளங்கையால் அள்ளியெடுத்த ஆண்மையான என் அழகான தோள்கள் இப்போது ஓர் அற்பமனிதனிடம் தோற்கும் எளிமை பெற்றன என்று நீ கூறிவிட்டாய்..” என்று சொல்லி தன் கொடிய கண்கள் அனலாக எரிய, புருவங்கள் நெற்றியின் மேலே செல்ல, பெருங்கோபம் கொண்டான்…

தோழிகள்.. வாழ்நாளில் ஒருமுறையேனும் ஹரித்வார், ரிஷிகேஷ் சென்று வரவேண்டும்..அங்கு பரிசுத்தமான, பளிங்கு போன்ற ஜில்ஜில் கங்கையைப் பார்த்து, ரசித்து, நீராடி மகிழலாம்..:)
See More
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

No comments:

Post a Comment