Thursday, January 8, 2015

லெமூரியா, கோண்ட்வானா என்று சொல்லப்படுகின்ற குமரிக்கண்டம், இந்து மகாசமுத்திரத்தில் மூழ்கி விட்டதாகக் கூறப்படுகிறது...

“பஃறுளி ஆற்றுடன் பன்மலை யடுக்கத்துக்
குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள...”

சிலப்பதிகாரம்...மதுரைக்காண்டம்..காடுகாண் காதை.
...
இந்த வரிகளின் மூலம்தான் குமரிக்கண்டம் ஒன்று இருந்ததே நமக்குத் தெரிய வந்திருக்கிறது..அங்குதான் மேருமலை இருந்திருக்கிறது..பாண்டியர்கள் சங்கம் வைத்து தமிழ் வளர்த்ததும் அங்குதான்..கபாடபுரம் தலைநகராக இருந்திருக்கிறது...கொஞ்சம் கொஞ்சமாக நிலப்பகுதி கடலுக்குள் மூழ்க ஆரம்பித்தவுடன், தமிழ்க்குடி வடக்கு நோக்கி நகர்ந்து; இன்றைய மதுரை மாநகரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்ய ஆரம்பித்தனர்..

ஒருகாலத்தில் ஆப்பிரிக்காவும், ஆஸ்திரேலியாவும் குமரிக் கண்டத்தோடு சேர்ந்திருந்ததாகச் சொல்கிறார்கள்..இன்றளவும் ஆப்பிரிக்கப் பழங்குடியினர், ஆஸ்திரேலியப் பழங்குடியினர் பேசும் மொழியில் தமிழ்ச்சொற்கள் கலந்திருக்கிறதாம்..ஆஸ்திரேலியாவில் விபூதியை உடம்பு முழுக்கப் பூசிக்கொள்ளும் பழங்குடியினர் இருக்கின்றனர்...சைவ மரபில் இருக்கும் காளாமுகர்கள் போல.. கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே தோன்றிய மூத்த குடி தமிழ்க்குடி என்று நாம் பெருமையாகச் சொல்லிக்கொள்வதும் உண்மைதான்..

கம்பனின் இராமகாதையில், சொல்லப்படாத விஷயங்களே இல்லை..உலகம் உருவானதைப் பற்றிய அறிவார்ந்த பாடல் இது..என்னை மிகவும் ஆச்சரியப்பட வைத்தது..வேறெந்த மொழியிலாவது இம்மாதிரிப் பாடல்கள் இருக்குமா என்பது சந்தேகம்தான்...

ஒன்று ஆகி மூலத்து உருவம் பல ஆகி
உணர்வும் உயிரும் பிறிது ஆகி ஊழி
சென்று ஆசறும் காலத்து அந் நிலையது ஆகி
திறத்து உலகம்தான் ஆகி செஞ்செவே நின்ற
நன்று ஆய ஞானத் தனிக் கொழுந்தே எங்கள்
நவை தீர்க்கும் நாயகமே நல் வினையே நோக்கி
நின்றாரைக் காத்தி அயல் பேரைக் காய்தி
நிலை இல்லாத் தீவினையும் நீ தந்தது அன்றே...

ஆரணியக் காண்டம்...சரவங்கன் பிறப்பு நீங்கு படலம்

”ஆதிகாலத்தில் ஒன்றாக இருந்து, பின்பு பல வேறு வடிவங்களாகி, அவ்வடிவங்களில் அறிவும், உயிரும் வெவ்வேறாகி ஊழிக்காலம் பெரும் பிரளயத்தால் முடியும் போது, முதலில் இருந்த ஒன்றாகும் நிலையைப் பெற்று மீண்டும் படைப்பு நிகழும்..எல்லா உலகங்களிலும் செம்மையாக நிற்கின்ற ஒப்பற்ற ஞானக் கொழுந்தே..எங்கள் குறை தீர்க்கும் தலைவனே..புண்ணியம் செய்தவரைக் காக்கின்றாய்..பாவம் செய்தவரை அழிக்கின்றாய்..நிலையில்லாத அப்பாவமும் நீ படைத்தது அல்லவா..” என்று இராமபிரானைப் பார்த்து இந்திரன் அன்போடு துதிக்கிறான்...

ஆங்கில வழிமுறையில் நம் குழந்தைகள் படித்தாலும், வீட்டில் தாய்மொழியில் பேச அவர்களை ஊக்குவிக்கவேண்டும். எனக்கு டாமில் பேசத் தெரியாது என்று சொல்வது பெருமை அல்ல... பெருத்த அவமானம்..
என் மகன் வருணை பத்மா சேஷாத்திரி பள்ளியில் ப்ரிகேஜியில் சேர்த்தபோது, “ வீட்டில் குழந்தையோடு ஆங்கிலத்தில் பேசுங்கள். அப்போதுதான் ஆங்கிலம் சரளமாகப் பேச வரும்..” என்று அவனுடைய ஆசிரியை என்னிடம் கூறினார்..உடனே நான், “ வீட்டில் தாய்மொழி தவிர வேறெந்த மொழியிலும் பேசுவதில் எனக்கு உடன்பாடில்லை..நீங்கள் பள்ளியில் சொல்லிக் கொடுக்கிற ஆங்கிலமே அவனுக்குப் போதும்..புத்திசாலியாக இருந்தால் பிடித்துக் கொள்வான்..” என்று சொல்லிவிட்டேன்..

பள்ளியில் சேர்ந்தபிறகு, ஒரு நான்கைந்து மாதங்கள் எங்களிருவரையும் மம்மி டாடி என்று கூப்பிட்டுக்கொண்டிருந்தான்..ஒருநாள் அவனை மடியில் அமர்த்தி, “ கண்ணா..நான் உன்னுடைய அம்மா..உடலும், உணர்வுமாக எப்போதும் உன்னுடனே இருக்கிறேன்..நீ சொல்கிற மம்மி எகிப்தில் இருக்கிறது..அது உயிரற்ற சடலம்..நீ எங்களை அம்மா அப்பா என்று கூப்பிடுவதுதான் எனக்குப் பிடிக்கும்..நீ வேறு யாரை உன் வாழ்வில் அப்படிக் கூப்பிடப் போகிறாய்...அம்மாவுக்குப் பிடித்ததை நீ செய்வாயா..மாட்டாயா...” என்று கேட்டேன்...செய்வேன் என்று சொன்னான் பிள்ளை..அன்றிலிருந்து அம்மா அப்பா என்று அழைக்க ஆரம்பித்து விட்டான்...அவன் வாயில் மம்மி டாடி என்ற வார்த்தை தப்பித்தவறிக் கூட பேசி நான் கேட்டதில்லை..! அவனுடைய நண்பர்கள் யாராவது அப்படிக் கூப்பிட்டால் வருண் அவர்களைக் கேலி செய்வான்..

இங்கே கவனிக்க வேண்டிய ஒரு விஷயம்...வீட்டில் அழகுதமிழ் பேசும் வருண்தான் அவன் வகுப்பில் ஆங்கிலத்தில் முதல் மதிப்பெண் வாங்குகிறான்..ஆங்கிலத்தில் பேச்சு, கட்டுரைப் போட்டிகளிலும் பரிசுகள் வாங்கியிருக்கிறான்..

ஆர்வமிருந்தால் இமயமலையும் கைக்கெட்டும் தூரந்தானே..:)
See More


 
 
 

No comments:

Post a Comment