Monday, December 29, 2014

ஆரண்யம், வனம் போன்ற சமஸ்கிருதச் சொற்கள், காடு என்கிற தமிழ்ச் சொல்லுக்கு இணையாக தமிழ்மொழியில் கலந்து பல நூற்றாண்டுகள் ஆகிவிட்டன..வனவாசம் என்கிற சொல்லை தண்டனைக்குரிய விஷயமாக நாம் கருத ஆரம்பித்தும் நூற்றாண்டுகள் கடந்து விட்டன..நிஜமாகவே வனவாசம் தண்டனையா...?

இயற்கையோடு இணைந்த வாழ்வு எத்தனை பேருக்கு வாய்க்கும்..? காட்டில் மரத்தடியினில் உறங்கி, காய், கனிகளை உண்டு, அருவியிலும், இன்னபிற ஓடைகளிலும் குள...ித்து, விலங்குகளையும், பறவைகளையும் தோழமையோடு நேசித்து கானக வாழ்க்கை வாழ்வது நம் போன்ற நாட்டுவாசிக்குச் சாத்தியமேயில்லை..எத்துணை பணவசதி படைத்திருந்தாலும் இந்த சந்தோஷத்தை நாம் விலை கொடுத்து வாங்க முடியாது..காரணம் இதுதான் நிஜமான சந்தோஷம்..! பணத்தினால் போலியான மகிழ்ச்சியை வேண்டுமானால் விலை கொடுத்து வாங்கலாம்.

நூறாண்டுக்கு முன்பிருந்த வனப்பகுதி இப்போது நம்மிடத்தேயில்லை...கால் சதவீதம் கூட இல்லையென்றே சொல்லலாம்..காட்டை அழித்து வீடாக்கிக் கொண்டிருக்கிறோம்..வனம் அழிவதால் நீர் வளம் அழிகிறது..ஆறுகளின் திசைகள் மாறிப்போகின்றன..வெப்பமயமாதல் அதிகரிக்கிறது..மழையளவு குறைகிறது..வருடாவருடம் வெப்பம் அதிகரித்துக் கொண்டே போகிறது..பறவைகளின் நடமாட்டம் குறைகிறது..சென்னையில் ஒரு குருவிகூட கிடையாது..இங்கே காக்கா பிடிப்பவர்களின் கூட்டம் அதிகம் என்பதால், காகங்களும் கூட்டங்கூட்டமாக பறந்து திரிகின்றன...! வலையப்பேட்டை பாட்டி வீட்டுக்கிணத்தடியில் ஒரு கைப்பிடி அரிசியைத் தூவினால் எங்கிருந்தோ திடுமென்று பத்துப்பதினைந்து பறவைகள் வந்துவிடும்...விதவிதமான நிறங்களில்...பெயர் தெரியாத இந்தப் பறவைகளைப் பார்ப்பதற்காகவே நான் சென்னையில் இருந்து வந்திருக்கிறேன் என்று அவைகளிடம் சொல்லவேண்டுமென்று எனக்குத் தோன்றும்...!

இராமனை வனவாசம் போகச் சொன்னபோது அவனுக்கு அத்தனை சந்தோஷமாம்..வனவாசத்தின் போது முனிவர்களையும், யோகிகளையும் சந்திக்கலாம்...நம் வாழ்வைச் செம்மைப்படுத்திக் கொள்ளலாம் என்று நினைத்தானாம்..

அன்ன மா முனியொடு அன்று அவண் உறைந்து அவன் அரும்
பன்னி கற்பின் அனசூயை பணியால் அணிகலன்
துன்னு தூசினொடு சந்து இவை சுமந்த சனகன்
பொன்னொடு ஏகி உயர் தண்டக வனம் புகுதலும்

ஆரண்ய காண்டம்...விராதன் வதைப் படலம்.

இராமனும், இலக்குவனும் பெருமையுடைய அத்திரி முனிவனுடன் தங்கியிருந்தனர்...மறுநாள் அத்திரி முனிவனின் அரிய பத்தினியான அனசூயையின் கட்டளைப்படி அளிக்கப்பட்ட அழகிய அணிகலன்கள், பொருந்திய ஆடைகள், சந்தனம் ஆகியவற்றைத் தரித்த ஜனகன் மகள் சீதையுடன், அவர்களிருவரும் புறப்பட்டுச் சென்று தண்டக வனத்தில் புகுந்தனர்...

செடி,கொடிகளை வளர்த்து, அவைகளிலிருந்து மலர்ந்து மணம் வீசும் மலர்களைப் பார்த்துப் புன்னகைக்கலாம்...மரம் நட்டு, அதன் கீழ் அக்கடாவென்று இளைப்பாறலாம்...நம் வீட்டுத்தோட்டத்தில் காய்த்த வெண்டையை அப்படியே பச்சையாகக் கடித்துச் சாப்பிடலாம்..நினைக்க நினைக்க எத்தனை மகிழ்ச்சியாக இருக்கிறது...?!

எம் பாட்டன், முப்பாட்டன் வைத்த மரத்தின் நிழலை நான் அனுபவிக்கிறேன்..என் பேரன், கொள்ளுப்பேரன் அனுபவிக்க எந்த மரத்தின் மிச்சத்தை வைத்துவிட்டுப் போகப்போகிறேன்..? நாம் யோசிக்க வேண்டிய தருணம் இது..

ஆளுக்கொரு மரம் நடுவோம்...நாள்தோறும் மனிதம் வளர்ப்போம்...:) :)
See More
 
 
 
 
.
 

No comments:

Post a Comment