Monday, December 29, 2014

பாதம் என்பதற்கு முழுமையான அர்த்தம் தாங்குதல் என்று எடுத்துக் கொள்ளலாம்...இந்த மனித உடம்பைத் தாங்குவது பாதம்தானே..பாதத்தில் அடிபட்டுவிட்டால், வலியைப் பொறுத்துக் கொள்வது கஷ்டமாக இருக்கிறது..எந்தளவுக்கு மென்மையான பாதமோ, அந்தளவுக்கு உறுதியாகவும் இருக்க வேண்டும்..பாதங்களைச் சரியான முறையில் பராமரிக்க வேண்டும்..

வைணவ ஆச்சார்யர்களுள் மிக முக்கியமானவர் வேதாந்த தேசிகர்..அவர் “பாதுகா சஹஸ்ரம்” என்றொரு மிக அர...ுமையான நூலை சமஸ்கிருதத்தில் எழுதியிருக்கிறார்..
ஸ்ரீமன் நராயணனின் பாதம் பணிந்து சரணாகதி அடைவதற்கான வழிகள் அந்த நூலில் கூறப்பட்டிருக்கின்றன.

தில்லையில் ஆடல்வல்லான் இடது பதம் தூக்கி ஆடும் நிலை..அவனருளாலே அவன் தாள் பணிந்து என்கிற தத்துவத்தைக் குறிக்கிறது..இறைவனின் தாண்டவம்
என்கிற தாத்பரியமே தீமைகளை சம்ஹாரம் செய்வதுதான்.
அதற்குத் திருவடிகளை உவமையாகக் கூறுவது மரபு.

தமிழக-ஆந்திர எல்லையில் அமைந்த சித்தூர் மாவட்டத்தில், சுருட்டப்பள்ளி என்கிற ஊரில் எம்பெருமான் சர்வேஸ்வரன்
பள்ளி கொண்டீஸ்வரனாக அருள் பாலிக்கிறார்..நாங்கள் அந்த ஆலயத்திற்குச் சென்றிருந்தபோது, சிவாச்சாரியார் தீர்த்தம் கொடுத்தார்..” பெருமாள் கோவில் மாதிரி தீர்த்தம் கொடுக்கிறீர்களே..” என்று நான் கேட்டேன்..”எம்பெருமானுக்கு இந்த ஸ்தலத்தில் பாத தரிசனம் உண்டு..அதனால்தான் இந்த தீர்த்தம்..” என்றார்..
ஆதியும், அந்தமுமில்லாத அருட்பெருஞ்சோதிக்குப் பாத தரிசனம்.. ஸ்ரீ மஹா பெரியவா இந்த ஆலயத்துக்கு வரும்போதெல்லாம், கருவறையில் தனியாக நின்றுகொண்டு
எம்பெருமானிடம் பேசிக்கொண்டிருப்பாராம்..சிவாச்சாரியார் என்னிடம் சொன்னபோது எனக்கு மயிர்க்கூச்செறிந்தது..
குடந்தையில் கிடந்தவாறு வீற்றிருக்கும் ஆராவமுதனிடம், திருமழிசை ஆழ்வார் பேசியது நினைவுக்கு வந்தது..ஆழ்வார்கள் பற்றி எழுதும்போது இந்தச் சம்பவத்தை விரிவாக எழுதுகிறேன்..

கருவறையில், அன்னை உமையவள் மடியில் ஆலகால விஷத்தை அருந்திய களைப்பில் எம்பெருமான் கிடந்த கோலத்தில் காட்சியளிக்கிறார்..சுற்றிலும் இந்திராதி தேவர்கள் இருக்கிறார்கள்..கருவறையை விட்டு வெளியே வருவதற்கு மனமே வராது..

தோழிகள்/நண்பர்கள் அவசியம் இந்தக் காட்சியைக் கண்டு இன்புறவேண்டும்..சென்னையில் இருந்து இரண்டு மணிநேர கார் பயணம்..திருவள்ளூர்( பண்டைய பெயர் திரு எவ்வளூர் )
தாண்டி இந்த சுருட்டப்பள்ளி இருக்கிறது..

கம்பனின் இராமகாதையில் திருவடி முக்கியக் கதாபாத்திரமாக இடம் பெறுகிறது..சித்திரக்கூடத்தில் இருக்கும் இராமனைத் தேடி வந்து, அயோத்திக்கு அரசனாக முடிசூட்டிக் கொள்ளும்படி பரதன் வேண்டுகிறான்..ஒருபோதும் தர்மத்தின் நிலையிலிருந்து தன்னால் தாழமுடியாது என்று கூறி பரதனின் வேண்டுகோளை இராமன் நிராகரிக்கிறான்..இராமனின் பாதுகைகளைப் பெற்றுக்கொண்டு அளவிட முடியாத சோகத்தோடு பரதன் அயோத்தி திரும்புகிறான்..பதினான்கு
வருடங்கள் இராமனின் திருவடிகள்தான் அரியணையில் அமர்ந்திருந்தது என்பது வரலாற்றின் ஆச்சரியமான நிகழ்வு..

விம்மினன் பரதனும் வேறு செய்வது ஒன்று
இன்மையின் அரிது என எண்ணி ஏங்குவான்
செம்மையின் திருவடித்தலம் தந்தீக என
எம்மையும் தருவன இரண்டும் நல்கினான்.

அயோத்தியா காண்டம்...திருவடி சூட்டு படலம்.

இனி செய்யவேண்டியது வேறொன்றுமில்லை..இராமனைப் பிரிந்து அயோத்தியில் அரசாட்சி செய்வது என்பது அத்துணை எளிய செயல் அன்று..என்று பெரிதும் மனம்
வருந்தி, “ எனக்கு உனது பாதுகைகளை இனிமையுடன் தந்தருள்க..”என்று இராமனிடம் வேண்டிக் கொண்டான் பரதன்.இராமனும் தனது பாதுகைகளை அவனிடம் அளித்தான்.

அடித்தலம் இரண்டையும் அழுத கண்ணினான்
முடித்தலம் இவை என முறையின் சூடினான்
படித்தலத்து இறைஞ்சினான் பரதன் போயினான்
பொடித்தலம் இலங்குறு பொலம் கொள் மேனியான்..

அயோத்தியா காண்டம்..திருவடி சூட்டு படலம்.

அழுத கண்களையுடைய பரதன், அந்தப் பாதுகைகள் இரண்டையும் தனது கிரீடங்களாகத் தலையில் சூடிக் கொண்டான். இராமனது திருவடியில் வீழ்ந்து வணங்கி அயோத்தி திரும்பினான்..

பெரியவர்களுக்கு நமஸ்காரம் செய்வது நம்முடைய பண்பாடு..அதுவும் கூட நெடுஞ்சாண்கிடையாக
ஒருவரை விழுந்து வணங்குகிறோமென்றால், அந்த நமஸ்காரத்தை ஏற்றுகொள்கிற தகுதி அவர்களுக்கு இருக்க வேண்டும்..!

இன்றைய சூழலில் அரசியல்வா(வியா)திகளின் காலில் விழுந்து நமஸ்காரம் செய்வதைத் தடுக்க ஏதேனும் சட்டம் கொண்டுவந்தால் எத்தனை சந்தோஷமாக இருக்கும்..:) :)
See More
 
 
 

No comments:

Post a Comment