Monday, December 29, 2014

நட்புக்கென்று நம் வாழ்வில் பல பக்கங்களை ஒதுக்கியாகவேண்டும்..பிரியத்தை மழையாய்ப் பொழியச்செய்வது நட்பில்தான் சாத்தியம்..நட்புதான் காரம். மணம், குணத்தோடு எல்லைகளையும் தாண்டி நீடித்து நிற்கிறது..நட்புதான் மானுடத்தின் மேன்மையை உணரச்செய்கிறது..நல்ல நட்பு நம்மை நல்ல மனுஷியாக உருவாக்குகிறது..நட்பின் அருமை அறியாதவர்கள், நல்ல நண்பர்கள் அமையப் பெறாதவர்கள் மிகவும் பரிதாபத்துக்குரியவர்கள்..

நட்புக்காக இருபது ...பாடல்களை ஒதுக்கியிருக்கிறான் வள்ளுவன்...

நிறைநீர நீரவர் கேண்மை; பிறைமதிப்
பின்நீர பேதையார் நட்பு.

அறிவுடையார் நட்பு பிறைச்சந்திரன் வளர்வது போல் நாள்தோறும் வளர்ந்து பெரும் பயன் தரும்..அறிவில்லாதவர்
நட்பு முழுநிலவு பின்னர்த் தேய்வது போல நாள்தோறும்
குறைந்து முடிவில் இல்லாது ஒழியும்.

என் வாழ்க்கையில் பள்ளி, கல்லூரிக் காலங்களிலும்; இப்போது மத்தியம காலத்திலும் தோழிகள் சூழ் உலகாகத்தான் நட்பு இருந்து வந்திருக்கிறது..தோழிகளும், நண்பர்களும்தான் நான் புத்துணர்வோடு எழுதுவதற்குக்
கிரியா ஊக்கிகள்..

கம்பனின் இராமகாதையில் நட்புக்கென்று பிரத்யேகப்
படலங்கள் இருக்கின்றன..கங்கைக்கரையில்
நாவாய் வேட்டுவன் என்கிற ஆயிரம் ஓடங்களுக்குத் தலைவனான வேடர் குலத்தவன் குகன் இராமனைச்
சந்தித்து, அவனோடு பழகி அவனுக்கு நண்பனாகிறான்.
இராமனை கங்கையின் மறுகரையில் கொண்டுச் சேர்க்கிறான்..இராமனைப் பிரிய மனமில்லாமல்
மனம் கலங்குகிறான்..

துன்பு உளது எனின் அன்றோ சுகம் உளது அன்றிப்
பின்பு உளது இடை மன்னும் பிரிவு உளது என உன்னேல்
முன்பு உளெம் ஒரு நால்வேம் முடிவு உளது என உன்னா
அன்பு உள இனி நாம் ஓர் ஐவர்கள் உளர் ஆனோம்..

அயோத்தியா காண்டம்...குகப் படலம்.

துன்பம் உள்ளதென்றால் சுகமும் உள்ளது. இப்போது இணைந்திருப்பதற்கும், வனவாசத்திற்குப் பின் இணந்திருக்கப்போவதற்கும் இடைப்பட்டதான பிரிவு என்னும் துன்பம் உள்ளதே என்று எண்ணாதே..உன்னைக் கண்டு தோழமைக் கொள்வதற்கு முன்னே உடன் பிறந்தவர்களாக நாங்கள் நால்வர் இருந்தோம். இப்போது உன்னோடு சேர்ந்து நாம் ஐவராகிவிட்டோம் என்றான் இராமன்...

நண்பனுக்காக, செஞ்சோற்றுக்கடன் கழித்து தன் உயிரையே
ஈந்தவன் கர்ணன்..துரியோதனனோடு சேர்ந்த கூடாநட்பு என்றாலும் அந்த நட்புக்கு வரலாற்றில் ஒரு சிறப்பான இடமிருக்கிறது..கண்ணனுக்கும், குசேலனுக்கும் இடையேயான நட்பு. சீஸருக்கும், மார்க் ஆண்டனிக்கும் இடையே இருந்த நட்பு..வாழவைத்த நட்பு, துரோகம் செய்த நட்பு என்று வரலாற்றின் பக்கங்கள் நட்பால்
நிரப்பப்பட்டிருக்கின்றன..:)
See More
 
:
 
 
 
 
 

No comments:

Post a Comment