Monday, December 29, 2014

பிரிவு என்கிற விஷயத்தை, ஒரு பதிவில் சொல்லிவிடமுடியாது..ஆதலால் இன்றும் அதே தலைப்பை
எடுத்துக் கொள்கிறேன்...ஆனால் உள்ளர்த்தம் மாறுபடும்..
காதலர் பிரிவு என்கிற கோணத்தில் இன்றைய பதிவை
எழுதுகிறேன்..

சங்கநூல்கள் முதல் இன்றைய நவீனப் புதினங்கள் வரை, இந்தத் தலைப்பைப் பற்றி எழுதாதவர்களேயில்லை..
சங்கநூல்களில் எட்டுத்தொகை நூல்கள் முழுக்கவே...
காதல் பாடல்கள்தான்..விதவிதமான காதல்கள்..
விதவிதமான பிரிவுகள்...

திருக்குறளில், இன்பத்துப்பாலுக்கு 250 குறள்கள்
ஒதுக்கியிருக்கிறான் வள்ளுவன்..

இன்னாது இனன் இல் ஊர் வாழ்தல்; அதனினும்
இன்னாது இனியார்ப் பிரிவு..
அன்புள்ளதோழி இல்லாத ஊரில் வாழ்வது வருத்தமானது.
அன்புக் காதலரைப் பிரிந்து வாழ்வது அதைவிடத்
துயரமானது..

இராமன் மரவுரியைத் தரித்துக்கொண்டு, தன் தம்பி
இலக்குவனோடு கானகம் செல்லத் தயாராகிவிட்டான்..
தன் அன்னையான கோசலையிடம் விடை பெற்றுக்
கொண்டு, பின்பு மனைவியான சீதையிடம்
சொல்வதற்காக அவள் இருப்பிடம் வருகிறான்..
கவனியுங்கள்...எல்லோருக்கும் தெரிந்த ஒரு விஷயம்
மனைவிக்குக் கடைசியில்தான் தெரிகிறது..
( You too kamban...?! )..கம்பனின் இராமகாதையில்
பிரிவுத் துயரின் ஆகச் சிறந்த பாடலாக இந்தப்
பாடலைச் சொல்லலாம்...

பரிவு இகந்த மனத்து ஒரு பற்று இலாது
ஒருவுகின்றனை ஊழி அருக்கனும்
எரியும் என்பது யாண்டையது ஈண்டு நின்
பிரிவினும் சுடுமோ பெருங்காடு என்றாள்..

அயோத்தியா காண்டம்...நகர் நீங்கு படலம்.

” இரக்கம் இல்லாமல், கொஞ்சமும் பாசமில்லாமல்
என்னை விட்டுச் செல்ல நினைக்கிறாய்...உன் பிரிவினால்
ஏற்படும் வெப்பத்தின் முன்னே பிரளய காலத்து
நெருப்பும், சூரியனும் என்ன செய்ய முடியும்..? நீ
செல்லப் போகும் பெருங்காடு, உன்னைப் பிரிந்து
இருக்கும் துயரம் சுடுவதைக் காட்டிலும் அதிகமாகச்
சுடுமோ..?” என்றாள் சீதை..

கம்பராமாயணத்தில் நம் வாழ்வின் எல்லா
கேள்விகளுக்கும் விடை கிடைக்கின்றது..நாம் அதைச்
செயல்படுத்துகிறோமா என்பதுதான் கேள்விக்குறி..!

தமிழ்த் திரைப்படங்களில் காதல்பிரிவு பற்றிச்
சொல்லாத கதைகள் குறைவு...அரைத்த மாவையே
விதவிதமாக அரைப்பார்கள்..கிரைண்டரே இல்லாத
உலகுக்குச் சென்று விட வேண்டும் என்று தோன்றும்...:) :)
See More


8 June
 

No comments:

Post a Comment