Monday, December 29, 2014

தன்னுயிர் பிரிவதைப் பார்த்தவரில்லை...என்னுயிர் பிரிவதைப் பார்த்து நின்றேன்...” பணம் படைத்தவன்
படத்தில் வரும் பாட்டு...
பிரிவு என்பது அத்தனை வலி தரக்கூடிய விஷயம்..
ஒவ்வொருவரும் தன் வாழ்க்கையில் பிரிவு என்கிற உணர்வை அனுபவித்தேயாக வேண்டும்...!
...
பள்ளியிலும், கல்லூரியிலும் தோழிகளை விட்டுப் பிரிந்தது..
இன்னமும் நினைவேட்டின் பக்கங்களைத் திருப்பிப்
பார்க்கும்போதெல்லாம் ஆழமான பாதிப்பை
ஏற்படுத்துகிறது..கல்லூரி பிரிவு உபசாரவிழாவில்.
தோழிகள் மாய்ந்து, மாய்ந்து ஆட்டோக்ராப் புத்தகத்தில் எழுதினார்கள்..அப்படியெல்லாம் எழுதிய தோழிகள் பலர்
இப்போது எங்கிருக்கிறார்கள் என்றே தெரியவில்லை..
“பூக்களின் கனவில் புயல் வருகின்ற விபரீதம் இப்போதுதான் என் கண்களுக்குத் தெரிந்தது..” என்று தோழி ஸ்ரீமதி
எழுதியிருந்தாள்..நல்லவேளை அவளைக் கண்டுபிடித்துவிட்டேன்..கண்டுபிடித்துக் கொடுத்த
அருமைத்தோழி விமலாவுக்கு நன்றி...! திருமணம் என்பது
பெண்களுக்கு மனமாற்றம், உருமாற்றம்..என்று எல்லாம்
கலந்த ஒட்டுமொத்த மாற்றம்..திருமணத்திற்குப் பிறகு
கவிதை, இலக்கியம் என்று எதையும், யாருடனும்
பகிர்ந்து கொள்ளமுடியாமல் என் பெரும்பாலான
நேரங்களைப் புத்தகம் வாசிப்பதிலும், பத்திரிக்கைகளுக்கு
எழுதுவதிலும் கழித்திருக்கிறேன்..ஃபேஸ்புக் மூலம்
தோழிகளையெல்லாம் கண்டுபிடிக்க முடிந்ததுதான்
என் வாழ்வில் பெரிய திருப்புமுனை..இப்போதுதான்
என்னையே எனக்குப் பிடிக்கிறது...!
ஒரு சாதாரண மனுஷிக்கே பிரிவு இத்தனை வேதனை
கொடுக்கும் என்றால், நாடாளப்போகிற மன்னனுக்கு
எத்துணை வேதனை இருக்கும்...?!
அயோத்தி நாட்டு இளவரசன், முடிசூட்டிக் கொள்ளாமல்
வனவாசம் போகப்போகிறான் என்கிற செய்தியைக்
கேட்டவுடன் அந்த நாட்டு மக்கள் மட்டுமல்ல..பறப்பன...ஊர்வன,,செடியில் மலர்வன...என்று எல்லா ஜீவராசிகளும் அவன் பிரிவைப் பொறுக்க
மாட்டாது அழுகிறதாம்...உருகி உருகி எழுதி நம்மையும்
அந்தப் பிரிவுத்துயர் தொற்றிக் கொள்ளுமாறு
செய்துவிடுகிறான் கம்பன்..
ஆவும் அழுதன அதன் கன்று அழுத அன்று அலர்ந்த
பூவும் அழுத புனல் புள் அழுத கள் ஒழுகும்
காவும் அழுத களிறு அழுத கால் வயப் போர்
மாவும் அழுத அம் மன்னவனை மானவே.
அயோத்தியா காண்டம்....நகர் நீங்கு படலம்.
அயோத்தி நகரத்துப் பசுக்கள் அழுதன; பசுங்கன்றுகள்
அழுதன; அன்று மலர்ந்த மலர்கள் அழுதன; நீரில் வாழும் பறவைகள் அழுதன; தேன் பொழியும் சோலைகள் அழுதன;
யானைகள் அழுதன; போர்க்களத்துக்குப் பொருந்திய
குதிரைகள் அழுதன...
நின்றும், இருந்தும், கிடந்தும் என்று எல்லா இடங்களிலும்
நீக்கமற நிறைந்திருக்கும் இறைத்தத்துவம்; கம்பரசத்தில்
வழி நெடுகக் குவிந்திருக்கிறது..இந்த வாய்ப்பை
விட்டுவிட்டால் இனியொரு வாய்ப்பு எப்போது நமக்குக் கிடைக்கும்...
See More
 

No comments:

Post a Comment