Monday, December 29, 2014

பொதுவாக நகர்ப்புறச்சாலைகளில்,தெருக்களில் யார் நடந்து போகிறார்கள் என்று அத்தனை உன்னிப்பாக நாம் கவனிப்பதில்லை...கிராமங்களில் நிலைமையே வேறு..தெருவை யார் கடந்து சென்றாலும், எந்த வீட்டுக்குப் போகிறார்கள் என்கிற விபரமெல்லாம் விரல்நுனியில் வைத்திருப்பார்கள்...கிராமத்தான் என்று நாம் கிண்டலடிப்போம்..ஆனால் அவர்களின் நுட்பமான அறிவு நமக்குக் கிடையாது..
மிதிலைநகரத்துத் தெருக்களில் இரண்டு இளைஞர்கள் மரவுரி தரித்து, முனிவரொருவர் கூட வர நடந்து செல்கிறார்கள்..அவர்கள் சகோதரர்களாக இருப்பார்களோ,... சிறிது உயரமாக இருப்பவன்..அண்ணனோ..இவர்கள் யார், எங்கிருந்து வருகிறார்கள்..அரசகுலமோ, அப்படியானால் எந்த வம்சம்..சூரிய வம்சமா...சந்திர வம்சமா..கூடிக்கூடிப் பேசிக்கொள்கிறார்கள்...ஒவ்வொருவரும் என்ன நினைக்கிறார்கள்..வார்த்தைப்பந்தல் போடுகிறான் கம்பன்..
தயரதன் புதல்வன் என்பார்; தாமரைக்கண்ணன் என்பார்;
புயல் இவன் மேனி என்பார்; பூவையே பொருவும் என்பார்;
மயல் உடைத்து உலகம் என்பார்; மானிடன் அல்லன் என்பார்;
கயல்பொரு கடலுள் வைகும் கடவுளே காணும் என்பார்..
பாலகாண்டம்..மிதிலைப்படலம்.
கடைசிவரிக்கு விரிவாகப் பொருள் சொல்கிறேன்..
வைணவர்கள் தம்வாழ்நாளில் தரிசிக்க வேண்டிய மிக முக்கியமான விண்ணகரங்களை(பெருமாள் கோவில்கள்) நூற்றியெட்டு திவ்யதேசங்கள் என்பார்கள்..அதில் நூற்றியாறு இந்த பூலோகத்தில்..அதுவும் பரத கண்டத்தில்தான் இருக்கின்றன..மீதி இரண்டு..சூட்சும உலகத்தில்..திருப்பாற்கடல் மற்றும் திருப்பரமபதம்..பாற்கடல் பரந்தாமனின் வசிப்பிடத்தைக் குறிக்கிறது..பரமபதம் சரணாகதித் தத்துவத்தைக் குறிக்கிறது..சரி..பாற்கடல் எப்படியிருக்குமென்று நமக்கு எப்படித் தெரியும்..? கம்பனிடத்தில் நாம் கேள்வி கேட்க மாட்டோமா...?!
கம்பன் சோழநாட்டுக்கவி...கெட்டிக்காரத்தனம் கூடவே பிறந்த குணம்..கடல்னு சொன்னால் அங்கே கயல்மீன்கள் துள்ளி விளையாடும்..அது வங்கக்கடலாயிருந்தாலென்ன...பாற்கடலாயிருந்தாலென்ன..எல்லாக்கடலும் ஒன்றுதான் கம்பனுக்கு...
அப்படிப்போடு..கம்பன் கிட்டேயே லாஜிக் பத்தி கேள்வி கேக்கறயா நீ....

No comments:

Post a Comment