Tuesday, March 29, 2016


பைந்தமிழ்ப் பேயார்… ( 5 )

 

காரைக்காலம்மை திருவாலங்காட்டில் கயிலைக்காட்சி கண்டுகளித்தவுடன், பாடிய திருப்பதிகங்கள் திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகங்கள் என்று வழங்கப்படுகின்றன…

 

“ கொங்கை திரங்கி நரம்பெழுந்து குண்டுகண் வெண்பற் குழிவயிற்றுப்

பங்கி சிவந்திரு பற்கள் நீண்டு பரடுயர் நீள்கணைக் காலோர்பெண்பேய்

தங்கி யலறி யுலறுகாட்டில் தாழ்சடை யெட்டுத் திசையும்வீசி

அங்கங் குளிர்ந்தனல் ஆடுமெங்கள் அப்ப னிடந்திரு ஆலங்காடே…”

 

“ மார்பகங்கள் சுருங்கி உடல் மெலிவடைந்ததால் நரம்புகள் எழுந்து தோன்ற,  கண்கள் பிதுங்கி பற்கள் வெளியே தெரிய, குழியான வயிற்றையும், சிவந்த தலைமுடியினையும், வாயின் முன்புறம் இரண்டு கோரைப்பற்களையும் கொண்டு, காட்டில் இருக்கும் நீண்ட காலையுடைய பெண்பேய் தங்கியிருந்து ஒலியெழுப்பும் வறண்ட மயானத்தில்; தாழ்ந்த சடையினை உலகின் எட்டுத் திசைகளிலும் வீசி, செருப்பில் நடனமிடும் எங்கள் தந்தையாகிய இறைவன் இருக்குமிடம் திருவாலங்காடாகும்…”

 

காரைக்காலம்மை இறைவனிடம் வேண்டி பெற்றுக்கொண்ட பேய்த்தோற்றத்தை முதல் பதிகத்திலேயே நமக்கு அறிமுகம் செய்து வைக்கிறாள்… இதே உடம்போடு அவள் நடமாடியிருக்கிறாள்.. பதிகம் பாடியிருக்கிறாள்…. இறைவனின் திருவிளையாடல்தான் என்னே….?!

 

காரைக்காலம்மை அற்புதத்திருவந்தாதி போலவே, திருவிரட்டை மணிமாலையையும் அந்தாதித் தொடையில் பாடியிருக்கிறாள்… வெண்பாவும், ஆசிரியப்பாவும் விரவி வருகின்றன இந்த இருபது பாடல்களிலும்… ஈசனே மேம்பட்ட தெய்வம் என்ற அவளுடைய நம்பிக்கையை அடியார்களிடம் மெய்ப்பித்து, அவர்களையும் சிவவழிபாட்டில் ஈடுபடச்செய்கிறது இந்தப் பதிகங்கள்…..

 

“ கிளர்ந்துந்து வெந்துயர் வந்தடும் போதஞ்சி நெஞ்சமென்பாய்

தளர்ந்திங் கிருத்தல் தவிர்திகண் டாய்தள ராதுவந்தி

வளர்ந்துந்து கங்கையும் வானத் திடைவளர் கோட்டுவெள்ளை

இளந்திங் களும்எருக் கும்இருக் குஞ்சென்னி ஈசனுக்கே…. “

 

“ மனமே… தினமும் துன்பங்கள் வருகிறபோது, எலும்பு வடிவத்தோடு இவ்வுலகிலிருந்து துன்பத்தை அனுபவிக்காமல், சடைமுடியில் கங்கையினையும், பிறைச்சந்திரனையும், எருக்கமலர்களையும் சூடிய ஈசனை வழிபட்டால் பிறவிகளை ஒழித்து வீடுபேறு அடையலாம்… “

 

தான் கொண்ட சமயத்தின் மீது மாறாப்பற்று கொண்டு, அவனருளாலே அவன் தாள் பணிந்து, அழகுவடிவம் ஒழித்து, பேயுருக்கொண்டு, பைந்தமிழ் பாடிப் பரவிய காரைக்காலம்மைக்கு; அவள் பிறந்த ஊரான காரைக்காலில் சிறப்பான ஆலயம் உண்டு… அவள் ஈசனிடமிருந்து பெற்ற மாங்கனி நிகழ்ச்சியை நினைவூட்டும் விதமாக, வருடந்தோறும் ஆனி மாதத்தில் மாங்கனித் திருவிழா காரைக்காலில் நடைபெறுகிறது….

 

பிறவாமை வேண்டும் என்று பாடிய காரைக்காலம்மைக்கு திருவாலங்காட்டில் வீடுபேறு கிடைத்தது….

 

சைவ சமயத்தைப் பரத கண்டமெங்கும் பரப்ப அவள் போட்ட விதை, இன்று உலகெங்கும் விருட்சமாய் வளர்ந்து வியாபிக்கிறது..

 

“ சீராளன் கங்கை மணவாளன் செம்மேனிப்

பேராளன் வானோர் பிரான்…”

 

நிறைந்தது….

 

 

No comments:

Post a Comment