Wednesday, March 16, 2016


பைந்தமிழ்ப் பேயார்…. ( 2 )

 

புனிதவதியை விட்டுப் பிரிய நினைத்த பரமதத்தன், கடல் வாணிகம் செய்து பொருளீட்டப்போவதாகக் கூறி மரக்கலம் ஏறிச் சென்றான்…. பாண்டிய நாட்டிலுள்ள ஒரு துறைமுகத்தை அடைந்து, அங்கேயே வாழ்வை அமைத்துக் கொண்டான்… அவ்வூரில் ஒரு வணிகனின் மகளை பரமதத்தன் மணம் செய்து கொண்டான்.. அவனுக்குப் பெண்குழந்தையொன்று பிறந்தது…. அக்குழந்தைக்குத் தன் முதல்மனைவியான புனிதவதியின் பெயரையே வைத்தான்….

 

பரமதத்தன் பாண்டிநாட்டில் வாழ்ந்து வருவதையறிந்த புனிதவதியின் உறவினர்கள், புனிதவதியை அவள் கணவனிடம் சேர்க்கும் பொருட்டு, அவளை அழைத்துக் கொண்டு பாண்டிநாடு வந்தடைந்தனர்.. பரமதத்தனின் இல்லம் சேர்ந்தபோது, பரமதத்தன் தன் இரண்டாம் மனைவி, குழந்தையோடு புனிதவதியின் பாதங்களைப் பணிந்து வணங்கினான்….கணவன் தன்னை வணங்குவதைக் கண்டு புனிதவதி அச்சமடைந்தாள்…. உறவினர்கள் பரமதத்தனிடம், “ ஏன் உன் மனைவியை வணங்கினாய் …? “ எனக் கேட்டனர்…

 

அதற்குப் பரமதத்தன், “ இவள் மானிடப் பெண்ணல்ல… தெய்வப்பெண்… அதனால்தான் அவளை விட்டு விலகினேன்… அவளது பாதங்களைப் பணிகிறேன்… நீங்களும் அவளை வணங்குங்கள்…” என்று கூறினான்… இதைக்கேட்ட உறவினர்கள் “ ஈதென்ன மாயமென்று “ திகைத்தனர்…. கணவன் தன்னை வணங்குவதைக் கண்ட புனிதவதி, எம்பெருமானை மனமுருகி வேண்டி, “ எழில் நிறைந்த என்னுடைய உடல்வனப்பை நீக்கி, உன்னையே வணங்கி நிற்கும் பேய்வடிவம் ( எலும்பும், தோலுமான ஒரு உருவம் ) தந்தருளும்…” எனக் கேட்டாள்…. அவள் வேண்டிய அக்கணத்திலேயே, அழகிய உருவம் நீங்கப்பெற்று, பேய்வடிவம் பெற்றாள்….

 

“ ஊனடை வனப்பை எல்லாம் உதறிஎன் புடம்பேயாக

வானமும் மண்ணும் எல்லாம் வணங்குபேய் வடிவம் ஆனார்….”

சேக்கிழார்…. பெரிய புராணம்….

இறையருளால் பதிகம் பாடும் ஆற்றல் பெற்றாள்… காரைக்காலம்மை என்று அன்றுமுதல் அழைக்கப்பட்டாள்….

 

கயிலையங்கிரியை பார்க்க ஆவல் கொண்டு கயிலை யாத்திரை சென்றாள்… கயிலைமலை மேல் காலால் நடந்து செல்வதைத் தவிர்த்து, தலையால் நடந்து சென்றாள்…( இது எப்படிச் சாத்தியம் என்றே எனக்குப் புரியவில்லை..! ) அறிவியலுக்கு அப்பாற்பட்ட நிகழ்வாக நான் இதைப் புரிந்து கொள்ள முயல்கிறேன்….! காரைக்காலம்மை தலையினால் நடந்து வருவது கண்டு அன்னை உமையவள் ஈசனிடம், “ கயிலைமலை மீது எலும்பு உருவம் கொண்டு, தலையினால் நடந்து வருவது யாரெனக்” கேட்டாள்…. இதனைக் கேட்ட எம்பெருமான், “ என்னை மிக விருப்பமுடன் வழிபடும் அம்மை இவள்…” என்று கூறி, “ அம்மையே…! “ என்று புனிதவதியை அழைத்தான்… அம்மையும், “ அப்பா “ என அரற்றி, அவனருளாலே அவன் தாள் பணிந்தாள்…

 

“ அம்மையே என்னும் செம்மை ஒருமொழி

உலகம் எல்லாம உய்யவே அருளிச் செய்தார்…”

சேக்கிழார்… பெரிய புராணம்…

“ அம்மையே… நீ வேண்டுவது என்ன.. சொல்வாயாக…” என்று கேட்டான் அம்மையப்பன்…

“ பிறவாமை வேண்டும்; மீண்டும் பிறப்புண்டேல் உன்னை என்றும்

மறவாமை வேண்டும் இன்னும் வேண்டும்நான் மகிழ்ந்து பாடி

அறவா நீ ஆடும்போது உன்னடியின் கீழ் இருக்க”..என்றார்…”

சேக்கிழார்…. பெரிய புராணம்…

 

அம்மையின் விருப்பத்தைக் கேட்டருளிய ஈசன், “ தென்திசையில் திருவாலங்காட்டுத்தலத்தில் நான் கயிலைக்காட்சி கொடுக்கிறேன்… அதனைக் கண்டு மகிழ்ச்சியடைந்து, என்னைப் பாடிக் கொண்டிருப்பாயாக…” என்று அம்மைக்கு அருள் புரிந்தான் ஆலங்காடன்…!

 

“ நீடுவாழ் பழன மூதூர் நிலவிய ஆலங்காட்டில்

ஆடுமா நடமும் நீ கண்டு ஆனந்தம் சேர்ந்து எப்போதும்

பாடுவாய் நம்மை” என்றான் பரவுவார் பற்றாய் நின்றான்…”

சேக்கிழார்… பெரிய புராணம்…

 

தொடரும்….

 

No comments:

Post a Comment