Tuesday, August 9, 2016


வட இந்தியப் பயணம்…. ( 2 )

 

இருபது வருடங்களுக்கு முன்பு 1996—அக்டோபரில், வைஷ்ணோதேவி கோவிலுக்குப் பாதயாத்திரையாகச் சென்று; எனக்கு “ அம்மா “ பதவி :) கிடைக்கவேண்டுமென்று அன்னையிடம் வேண்டிக்கொண்டேன்… சரியாக ஒருவருடம் கழித்து, 1997—அக்டோபரில், நான் விரும்பிக் கேட்ட பதவி கிடைத்தது… :) அன்னையின் அருட்கொடையல்லவோ என் மகன்… :)

 

வைஷ்ணோதேவிக்கு பாதயாத்திரை, குதிரை யாத்திரை, தவிர ஹெலிகாப்டர் யாத்திரையும் உண்டு… தோழிகள் கவலைப்பட வேண்டியதில்லை… குதிரையோட்டியிடம் சுமார் ஹிந்தியில் பேசிக்கொண்டே வந்தேன்… எங்கே போனாலும் பேட்டி எடுக்கிற புத்தி போகமாட்டேங்கிறது… :) என்ன பண்றது… :)

“ குதிரைக்கு எத்தனை நாள் வேலை…? “

“ மாதத்தில் 15 நாள் வேலை… ஒண்ணு விட்டு ஒருநாள் குதிரைக்கு ஓய்வு…”

“ இந்தக் குதிரையை எத்தனை ரூபாய் குடுத்து வாங்கினாய்…? “

“ ஒரு லட்சம் ஆகிறது…”

அழகழகான மணிகள் கோர்த்த மாலையைப் பப்லு கழுத்தில் அணிந்து கொண்டிருந்தது…. நடக்கும்போது, மணிகள் அசைந்தொலிக்கின்றன… பிடரிமயிரைத் தடவிக்கொடுத்து, பப்லு என்று கூப்பிட்டால் திரும்பிப் பார்த்துக் கனைக்கிறது… :) வாழ்நாள் முழுக்கப் போர்த்தொழில் செய்த நம் மூதாதையரை நினைத்துக் கொண்டேன்… இந்த அஸ்வத்தை நம்பியல்லவா அவர்கள் வாழ்க்கை இருந்திருக்கிறது…. மனிதனைச் சுமந்தே பழக்கப்பட்ட அதன் முதுகு…. அரசர்கள் தங்கள் சேமிப்பின் பெரும்பகுதியைக் குதிரைகள் வாங்குவதில்தான் செலவழித்திருக்கிறார்கள்… குதிரை எல்லோருக்கும் பிடித்தமான அழகான விலங்கு.. :)

 

மூன்றரைமணிநேரப் பிரயாணத்திற்குப் பிறகு, ஒரிடத்தில் இறக்கி விடப்பட்டோம்… அங்கிருந்து மேலும் நான்கு கி.மீ நடக்க வேண்டியிருந்தது….பெரிய க்யூ… நிஜத்தில் க்யூவில் மெதுவாக ஊர்ந்து செல்வது, பெருத்த ஆயாசமாக இருக்கிறது.. ஒரு கட்டத்தில், “ என்னடா இது.. இங்கு வந்து மாட்டிக்கொண்டோமே..”.. என்று சலிப்பு வருகிறது… இருபது வருடங்களுக்கு முன்பு நான் பார்த்த வைஷ்ணோதேவி கோவில் அல்ல இது…. நிறைய மாற்றங்கள்….ஏகப்பட்ட கடைகள், தங்கும் விடுதிகள் என்று அந்த இடமே அடையாளம் தெரியாமல் மாறிவிட்டது…. நடுநிசி 12 மணிக்கு வரிசையில் நிற்க ஆரம்பித்த நானும், வருணும் அம்பாளைத் தரிசிக்கும்போது  இரண்டு மணிக்கு மேலாகிவிட்டது…. ஒரு குகைக்குள் மூன்று சக்திகள் மேருவடிவில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கின்றன…  ஜகத்குரு ஆதிசங்கரர்  வைஷ்ணோதேவியைப் பிரதிஷ்டை செய்ததாக வரலாறு… திரும்பி வரும் வழியில் பெரிய உண்டியல் இருந்தது…. நான் காணிக்கை செலுத்தினேன்…தோழிகள் கல்பனா, சாவித்திரி அக்கா மற்றும் கீழ்வீட்டு கமலாமாமி காணிக்கை செலுத்த என்னிடம் பணம் கொடுத்திருந்தனர்… அதையும் மறக்காமல் எடுத்து உண்டியலில் போட்டேன்…. ஐம்பது படிகள் இறங்கி வந்தால் மறுபடியும் நீண்ட வரிசை… பிரசாத வரிசை… அம்பாள் பிரசாதமாக சிறிது இனிப்பு மிட்டாயும். அம்பாள் உருவம் பொறித்த நாணயமும் கொடுத்தார்கள்…

 

ஒரிடத்தில் செருப்புகளை வைத்துவிட்டுச் சென்றோம்… அந்த இடத்திற்கு வந்து, செருப்பைப் போட்டுக்கொண்டு, குதிரைகள் நிற்குமிடத்திற்கு நாங்கள் வந்தபோது, விடியற்காலை 3.30 மணி… திரும்பிச் செல்வதற்குத் தலா 1000 ரூபாய் குதிரைக்கு… மறுபடியும் குதித்துக்கொண்டு குதிரைப்பயணம்… :) இறங்குவதற்கு இரண்டரை மணிநேரம் ஆனது.. இறங்கி அங்கிருந்து ஒரு ஆட்டோ பிடித்து, ஹோட்டலுக்கு வந்தோம்…  வந்து பார்த்தால், பாதயாத்திரையாகச் சென்ற என்கணவர் எங்களுக்கு முன்பாகவே வந்து தூங்கிக் கொண்டிருந்தார்… :) படுத்ததுதான் தெரியும் உடம்பு பூராவும் அடிச்சுப்போட்ட வலி….பத்துமணிக்கு எழுந்து, கீழேயுள்ள ரெஸ்ட்டாரென்டில் காலையுணவு சாப்பிட்டோம்… ஞாயிறு மாலை 3 மணிக்குச் சாப்பிட்டது… இரவு பிரயாணத்தின் போது தண்ணீரும், பழரசமும்தான்… அதன்பிறகு, திங்கள் காலை பத்துமணிக்குத்தான் திட உணவு சாப்பிட்டேன்… சர்க்கரை நோயுள்ள எனக்கு இது எப்படிச் சாத்தியமானது என்பது அதிசயந்தான்…! காலையுணவாக மசால்தோசை கிடைத்தது…. நன்றாகவே இருந்தது….சட்னி பரவாயில்லை… வடக்கத்தியர்களுக்குச் சாம்பார் பக்குவம் தெரியாது… அதனால் குறை சொல்லக்கூடாது… மறுபடியும் ஒரு தூக்கம்… அப்படியொரு அசதி எங்களுக்கு…

 

மாலை நான்கு மணிக்கு எழுந்து, குளித்துவிட்டு, கத்ராவின் மார்க்கெட் இருக்குமிடத்திற்குச் சென்றோம்… கணேஷ் கோவில் வாசலிலேயே செருப்பை மறந்து வைத்துவிட்டு வந்துவிட்டார்… செருப்பில்லாமல் 14 கி.மீ எப்படி நடந்து வந்தார் என்று எனக்கே ஒரே ஆச்சரியம்… கத்ரா பஜாரில் கணேஷிக்கு செருப்பு வாங்கினோம்… அங்கு ஒரு பஞ்சாபி ஹோட்டலில் சாப்பிட்டோம்…மறுநாள் ஜம்மு சென்று, அங்கிருந்து தில்லி, தில்லியிலிருந்து டேராடூன் செல்லவேண்டும்… செக்—இன் செய்தாக வேண்டும்… கத்ராவில் ஒரு கம்ப்யூட்டர் சென்டரில் அமர்ந்து செக்—இன் செய்து, கையோடு ப்ரின்ட் அவுட்டும் எடுத்து வைத்துக்கொண்டோம்…

 

கத்ராவில் இருந்த இரண்டு நாட்களும் ஏர்செல் நெட்ஒர்க் கிடைக்கவேயில்லை… ஹோட்டல் வைஃபை மூலம்தான் தோழிகளோடு நான் வாட்சப்பில் பேசினேன்…தீவிரவாதிகள் நடமாட்டம் உள்ள இடம் என்பதால், எல்லா இடங்களிலும் கம்ப்யூட்டர் சென்டர் உட்பட நம்முடைய ஐ.டி. கேட்கிறார்கள்… அங்கேயே ஒரு டாக்ஸி ஓட்டுநரிடம், எங்களை நவதுர்கா கோவிலுக்கு அழைத்துச் செல்ல முடியுமா என்று கேட்டேன்.. கத்ராவிலிருந்து 20 கி.மீ தூரம் நவதுர்கா ஆலயம்… டாக்ஸி கட்டணம்     700 ரூபாய்.. ஷிவ்கோட்டி கிட்டத்தட்ட 100 கி.மீ தூரம்… தவிர எங்களுக்கு நேரமுமில்லை… மறுநாள் காலை ஜம்முவுக்குக் கிளம்பியாக வேண்டுமே… நவதுர்கா ஒன்பது சக்திகள் இருக்குமிடம்… சின்னச்சின்ன குகைகளுக்குள் இருக்கின்றன... மலைப்பாதையில் பயணம்…  இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதால்  சாலைகள் நேர்த்தியாக இருக்கின்றன… அதே டாக்ஸி ஓட்டுநரிடம், மறுநாள் காலை 9.30 மணிக்கு வந்து, எங்களை ஜம்முவுக்கு அழைத்துப் போகும்படிச் சொன்னேன்….இரவு ஏழுமணிக்குக்கூட சூரியன் ஜகஜ்ஜோதியாகச் சுட்டெரிக்கிறது…

 

 

தொடரும்….

 

 

 

 

 

No comments:

Post a Comment