Monday, August 22, 2016


வட இந்தியப் பயணம்…. ( 5 )

 

உத்தராகண்ட் மாநிலம் சுற்றுலாப் பயணிகளைத்தான் நம்பியிருக்கிறது.. ஆனாலும், யாத்திரிகளின் நிலைமை பரிதாபம்தான்… கங்கையின் எந்தப் படித்துறையிலும்; பெண்கள் உடை மாற்றுவதற்கான அறைகள், தடுப்பு வசதிகள் எதுவுமில்லை… கழிப்பறை வசதிகள் கிடையாது…. உடை மாற்றுவதற்குள் மண்டை காய்ந்து போகிறது… நான் லக்ஷ்மண் ஜூலா படித்துறையில் ஸ்நானம் செய்துவிட்டு, உடை மாற்றிக்கொள்ள இடம் தேடினேன்… அங்கே ஒரு நாலுகால் மண்டபம் தடுப்புச் சுவரின்றி இருந்தது… பெண்கள் நாலைந்து பேர் உடை மாற்றிக்கொண்டிருந்தார்கள்…. நானும் உடை மாற்றிக் கொண்டேன்… “ உனக்கு உடை மாற்றிக்கொள்ள வேறிடம் கிடைக்கவில்லையா…? “ என்று என் கணவர் என்னைத் திட்டினார்… “ ஹோட்டல் அறை இங்கிருந்து ஒன்றரைக் கி.மீ. தூரம்…. அதுவரை நான் ஈரத்துணியோடு வரவேண்டுமா… ? “ என்று நானும் என் பங்குக்குக் கடுப்படித்தேன்… :)

 

லக்ஷ்மண் ஜூலா படித்துறையில் ஸ்நானம் செய்துவிட்டு, அதே வழியாகத் திரும்பிப் போகக்கூடாதாம்… இராம் ஜூலா வழியாகத்தான் போகவேண்டுமாம்…. இரண்டு பாலத்துக்கும் இடைவெளி இரண்டு கி.மீ. தூரம்… நாங்கள் நடக்க ஆரம்பித்தோம்.. காலை மணி 8.30… எல்லாக் கடைகளும் சாத்தியிருந்தன… ஒரேயொரு டீக்கடை திறந்திருந்தது... அந்த டீக்கடையில் டீ குடித்தோம்.. அருமையான மசாலா சாய்…! நம்மூரில் பொரை என்றொரு மொறுமொறு பன் டீக்கடைகளில் கிடைக்கும்… டீயில் தொட்டுக்கொண்டு சாப்பிடுவார்கள்… அதேபோல் நீளவாட்டத்தில் பொரை அந்த டீக்கடையில் கிடைத்தது… ஆளுக்கு இரண்டு வாங்கி, டீயில் தொட்டுச் சாப்பிட்டோம்… அந்தக் காலை வேளையில் அத்தனை சுவையாக இருந்தது அந்த டீயும், பொரையும்…! சிலசமயம் தெருவோரக் கடையில் கூட நமக்கு அதியற்புத அனுபவம் கிடைக்கிறது…. :)

 

போகிற வழியில் *பதஞ்சலி*கடை இருந்தது… எனக்கு சர்க்கரைநோய்க்கான மாத்திரைகள் வாங்கிக் கொண்டேன்… * மது நாஸினி * என்று பெயர் கொண்ட அந்த மாத்திரைகளைக் காலையில் வெறும் வயிற்றில் இரண்டும், இரவு உணவுக்கு முன் இரண்டும் போட்டுக் கொண்டால் சர்க்கரை கட்டுக்குள் இருக்கிறது என்று கேள்விபட்டேன்… அலோபதி மருந்தோடுகூட இதையும் எடுத்துக் கொள்ளலாம்… 140 மாத்திரைகள் அடங்கிய பாக்கெட்டின் விலை 200 ரூபாய்… அங்கிருந்து மீண்டும் ஒரு கி.மீ தூரம் நடைப்பயணம்… இராம் ஜூலா பாலத்திற்கருகில் வந்தபோதுதான் கவனித்தேன்… நான் கையில் வைத்திருந்த ஈரத்துணிகள் அடங்கிய பையைக் காணவில்லை… அந்தப் பையில்தான் களைந்த துணிகளோடு, ஈரத்துணிகளையும் ஒரு பாலித்தீன் கவரில் போட்டு வைத்திருந்தேன்.. எங்கே வைத்தேனென்று யோசித்தேன்… பதஞ்சலி கடையில் வைத்தது நினைவுக்கு வந்தது…

 

அப்பாவையும், பிள்ளையையும் அங்கேயே நிற்கச் சொல்லிவிட்டு, மீண்டும் பின்னோக்கி ஒரு கி.மீ,. தூரம் நடை.. :) பதஞ்சலி கடை வாசலிலேயே கடைப்பெண்மணி நின்று கொண்டிருந்தாள்… “ நீங்கள் பையை வைத்துவிட்டுப் போய்விட்டீர்கள்… இந்த ரிஷிகேஷில் உங்களை எங்கே தேடுவதென்று யோசனையாக இருந்தேன்… நல்லவேளை வந்து விட்டீர்கள்…” என்றாள்… நான் முகமலர அவளுக்கு நன்றி கூறி, பையை எடுத்துக் கொண்டேன்…

 

“ அன்பின் வழியது உயிர்நிலை…” என்கிறது வள்ளுவம்…. திருக்குறளை கடனேயென்று மனப்பாடம் செய்து, விடைத்தாளில் வாந்தியெடுக்காமல்;  நம் வாழ்வின் எல்லாக் காலங்களிலும், எல்லாப் பயணங்களிலும் நம் வழித்துணையாக வருகிற ஒரு தாரக மந்திரம் அது என்பதை நாம் உணரவேண்டும்… மானுடம் உய்வது அன்பென்னும் மூன்றெழுத்தில் தானே… இந்தப் பயணத்தில் அதை முழுமையாக உணர்ந்தேன்….

 

அப்பாவும், பிள்ளையும் நின்று கொண்டிருந்த இடத்திற்கு வந்து சேர்ந்தேன்… என் கையில் பையைப் பார்த்தவுடந்தான் என் பிள்ளைக்குச் சிரிப்பே வந்தது… :) அவனுடைய விலையுயர்ந்த ஜீன்ஸ், சட்டையெல்லாம் அந்தப் பையில்லல்வோ இருந்தது… :) மழைத் தூற ஆரம்பித்தது…. அங்கேயே ரெயின்கோட் விற்றுக் கொண்டிருந்தார்கள்…. பாலித்தீன் கவரில் தைக்கப்பட்ட ரெயின்கோட்… :) விலை 20 ரூபாய்… :) ஆளுக்கொன்று வாங்கி மாட்டிக் கொண்டு இராம் ஜூலா பாலத்தைக் கடந்தோம்..

 

இராம் ஜூலா சாலை முழுக்கக் கடைகள்… பழைய பொருட்களை விற்கும் கடைகள் ஏராளமாயிருந்தன…. எதையும் நாம் வாங்கி விடக்கூடாது… புதியதைப் பழைய சிலைகள் என்று சொல்லி விற்றுவிடுவார்கள்….ஏதோவொரு காளிசிலையைக் கையிலெடுத்துப் பார்த்துக் கொண்டிருந்தேன்.. அது ஐநூறு வருடப் பழமையானதென்று என்னிடம் சொல்லிக் கொண்டிருந்தான் கடைக்காரன்… திருப்பதிகே லட்டா… :) பழனிக்கே பஞ்சாமிர்தமா… :) யார் கிட்ட… :) “ டேய்… நான் கும்மோணம்டா… எங்கிட்டயே அளக்கிறியா…?..” என்றேன் தமிழில்… :) அவனொன்றும் புரியாமல் என்னைப் பார்த்தான்… :) பெரியவருக்கும், சின்னவருக்கும் சிரிப்பை அடக்க முடியவில்லை… :) :)

 

தொடரும்….

No comments:

Post a Comment