Thursday, February 12, 2015


இராமபிரானைப் பிரிந்து, அசோக வனத்தில் தான் படும் துயரங்களையெல்லாம் அநுமனிடம் கொட்டித் தீர்த்தாள் பிராட்டி…

 

“ இந்தச் சிறையிலேயே என்னுயிர் நீங்குமேயானால், மீண்டு வந்து பிறந்து; எம்பெருமானுடைய திருமேனியைத் தழுவி, மகிழும்படியான ஒரு நல்வரத்தைத் தொழுது வேண்டினாள் என்று விளம்புவாய்…”

 

“ அவரைப் பிராயந் தொடங்கி என்றும்

ஆதரித்து எழுந்த என் தடமுலைகள்

துவரைப் பிரானுக்கே சங்கற்பித்துத்

தொழுது வைத்தேன்…”

…கோதை நாச்சியார்…நாச்சியார் திருமொழி…

 

அநுமன் தன் ஆறுதல் மொழிகளால் பிராட்டியைத் தேற்றுகிறான்…

 

“ இவ்விடத்தில் உன்னுயிர் நீங்குமானால், இராமபிரான் மட்டும் எப்படிப் பிழைத்திருப்பான்…? நீ இல்லாமல்

பெருமான் எப்படி முடிசூட்டிக் கொள்வான்…? நீ நினைப்பது எதுவும் மெய்யல்ல…உன்னைச் சிறை வைத்த இராவணனை அழிக்காமல் எப்படி அயோத்தி செல்ல முடியும்..?...”

 

“ பொற்கொடியே…உன் தன்மை இவ்வாறு உள்ளதென்று நான் சொன்ன பின்பும், பொறுமையைக் கடைப்பிடிப்பானோ என் மன்னவன்…?!

“ என்னே நின்னிலை ஈதென்றால்

பின்னே செம்மை பிடிப்பானோ…”

 

” அம்மையே…அவனுடைய கோதண்டம் ஊழித்தீ என உண்ணாதோ… அரக்கர்களின் குருதியாற்றில், அரக்க மகளிரின் கண்ணிலிருந்து பெருகியோடும் கண்ணீராற்றில்; பேய்களும், கழுகுக் கூட்டங்களும் குளிப்பதை நீ காணப்போகிறாய்… நீ இன்னும் ஒருமாத காலம் துன்பத்துடன் இருப்பதாகக் கூறியது வேண்டற் பாலதன்று… யான் விரைவாகச் சென்று, இராமபிரானை காண வேண்டுவதுதான் குறை…ஆண்டகை இனி ஒரு பொழுதும் ஆற்றுமோ…?!...”

 

அநுமனின் அமுதமொழி கேட்டு, பிராட்டி மனத்துயர் ஆற்றினாள்….

“ ஐயனே…யான் ஒரு கிளியை வளர்த்து வந்தேன்…அந்தக் கிளிக்கு யாருடைய பெயரை யான் இடுவேன்..? என்றலும், மாசறு கேகயன் மாது என் அன்னை கைகேயியின் பெயரே அந்தக் கிளியின் பெயராக இருக்கட்டும் என்று ராகவன் அன்பினோடு அந்நாள் சொன்ன மெய்ம்மொழி சொல்லுதி..” என்றாள்…

 

எம்பெருமான் சத்யஸ்வரூபன்… சத்யமூர்த்தி…

புதுக்கோட்டை மாவட்டம், திருமெய்யத்தில் ( திருமயம் ) எழுந்தருளியிருக்கும் எம்பெருமானின் திருநாமம்…மெய்யமால் ஐயன்…!

“ மெய்யானை மெய்ய மலையானைச் சங்கேந்தும்

கையானை கைதொழா கையல்ல கண்டாமே…”

…திருமங்கையாழ்வார்…பெரிய திருமொழி…

 

இவ்வளவு சிறந்த அடையாளங்களை இனிமையாகச் சொல்லி..இனியொன்றும் தெரிவிப்பதற்கு இல்லையென்று, ஆலோசித்து அறிந்தவளான பிராட்டி; தன் துகிலில் பொதிந்து வைத்திருந்த சூடாமணியை ( தலையில் அணிந்து கொள்ளும் இரத்தினத்தால் செய்த ஒர் ஆபரணம்) கைக் கொண்டாள்… சூடாமணி.. தசரதச் சக்கரவர்த்தி தன் மருமகளான சீதாப்பிராட்டிக்கு கல்யாணப்பரிசாக அளித்தது…! ” இது என் கொல் என்னா”  என்று அநுமன் வியந்து போனான்…

 

“ சூடையின் மணி கண்மணி யொப்பது தொன்னாள்

ஆடையின் கண் இருந்தது பேரடையாளம்

நாடி வந்தென தின்னுயிர் நல்கினை நல்லோய்

கோடி யென்று கொடுத்தனள் மெய்ப்புகழ் கொண்டாள்..”

 

உலகில் உண்மையான பெரும்புகழைக் கொண்ட பிராட்டி, “ என்னைத் தேடி வந்து, எனது இனிய உயிரையளித்த உயர்ந்தோனே…சூடை என்னும் இந்த இரத்தினம், என் கண்மணி போன்ற அருமை வாய்ந்தது… வெகு நாட்களாய் என் ஆடையில் முடிந்து வைத்திருந்தது…இராமபிரானுக்கு, இது யாவற்றினும் சிறந்த பெரிய அடையாளமாகும். இதனை நீ கொள்வாயாக…” என்று சொல்லி, சூடாமணியை அநுமனிடம் கொடுத்தாள்…

 

அநுமன் பிராட்டியைத் தொழுது,  சூடாமணியை வாங்கிக் கொண்டு தன்னுடைய ஆடையில் முடிந்து பத்திரப்படுத்திக் கொண்டான்…பிராட்டியைப் பிரிந்து போகவேண்டுமே என்று நினைத்து, பலமுறை அழுது, மும்முறை அவளை வலம் வந்து வணங்கினான்…சித்திரப்பாவை போன்ற பிராட்டி, அநுமனை அன்போடு ஆசிர்வதித்து அவனுக்கு விடையளித்தாள்….

 

“ செற்றவன் தென்னிலங்கை மலங்கத்

தேவர்பிரான் திரு மாமகளைப்

பெற்றவன் என் நெஞ்சகம் கோயில் கொண்ட

பேரருளாளன்…”

…திருமங்கையாழ்வார்…பெரிய திருமொழி…  J

 

 

No comments:

Post a Comment