Tuesday, September 6, 2016


வட இந்தியப் பயணம்…. ( 7 )

 

வியாழக்கிழமை காலையுணவை முடித்துக் கொண்டு, டாக்ஸியில் ஹரித்வாருக்குக் கிளம்பினோம்… ரிஷிகேஷிலிருந்து ஹரித்வார் 30 கி.மீ. தூரம்…பயங்கர ட்ராஃபிக்…நாங்கள் முன்பதிவு செய்த ஹோட்டலுக்குச் செல்ல இரண்டு மணிநேரமானது… பெட்டிகளை வைத்துவிட்டு, அங்கேயே பக்கத்தில் ஒரு தாபாவில் மதிய உணவு உண்டோம்… ஹரித்வார் கோவில்கள் நகரம்… எங்குப் பார்த்தாலும் கோவில்கள்தான்… ரிஷிகேஷ் போலவே இங்கும் நிறைய ஆசிரமங்கள்…. ஹோட்டல் வாசலில் ஒரு ஆட்டோகாரன் நின்று கொண்டிருந்தான்… “ நீங்கள் வந்ததைப் பார்த்தேன்.. ஹரித்வாரைச் சுற்றிக் காட்டுகிறேன்…” என்றான்… அப்பாவியான கிராமத்து இளைஞனாயிருந்தான்… “ பெயரென்ன “ என்று கேட்டேன்… “ உத்தம்பாய்..” என்றான்… “ சரி உத்தம்… நாங்கள் நான்கு மணிக்குத் தயாராக இருக்கிறோம்… நீ வந்து எங்களை அழைத்துக்கொண்டு போ…” என்றேன்…

 

சற்று ஓய்வெடுத்துக்கொண்டு, நான்கு மணிக்கு நாங்கள் வெளியே வந்தோம்… எங்களுக்காகக் காத்துக் கொண்டிருந்தான் உத்தம்…போகிற வழியில், “ லஹிரி மஹா சாயா சமாதி மந்திர் “ என்ற பெயர்ப்பலகையைப் பார்த்தேன்… ஆட்டோவை நிறுத்தச் சொன்னேன்… உள்ளே சென்றோம்… லஹிரி மஹா சாயா… மஹா அவ்தார் பாபாஜியின் பிரதம் சீடர்… ( பாபா படத்தில், ரஜினி, பாபாஜியை இமயமலையில் சந்திப்பதாகக் காட்சி வரும்… :) ) பாபாஜி மற்றும் லஹிரியைப் பற்றி     மிக விரிவாக, பரமஹம்ஸ யோகானாந்தா எழுதியிருக்கும் , “ ஒரு யோகியின் சுயசரிதை “ நூலில் படிக்கலாம்… பரமஹம்ஸ யோகானந்தாவிற்கு லஹிரியும், பாபாஜியும் காட்சி கொடுத்திருக்கிறார்கள்…!

 

லஹிரி மஹா சாயா வங்கத்தைச் சேர்ந்த பிராமணர்… க்ரியா யோகத்தில் திளைத்து, பாபாஜியை குருவாக வரித்தவர்…. ( பாபாஜி இரண்டாயிரம் வருடங்களாக இமயமலையில் சூட்சும ரூபத்திலிருக்கிறார்…! ) லஹிரியின் அஸ்தி, ஹரித்வாரிலிருக்கும் ஆசிரமத்தில் வைக்கப்பட்டிருக்கிறது…….பொதுவாக, மகான்களின் அஸ்திக்கலசத்திற்கு மேல்; ஆவுடையார் வைத்து இலிங்கம் பிரதிஷ்டை செய்வது மரபு… அது போலவே இங்கும் சமாதி ஆலயம் கட்டப்பட்டுள்ளது… அசாதாரணமான அமைதி நிலவுகிறது அந்த ஆசிரமத்தில்….! அங்கேயே இருந்து விடலாமென்று எனக்குத் தோன்றியது…. :) யோகத்திலேயே, க்ரியா யோகம் மிகக் கடினம்…. அத்தனை எளிதாக அதைப் பயில முடியாது… இங்கே, சென்னையில் ஆழ்வார்பேட்டையில் க்ரியா யோக மையமிருக்கிறது… அங்கே சென்று கற்றுக்கொள்ள எனக்குத்தான் இன்னும் வேளை வரவில்லை… :)

 

அடுத்து நாங்கள் சென்றது அர்த்தநாரீஸ்வரர் ஆலயம்…அங்கு எல்லாமே சிறிய சிறிய கோவில்கள்தான்… மகா மிருத்யுஞ்சய் ஆலயத்திற்குச் சென்றோம்… அங்கே பெரிய ருத்ராக்ஷ மரமிருக்கிறது….! ஹரித்வாரில் பெரிய ஆலயமான தக்ஷேஷ்வர் கோவிலுக்குச் சென்றோம்… சதியைத் தகனம் செய்த இடம் இது என்கிறார்கள்…. சிவபெருமான் சதியின் உடலைக் கையில் வைத்திருக்கும் பிரம்மாண்ட சிலை ஆலயத்தின் முகப்பை அலங்கரிக்கிறது…! அங்கே எனக்கு பூஜாரி திரிசூலப் பொட்டு வைத்துவிட்டார்… :) ஏற்கனவே, பகவதியான நான்… திரிசூலப்பொட்டோடு பத்ரகாளியாகி விட்டேன்…. :) ஏழெட்டு ஆலயங்களைத் தரிசனம் செய்துவிட்டு, கங்கா ஆர்த்தி பார்க்கச் சென்றோம்… செம கூட்டம்… கங்கைக்கு ஆர்த்தி செய்யப்பட்டது…. கூட்டம் ஆர்ப்பரித்தது…. கங்கையும் அதை ஆமோதித்தாள்… :)

 

இரவு உணவை பார்சலாக வாங்கிக் கொள்ளலாமென்று முடிவு செய்தோம்… வைஷ்ணவ பண்டார் என்றொரு ஹோட்டல் தென்பட்டது… அப்பாவும், பிள்ளையும் உள்ளே போனார்கள்… நான் ஆட்டோவில் அமர்ந்து உத்தமிடம் பேச்சுக் கொடுத்தேன்… உத்தம் பத்ரிநாத் பக்கத்தில் ஒரு கிராமத்தைச் சேர்ந்தவன்… ஏழாம்வகுப்பு வரை படித்திருப்பதாகச் சொன்னான்… ஹரித்வாரில் ஒரு ஆசிரமத்தில் தங்கியிருப்பதாகச் சொன்னான்… அவனுக்குப் பதினான்கு வயதிருக்கும் போது, அவனுடைய குரு அந்தக் கிராமத்திற்கு வந்தாராம்… மகனைத் தன்னோடு அனுப்பிவைக்கும்படி அவனுடைய பெற்றோர்களிடம் கேட்டாராம்… அவர்களும் உத்தமை, அந்தக் குரு அழைத்துப்போக சம்மதம் கொடுத்து விட்டனர்…. உத்தமுக்கு தற்போது வயது 28… வருடத்திற்கொரு முறை பெற்றோரைப் பார்க்கச் சொந்தக் கிராமத்திற்குச் செல்வானாம்… கைச்செலவிற்கு ஆட்டோ ஓட்டுவதாகச் சொன்னான்… சம்பாதிக்கும் பணத்தில் பெற்றோருக்கும் ஒருபங்கு அனுப்புகிறான்…. ” கல்யாணம் செய்து கொள்ளவில்லையா “  என்று கேட்டேன்….” கல்யாணத்தில் விருப்பமில்லை…பிரம்மச்சாரியாகவே இருக்க விருப்பம்…” என்றான்… இதைச் சொல்லும்போது, அவனுடைய முகத்தைப் பார்த்தேன்… சலனமற்று, மிக அமைதியாக இருந்தது…. ஆசிரமத்தில் கிடைத்த  பயிற்சி போல…! விடுதிக்குக் கொண்டுவந்து விட்டுவிட்டு, மறுநாள் காலை வருவதாகச் சொன்னான் உத்தம்பாய்… நிஜத்திலும் உத்தமமான பையன்…. :)

 

தொடரும்….

 

 

No comments:

Post a Comment