Monday, March 30, 2015


இலங்கேஸ்வரன் கேட்ட கேள்விக்கு அநுமன் அளித்த விடைதான் என்னே…?!

“ நீ சொன்ன அவ்வனைவரும் நான் அல்லேன்.. யாருடைய ஏவலும் நான் பூண்டிலேன்… “ அல்லி அம் கமலமே அனைய செங்கணோர் வில்லி..”…தாமரை மலர் போன்ற சிவந்த கண்களையுடைய ஒப்பற்ற ஒரு வில்வீரனுடைய தூதனாக யான் இலங்கை மேயினேன்…”

 

“ அவன் யார் என்று நீ அறிய வேண்டுவையானால்; முனிவர்களும், அமரரும், மும்மூர்த்திகளும் மற்றும் யார் உளரோ அவர்களும் நினைப்பதற்கு அரியதான காரியங்களைச் செய்து முடிக்க நின்றுளான்..! நீ நினைக்கின்ற எவரும் அவனல்ல…அவன் ஓர் அரசகுமாரன்… வேதமும், அறமும் சொல்லும் மெய்யற மூர்த்தி…மெய்யமால் ஐயன்…!..”

 

” ஆதி, நடு, முடிவு என்னும் நிலைகள் இல்லாமல்; இறப்பு, நிகழ்வு, எதிர்வு என மூன்று காலங்களுக்குள் அடங்காமல் வியாபித்துள்ள பரம்பொருள் அவனே..! பிறவி நோய்க்கு மருந்திவன்.. தன் பொற்பாதம் ஏத்துவார் பிறப்பறுப்பான். தர்ம ஸம்ஸ்தாபனம் என்ற அறம் நிலை நிறுத்த திருவவதாரம் செய்துள்ளான்…”

 

“ அன்னவர்க்கு அடிமை செய்வேன் யான். நாமமும் அநுமன் என்பேன்…வானர சேனைக்குத் தலைவனான வாலி தன்மகன் அங்கதனுடைய தூதன் நான்… சீதாப்பிராட்டியைத் தேடி தனியாகவே யான் இங்கு வந்துள்ளேன்…”

 

“வந்தனன் தனியேன்”… என்று அநுமன் சொன்னதற்குக் காரணம்….

“ இவ்வொருவனாலே இலங்கை இவ்வளவு கேடுற்றதே… இவன் போல் பலர் வந்தால், இலங்கை யாது படுமோ…” என்று இராவணனுக்கு அச்சம் தோன்றுமாறு செய்ய வேண்டும் என்பதற்காக…!

 

இவ்வாறு அநுமன் கூறியதும், இலங்கை வேந்தன் அநுமனை நோக்கி நகைத்தான்…

“ வாலி குமாரன் அனுப்பிய தூதனே… வன் திறல் ஆய வாலி நன்றாக இருக்கிறானா… அவன் அரசாட்சி நன்கு நடைபெறுகிறதா…” என்று கேட்டான்…

 

“ அரக்கனே… பயப்படாதே…வாலி வானுலகம் சேர்ந்து விட்டான்…அஞ்சன மேனியன் எம்பிரானின் அடு கணை ஒன்றால் வாலி துஞ்சினான்… இனி மீளான். இப்போது எங்கள் அரசன் சுக்ரீவன்…” என்றான் மாருதி.

 

“ எந்த நிலைமையில் இராமன் என்பவன் வாலியை அழித்தான்..? இப்போது அந்த இராமன் எங்கேயிருக்கிறான்…?..” என்று வினவினான் இராவணன்…

 

அநுமன் நடந்த நிகழ்வுகளைக் கூறினான். இராம பாணத்தினால் வாலி வீழ்ந்த செய்தியறிந்த இராவணன் மிகுந்த சினமுற்றான்…

“ இங்கு நீ வந்து போர் செய்த காரணம் யாது..? ஆராயாமல் உன்னைக் கொல்ல மாட்டோம்… பயப்படாமல் தெளிவாகக் கூறு…” என்றான் அநுமனிடம்…

 

“ பிராட்டியை நீ சிறையெடுத்து வந்தது சிறிதும் தகாத செயல்…நீ தவம் செய்து பெற்ற அத்துணைப் பயனும் உன்னை விட்டு நீங்குவதாக ஆயிற்றே… அதீத காமத்தால் உனக்கு நீயே வீழ்ச்சியைத் தேடிக் கொண்டிருக்கிறாய்… காமச்செருக்கினால் மதி மயங்கியவர்; கற்புக்கனலில் அழிவார் என்கிற விதியை உன்னால் மீற முடியாது…பிறன் மனைவியை விழைவது, உன்னைப் போன்ற வேந்தன் செய்கிற காரியமா…? பிரமதேவர் பரம்பரையில் வந்த நீ செய்த இந்தச் செயல் அறமாகுமா…?

( பிரமதேவர் குமாரன் புலஸ்திய ரிஷி… புலஸ்திய ரிஷியின் குமாரன் விஸ்வரஸ் ரிஷி… இராவணன் விஸ்வரஸ் முனிவரின் அரக்ககுல மனைவிக்குப் பிறந்தவன்…)

” நீ பாடிய சாம கானத்தில் மயங்கி, சர்வேஸ்வரன் உனக்கருளிய வரன்கள் தவறினாலும் தவறும்… ஆனால்… வேதமூர்த்தி, தயரதராமன், கோதண்டராமன், சீதாராமனின் கணைத் தன் குறியில் தவறும் என்று எண்ணுதல் பொருந்துமோ… ஆகையால்.. உன் உயிர் நிலை பெற்றிருக்க சீதையைக் கொண்டு வந்து இராமபிரானிடம் தருவாய் என்று சொல்லென, சூரியன் மைந்தனான சுக்ரீவன் உனக்குச் சொல்லியனுப்பினான்….” என்று இராவணனுக்கு அறிவுறுத்தினான் அஞ்சனை மைந்தன்…

 

“ பிறந்துளார் பிறவாத பெரும்பதம்

சிறந்துளார் பெருந்தேவர்க்குத் தேவராய்

இறந்துளார் பிறர் யாரும் ராமனை

மறந்துளார் ஆகிலர் வாய்மையால்…”

சுந்தர காண்டம்…. பிணி விடு படலம்…

 

இவ்வுலகில் பிறந்துள்ளவர்களும், மீண்டும் பிறப்பே இல்லாத தேவர்களும், தேவர்க்கும் தேவராகச் சிறந்து விளங்கும் மும்மூர்த்திகளும் இராமபிரானை மறந்தவர் அல்லர்..இஃது உண்மை…!

 

“ எம்பிரானை எந்தை தந்தை தந்தைக்கும்

தம்பிரானை தண் தாமரைக் கண்ணனைக்

கொம்பராவு நுண்ணேரிடை மார்வனை

எம்பிரானைத் தொழாய், மட நெஞ்சமே…!..”

நம்மாழ்வார்…. திருவாய்மொழி….

 

 

 

No comments:

Post a Comment