Thursday, April 9, 2015


விபீஷணனின் அறிவுரையைக் கேட்ட இராவணன்,

“நம்பி… நல்லது உரைத்தாய்… இந்த வானரன் குற்றம் செய்தவனே ஆனாலும், இவனைக் கொல்லல் பழுதே….” என்று கூறினான்…

 

பின் அநுமனை நோக்கி, “ நீ போய் அவ்விராம லக்ஷ்மணரிடம் எம் நோக்கத்தைக் கூறி, விரைவில் அவர்களை இங்கு போருக்கு அழைத்து வருவாய்…” என்று சொல்லி, அங்கிருந்த அரக்கர்களை அழைத்து, “ இந்தக் குரங்கின் தொல்லை வாலை; அடியோடு அற்றுப்போக நெருப்பிட்டு எரித்து, இவனை நம் நகரைச் சுற்றி இழுத்துச் சென்று எல்லை கடக்க விடுமின்கள்..” என்றான்…

 

அந்த நேரத்தில் இந்திரஜித், “ பிரம்மாஸ்திரத்தால் கட்டுண்டு அநுமன் இருக்கும்போது, அவன் உடம்பில் நெருப்பிடுதல் தகாது…” என்று கூறி, தெய்வத்தன்மையுள்ள பிரம்மாஸ்திரம் என்னும் ஆயுதத்தை மந்திர விதிப்படி திரும்ப மீட்டுக் கொண்டான்…

 

அரக்கர்களிடம், “ சிறந்த கயிறுகளைக் கொண்டு, இந்த அநுமனின் தோள்களைப் பிணிமின்…” என்று கூறினான் இந்திரஜித்.. அரக்கர்களும் வலிய கயிறுகளால் அநுமனைக் கட்டி இழுப்பாராயினர்… இலங்கை நகரில் உள்ள வீடுகளில் ஊஞ்சல்கள் நீண்ட தம் கயிறுகள் அற்றன… தேர்களில் கட்டப்பட்டிருந்த கயிறுகள்… குதிரைகளைப் பிணிக்கப் பயன்படும் கயிறுகள்…யானைகளின் கழுத்தில் கட்டப்படும் வல்லிக்கயிறுகள்.. என்று அத்தனை கயிறுகளும் அநுமனைப் பிணிக்க உபயோகப்படுத்தப்பட்டன…

 

“ இராவணன் என்னை வாலிற் கொளுத்திச் சுடச் செய்கின்ற செயல்…இந்த ஊரை நீ சுடு என்று எனக்குச் சொன்ன தெளிவுரையாகும்…” என்று நடுநிலையில் இருந்து, சந்தேகமில்லாமல்    ஊகித்துப் பார்த்து நிரம்ப மகிழ்ச்சியுற்றான் அநுமன்….

 

அரக்கர்கள் அநுமனை அங்குமிங்கும் இழுத்து வருத்த; அவர்களிடமிருந்து விடுவித்துக் கொள்ளும் வழியறிந்தும், ஐயன்…ஆஞ்சநேயன்… ஆத்மஞானமாகிய வித்தையைத் தெரிந்திருந்தும், அறியாதான் போல்; அஞ்ஞானம் என்னும் பொய்யை, மெய்யே நடிக்கின்ற ஒரு யோகி போன்றவனாய்… அவ்வரக்கர்களால் இழுக்கப்பெற்று, அவர்களுடன் செல்வானாயினன்… பிரமஞானிகள் மற்றவர்கள் போல உலகில் உழன்று, திரிந்து வந்தனர் என்பதை இந்தக் கலியுகத்தில் கூட நாம் உணரலாம்…

 

அரக்கர்கள் அநுமனை ஈர்த்துக் கொண்டு; அரண்மனை வாயில்களைக் கடந்து, வெட்டவெளியை அடைந்து, அநுமனைச் சூழ்ந்து நின்று கொண்டு, அநுமனின் நிமிர்ந்து விளங்கும் நீண்ட வாலில் கந்தைத் துணிகளைச் சுற்றி; நெய்யிலும், எண்ணையிலும் முற்றும் தோய்த்து காந்தும் கடும் தீ கொளுத்தினர்….அண்டம் கடி கலங்க ஆர்த்தனர்….

 

அநுமன் உடலில் கட்டப்பட்ட கயிறுகளை இரு பக்கங்களிலும்; இரு கூறாய் அரக்கர்கள் பிடித்துக் கொண்டார்கள்… இராவணனின் ஏவலர்கள்,

“ இலங்கை நகரையும், அசோகவனம் என்னும் சோலையையும் அழியச் செய்தும், அக்ககுமாரன் போன்ற சிறந்த அரக்கவீரர்கள் சிதறி அழியக் கொன்றும், சீதையோடு தனியே பேசியும், நம் அரசனிடத்து அந்த அற்ப மனிதர்களாகிய இராம லக்ஷ்மணர் வலிமையைச் சொல்லவும் வந்த இந்த குரங்கிற்கு உற்ற தண்டனையை, எல்லோரும் வந்து காண வாருங்கள்… வாருங்கள்…” என்று ஒவ்வோரிடத்தும் யாரும் அறியக் கூறினர்…

 

சிலர் ஓடிப்போய் அநுமனுக்கு உற்ற நிலையைப் பிராட்டிக்குச் சொன்னார்கள்…. அது கேட்ட பிராட்டி, உயிர் பதைத்தாள்… வேர்த்தாள்… விம்மினாள்… அழுதாள்… விழுந்தாள்… வெய்து உயிர்த்தாள்…

 

பிராட்டி அக்கினியை நினைத்து, “ எரியே… அநுமன் தாயே அனையக் கருணையான்… தகவேதும் இல்லா நாயே அனைய வல் அரக்கர், அநுமனைத் துன்புறுத்தினால்…. நீ அவனுக்குத் துணை புரிய மாட்டாயா…? நன்மை, தீமை என்பன அனைத்தும் அறிந்த நீ… உலகமனைத்துக்கும் ஒப்பற்ற சாட்சியாக விளங்குபவன் நீ… ஆதலால்… கற்பு அதனில் தூயேன் நான் என்பது உண்மையானால்.. அநுமனை நீ சுடாதே… உன்னைத் தொழுகின்றேன்….” என்று பிராட்டி அக்னிதேவனிடம் பிரார்த்தித்துக் கொண்டாள்….

 

பிராட்டி அக்கினியைத் தொழுதபோது, “ ஒளிர்ந்த வெம்கனல் அவன் உள்ளம் உட்கினான்…” அக்கினிதேவனே மனதில் அச்சம் கொண்டான்… அநுமனின் உடலின் மேலுள்ள உரோமங்கள் குளிர்ச்சியால் புளகித்து, தளிர்த்தன…( மயிர்க் கூச்செறிதல் ) அநுமனின் வால் எலும்பு வரையிலும் குளிர்ச்சியடைந்தது…

 

அக்கினிதேவன் குளிர்ந்ததால்; சத்தியலோகத்தில் வாழும் பிரமதேவனுடைய அம் கை அனலும், அழிவற்ற சூரிய மண்டலமும், வேதியரின் அக்கினிக் குண்டங்களும் குளிர்ச்சியடைந்தன….!

 

“ அன்று நான் பிறந்திலேன்; பிறந்த பின் மறந்திலேன்

நின்றதும் இருந்தும் கிடந்ததும் என் நெஞ்சுளே….!....”

திருமழிசையாழ்வார்…. திருச்சந்த விருத்தம்….

No comments:

Post a Comment