Wednesday, April 15, 2015


எம்பெருமான் ஸ்ரீராமச்சந்திரமூர்த்தி பால் அன்பின் நார் அறாத சிந்தை அநுமன், வெம் தீ தம் வாலினை விழுங்கி நிற்பினும், தன்னைச் சுட்டு வருத்தாது குளிர்ச்சியோடு விளங்கிய தன்மையை; தன் மனத்தால் நன்கு ஆராய்ந்து, உணர்ந்து, ” ஜனகன் பாவை கற்பினால் இயன்றது இது…” என்று தீர்மானித்து மிகவும் களிப்புற்றவனானான்

 

பிராட்டியைத் தேடியலைந்த போது, பார்க்காத இடங்களை; இப்பொழுது அரக்கர்கள் இழுத்துச் செல்லும்போது, இலங்கையின் ஒவ்வோரிடத்தையும் நன்றாய் விளங்கப் பார்த்தான்முன்னம் இராத்திரி கண்டும், காணாதது; இன்று நன்றாய் பார்த்துக் கொள்ளும் தீக்கொளுத்த…. என்று அரக்கர்களே காட்டிக் கொடுத்தது போலாகிவிட்டது…!

 

இப்படி..இலங்கை நகர் முழுக்க இண்டு, இடுக்கு விடாமல் பார்த்துக் கொண்டே நெடுகச் சென்ற அநுமன், “ இனி யான் நீங்க வேண்டிய காலம் இதுவாகும்…” என்று எண்ணினன்…. தன்னை வலிதில் பற்றித் தழுவிய அரக்கர்கள் பிணித்த கயிறுகளோடு, தூண்கள் போலத் தொங்க; விண் மேல் உயர எழும்பினான்அவ்வரக்கர் கூட்டமெல்லாம் கீழே விழுந்தனமுற்றும் அழிந்தன….

அரவுகளாற் சுற்றப்பட்டு வானில் எழுந்து செல்லும் கருடனைப் போல விளங்கினான் அநுமன் என்று கருடத்தாழ்வானை அநுமனுக்கு உவமையாக்குகிறான் கம்பன்…!

அரவின் சுற்றம் பற்றிய கலுழன் என்ன பொலிந்தனன்…..”…!

 

பகைவருடைய நகரை முற்றும் சுட்டெரிப்பதான தொழிலை மேற்கொள்ளப் போகிறேன்அவ்வரக்கர் வாழும் மாளிகைகள் எல்லாம் பற்றிக் கொள்ள எரி மூட்டுவேன்…” என்று தம் மன்னனை, தாமரைமலர்க் கண்ணனை, தயரதன் புதல்வனை, திருத்துழாய் மார்பனைபலமுறை வாழ்த்தித் துதித்து; பொன்மயமான அந்த இலங்கை நகரின் மேலே, போர்த்திறத்தில் சிறந்து விளங்கும் தன் வாலைச் செல்லுமாறு அநுமன் செலுத்தினான்

 

நீர் மிக்க கடல் வரையிலும் விளங்கிய பேர் இலங்கை நகரை; எல்லாப் பக்கங்களின் எல்லை வரையிலும் எரிந்து போக, ஒரு கணத்து எரித்த அந்த அநுமனின் மூரி போர் வால்; பவழம் போன்று செந்நிறமான திருமேனியுடைய எம்பெருமான் பரமேஸ்வரன்மேருமலையாகிய தன் வில் வளைய, தோளால் திரிபுரங்களின் மீது தூண்டிய அம்பு போன்றிருந்தது….! அநுமன் வாலுக்கு முப்புரம் எரித்த அம்பை உவமையாகக் காட்டுகிறான் கவிச்சக்கரவர்த்தி….!

முன்னையிட்ட தீ முப்புரத்திலே

பின்னையிட்ட தீ தென்னிலங்கையில்… “

பட்டினத்தடிகள்….

 

வெள்ளியாலும், பொன்னாலும், பிரகாசிக்கின்ற அழகிய இரத்தினங்களாலும் அமையும்படி; சிற்ப வித்தையில் தேர்ந்த தெய்வச் சிற்பியான விஸ்வகர்மன் தன் கைவன்மையால் முயற்சி செய்து, அருமையாக அமைத்த மாளிகைகள் தோறும் வரிசை வரிசையாக, தாவித் தாவி ஒள் எரி ஓடும் தன் வால் நெருப்பை ஊழி வீழ் காலத்து இடியையொத்த அநுமன் பற்ற வைத்துக் கொண்டு செல்வானாயினான்

 

கருநிறமுள்ள அரக்கர்கள்; எங்கும் நெய்யைப் பொழிந்து செய்யும் வேள்விகளை வேதியர்கள் செய்ய விடாமல் தடுக்கஅதனால் வேள்வித்தீ உண்ணாமல் பசித்திருக்கும் அக்கினிதேவனும், மாருதி வாலை அன்பால் பற்றி, “ உலகெலாம் உண்ணும் காலம் இதுவே..” என்றுணர்ந்து, இலங்கை நகரைக் கடிதின் உண்டான் அக்கினிதேவன்…! பிரளயத் தீயை அநுமன் வாலின் தீக்கு உவமையாக்குகிறான் கம்பநாட்டாழ்வான்…!

 

மாயனார் திரு நன்மார்பும்

மரகத உருவும் தோளும்

தூய தாமரைக் கண்களும்

துவரிதழப் பவள வாயும்

ஆயசீர் முடியும் தேசும்

அடியரோர்க் ககல லாமே…?!....”

தொண்டரடிப்பொடியாழ்வார்திருமாலை….

No comments:

Post a Comment