Monday, September 28, 2015


கும்பகர்ணன் தொடர்ந்து, இராவணனுக்கு அறிவுறுத்தினான்….

“ சான்றோர்கள் செய்யும் செயலை நீ செய்யவில்லை… குலத்திற்குச் சிறுமை செய்தாய்… போகட்டும்… மட்டவிழ் மலர்க்குழலினாள் சீதையை, இத்தனை விபரீத நிகழ்ச்சிகள் விளைந்தபிறகும் விட்டுவிடுவோமேயாகில்; கேவலமாகக் கருதப்படுபவர் ஆவோம்… அந்த மானிடர் நம்மை வெற்றிகொள்ள, அதன் முடிவாக நாம் இறப்போமேயானால், அதுவும் நன்றே….”

 

” தூதன் மூலம் நமது நிலைமை யாவும் அறிந்து, அவர்கள் போருக்கு ஆயத்தமான நிலையில் நாம் பின்வாங்குவது வீரமாகாது….”

தம்பியுடையான் படைக்கஞ்சான் என்ற கூற்றை மெய்ப்பித்தவன் கும்பகர்ணன்….

 

“ மரன்படர் வனத்தொருவனே சிலை வலத்தால்

கரன்படை படுத்தவனை வென்று களைகட்டான்….”

“ மரங்களடர்ந்த காட்டில், இராமபிரான் தனது கோதண்டம் என்னும் வில்லின் வன்மையால்; கரன் முதலான அசுரர்களை அழித்து வெற்றி கொண்டான்…. இனியடுத்து நடக்கப்போகிற செயல்….? அந்த மானிடர்கள் கையால் நமது வன்மை ஒழிதலேயாகும்….”

அரக்கர்குலமே அழியப்போகிறது என்பதை கும்பகர்ணன் முன்னரே யூகித்துவிட்டான்… முக்காலமும் உணரவல்ல தீர்க்கதரிசி…!

 

” மானிடர் வென்றிடுவாரேயானால், தேவர்களும் அவர்களோடு ஒன்று சேர்ந்து நம்மை எதிர்க்கத் துணிவர்… இருவர் பகைமையை நம்மால் சமாளிக்க இயலாது…”

“ ஊறுபடை யூறுவதன் முன்னமொரு நாளே

ஏறுகட லேறிநரா வாநரரை யெல்லாம்

வேறுபெய ராதவகை வேரொடு மடங்க

நூறுவது வேகரும மென்பது நுவன்றான்….”

யுத்த காண்டம்…. இராவணன் மந்திரப்படலம்..

“ மென்மேலும் எழும் சேனை பெருகி நிறைவதன் முன்னரே, ஒரு குறிப்பிட்ட நாளில் கடலைத்தாண்டி; மனிதர்களையும், அவரொடு கூடிவரும் தேவர்கள் என்ற எல்லோரையும், பிற இடங்கட்குச் செல்லாதபடி மடக்கி, வேரொடும் ஒருசேர அழிப்பதே நாம் புரியத்தக்கக் காரியம்….” என்று சொன்னான்….

 

இதைக்கேட்ட இலங்கேஸ்வரன், ” இளையோய்… நீ நன்கு சொல்லினை… நானும் இவ்வாறே கருதினேன்… இனியொன்றும் ஆய்தல் பழுது… பகைவர் அனைவரையும் கொன்றே திரும்புவோம்… வீணைக்கொடியுடைய நம்முடைய சேனைகள் எல்லாம் இப்பொழுதே எழுக….” என்று பணித்தான்….

 

இராவணன் மொழிந்த காலையில், தனயன் இந்திரஜித், தந்தையைப் பார்த்து, “ அரசே… சிறுமானிடரிடம் நீ போய் போர் செய்வதா…? எம்மனோரைப் போன்ற வீரர் பலரிருக்க… நீ யுத்தம் செய்யக் கிளம்புகிறேன் என்கிறாய்… எம் வீரம் மிகவும் நன்றாக இருக்கிறது…?! “ என்று கூறி நகைத்தான்….

இராவணன் மந்திராலோசனையில், விபீஷணனுக்குப் பிறகே, இந்திரஜித் பேசியதாக வான்மீகத்தில் வருகிறது…. கம்பன் முன்கூட்டியே இந்த உரையாடலை அமைத்திருக்கிறான்….

 

“ ஈசனிடமும், பிரமனிடமும் வரங்கள் பலபெற்று, கொடிய ஆயுதங்களைத் தாங்கிப் பலர் இங்கே ஆயத்தமாக நிற்கின்றனர்… ( இந்திரஜித், இந்திரனிடம் பிரம்மாஸ்திரத்தை வரமாகப் பெற்றவன்..) தந்தையைப் போருக்கு அனுப்பிவிட்டு, பிறர் பழிக்குமாறு நானும் உயிர் தரிக்க வேண்டுமா…?...”

 

” மூன்று உலகம் முழுவதும் சினந்து எழுந்த போதும், வெற்றி உனதாக விளையாது ஒழியின், என்னைப் பெற்றும்; பெறாதவனாகக் கருதப்படுவாய்… வானரப்படையை ஒழித்து, இராம இலக்குவரின் சிரங்களை வீழ்த்தி, மலைச் சிகரங்களைப்போலக் கொண்டு வருவதை நீ காண்பாயாக…. இதனால் சீதை மிகுந்த துயரத்தை அடையப் போவதையும் நீ காணுதி….” என்று சூளுரைத்தான்…

 

“ நாடாத மலர்நாடி நாடோறும் நாரணன்றன்

வாடாத மலரடிக்கீழ் வைக்கவே வகுக்கின்று

வீடாடி வீற்றிருத்தல் வினையெற்ற தென்செய்வதோ?

ஊடாடு பனிவாடாய் ! உரைத்தீராய் எனதுடலே….”

நம்மாழ்வார்…. திருவாய்மொழி….

 

 

No comments:

Post a Comment