Monday, September 28, 2015

தமிழின் ஐம்பெரும் காப்பியங்களில்
சீவக சிந்தாமணி, சிலப்பதிகாரம்—இவையிரண்டும் சமண நூல்கள்… மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி—இவை
மூன்றும் பெளத்த நூல்கள்… இதில் வளையாபதியையும், குண்டலகேசியையும் இதுவரை கண்டுபிடிக்க
முடியவில்லை… மீதி மூன்று நூல்களையும்; பனையோலைச் சுவடியில் இருந்தவற்றைத் தொகுத்து,
இப்போதிருக்கின்ற நூல்வடிவத்தில் அச்சிட்ட பெருமை தமிழ்த்தாத்தா உ.வே. சாமிநாதய்யரையேச்
சாரும்.

சிலப்பதிகாரத்தில் சமணசமயக்
கொள்கைகள், அடிநாதமாய் காப்பியத்தோடு ஒட்டி வருகின்றன…

சோழமன்னனும், மாதவியும்,பாண்டியமன்னனும் எந்தச் சமயத்தைச் சார்ந்தவர்கள் என்பதை இளங்கோவடிகள் சுட்டிக்காட்டவில்லை…கோவலனும், கண்ணகியும் சமணசமயத்தைச் சார்ந்தவர்கள் என்பது பல இடங்களில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது…

 மாதவி :
 மாதவி என்கிற பெயருக்கு,குருக்கத்தி கொடி ( ஒருவகை மலர் ) என்று பொருள்… மாதவிப்பந்தல் என்கிற சொல்லை கோதை நாச்சியார், நாச்சியார் திருமொழியில் கையாண்டிருக்கிறாள்…

 தங்களின் பெண் குழந்தைகளுக்கு“ மாதவி ” என்று பெயரிட்டு அழகு பார்த்தது நேற்றைய தமிழ்ச்சமூகம்.. மாதவி என்கிற பெயர்கொண்ட பெண்கள் என் தலைமுறையோடு நின்றுவிட்டதாகவே நினைக்கிறேன்.. என்மகன் படித்த பள்ளியில், பதினைந்து வருடங்களில்; “ மாதவி “ என்று எந்தப் பெண்குழந்தையையும் நான் சந்திக்கவேயில்லை…“ மாதவி “ என்கிற பெண்ணுக்குத் தமிழ் இலக்கியத்தில் மிகப்பெரிய பங்குண்டு என்பதே, இன்றைய இளைய சமூகத்தினருக்குத் தெரியாது.

 தவிர, திரைப்படங்களிலும் மாதவியைப் பற்றிய தவறான கண்ணோட்டங்கள் பரப்பப்பட்டு வந்திருக்கின்றன… குறிப்பாக பூம்புகார்( கதை, வசனம்… மு. கருணாநிதி ) திரைப்படத்தில்; மாதவியின் பாத்திரப்படைப்பு தவறான புரிதலுக்கு ஒரு எடுத்துக்காட்டு… “ காவிரிப் பெண்ணே நீ வாழ்க…. “ பாடலில், “ ஆயிரம் வழிகளில் ஆடவர்
செல்வார்… அதுவே கற்பென்று நம்மிடம் சொல்வார்…” என்று ஒரு வரி வரும்… சிலப்பதிகாரத்தில்,
இப்படியொரு பொருள் வருகின்ற வரியை இளங்கோவடிகள் எழுதவேயில்லை… கோவலனும், மாதவியும்
பாடிய கானல்வரிப் பாட்டின் உட்கருத்தை, ஒருவருக்கொருவர் புரிந்து கொள்ளாமல் போனதால்தான்;
அவர்களுக்கிடையே பிரிவு வந்தது… கானல்வரிப் பாட்டைப் பற்றி நான் விளக்கமாக எழுதப்போகிறேன்…
அப்போது உங்களுக்குப் புரியும்…

மாதவி கணிகையர் குலத்தில் பிறந்திருப்பினும். அவளைத் தேவமகளான
ஊர்வசியின் மரபிலே தோன்றியவள் என்கிறார் இளங்கோவடிகள்…
 ” மலைப்பருஞ் சிறப்பின்
வானவர் மகளிர்
 சிறப்பிற் குன்றாச் செய்கையோடு
பொருந்திய
 பிறப்பிற் குன்றாப் பெருந்தோள்
மடந்தை…”
 சிலப்பதிகாரம்… புகார்க் காண்டம்…
 இந்த வரிகளே, மாதவியின்
பாத்திரப் படைப்பின் உன்னதத்தை நமக்கு உணர்த்துகின்றன…

 அவளுடைய ஐந்தாம் வயதில் ஆடலும், பாடலும் கற்க ஆரம்பித்தாள்.. ஏழு ஆண்டுகள் நன்கு பயின்ற பின்னர், பன்னிரெண்டாம் வயதில் சோழமன்னனின் அரசவையில் அவளுடைய நடன அரங்கேற்றம் நடைபெற்றது…

 ஆடலைக் கண்டு, மகிழ்ந்த சோழவேந்தன், “ திருமாவளவன் “ என்றொரு குறிப்பு வருகிறது… கரிகால்சோழனாக இருக்கலாம் என்பது ஆராய்ச்சியாளர்களின் துணிபு…
 மாதவியின் நடனத்தைக் கண்டு,வியந்து அவளுக்குத் ”  தலைக்கோல் ” ( நடன மாமணி ) என்னும் பட்டத்தையும், ஆயிரத்தெட்டுக்கழஞ்சு பொன்மணிகள் பதிக்கப்பெற்ற பச்சைமாலையையும் பரிசாகக் கொடுத்தான்..

 மாதவியின் தாய் சித்திராபதி, “ இந்த மாலையை விலை கொடுத்து வாங்குவோர், மாதவிக்கு மணமகனாக ஆவார்…” என்று கூறி, ஒரு கூனியின் கையில் அந்த மாலையைக் கொடுத்து, நகரத்து வாலிபர் உலாவரும் பெருந்தெருவில், அம்மாலையை விலைக்கு விற்பவள் போல நிறுத்தினாள்…

 பரிசமாலையைக் கோவலன் விலைகொடுத்து வாங்கி, மாதவியின் மனையை அடைந்தான்… அவளது அழகிலே மயங்கி, தன் மனைவியையும்,வீட்டையும் மறந்தான்..
 “ மணமனை புக்கு மாதவி தன்னொடு
 அணைவுறு மயங்கி வைகலின் அயர்ந்தன
 விடுத லறியா விருப்பினன் ஆயினன்
 வடுநீங்கு சிறப்பின் தன் மனையகம் மறந்தென்… “
 சிலப்பதிகாரம்… புகார்க் காண்டம்….  :) :)

 தொடரும்….
 

No comments:

Post a Comment