Monday, September 28, 2015

சிலப்பதிகார மாதவியைப் பற்றி எழுதுகிறேன் என்று சொல்லியிருந்தேன்... மாதவி பிறந்த குலமான கணிகையர்குலம் பற்றி அறிய, சங்கநூல்கள் சிலவற்றை நான் படிக்க நேர்ந்தது... சிலப்பதிகாரம் தவிர, தொகை நூல்களைப் படித்துக் குறிப்புகள் எடுத்தேன்... படிக்க, படிக்க ஒரே அதிர்ச்சிதான்... இந்தக் கட்டுரையை எழுதும்போது, சொல்லொண்ணாத துக்கம் என்னை ஆட்கொண்டது.. பேதைப்பெண்கள் என்று சொல்லியே, நம்மை ஏமாற்றிப் பிழைத்திருக்கிறது பெரும்பான்மை ஆண்சமூகம்... சங்ககாலத்தில், பெண் தனி மனித சுதந்தரமில்லாமல், அடிமையாகத்தானிருந்திருக்கிறாள்.. இதில் மாற்றுக் கருத்தேயில்லை...
சங்ககாலத்தில் கோவில்களோ அல்லது அதனுடன் இணைந்த தேவரடியார்களோ இல்லை.. கி.பி. நான்காம் நூற்றாண்டில், தமிழகத்தைக் கைப்பற்றி, ஆட்சிபுரிந்த பல்லவர்கள் முதலில் சமணசமயம் சார்ந்தவர்களாக இருந்தார்கள்... மகேந்திரவர்மபல்லவன், திருநாவுக்கரசரால் சைவசமயத்தைத் தழுவப்பெற்றான்... அதன்பிறகுதான், பல்லவர்கள் தமிழகத்தில் கற்றளிகளைக் கட்ட ஆரம்பித்தனர்... பிறகு வந்த சோழர்கள் காலத்தில்தான், தேவரடியார்கள் கோவில்களுடன் இணைந்துவிட்ட அமைப்பாக மாறினர்..
கி.மு. நான்காம் நூற்றாண்டு முதல் கி.பி. மூன்றாம் நூற்றாண்டின் இடைப்பகுதி வரையிலான கால இடைவெளியைச் சங்ககாலம் எனலாம்...
அரசர்கள் மற்றும் ஆண்டைகளின் ( குறுநிலப் பிரபுக்கள் )  பாலியல் வக்கிரங்கள் மற்றும் அக்கிரமங்கள் குறித்துச் சங்கஇலக்கியங்கள் விரிவாகக் கூறுகின்றன... “ ஒருவனுக்கு ஒருத்தி “ என்பது திராவிடக் கலாச்சாரம் என்று முழங்குவதெல்லாம் சுத்த பொய்... “ ஒருத்திக்கு ஒருவன் “ என்பதுதான் சரியான விளக்கம்.. காரணம்.. ஆண் பலதாரமுடையவனாக இருந்திருக்கிறான்... ஆசைநாயகியரின் எண்ணிக்கைக் குறித்துக் கலித்தொகை கூறும் செய்தி, அதிர்ச்சித் தகவலாக உள்ளது..
“ ஓர் ஊர தொக்கு இருந்த நின் பெண்டிர்...”... கலித்தொகை (68)... ஒரு மருதநிலத் தலைவனுக்கு, ஒரு ஊர் முழுக்கவே அவனது காதற் பரத்தையர்கள்தானாம்... !
அரசர்களும், ஆண்டைகளும் பல மனைவியருடன் வாழ்ந்துள்ளனர்... மனைவியர் மட்டுமல்லாது இற்பரத்தையர், காதற் பரத்தையர், கணிகையர் என ஆசைநாயகியர் பலர் இருந்துள்ளனர்... புகார் நகரத்தில், அரசனின் அரண்மனை அமைந்திருந்த பட்டினப்பாக்கத்தில்; அரண்மனையை அடுத்து சாந்திக்கூத்தர், காமக்கிழத்தியர், பதியிலாளர், பரிசம் கொள்வார் என்ற பெயரில் பரத்தையரின் இல்லங்கள் அமைந்திருந்தன...
“காவற் கணிகையர் ஆடற்கூத்தியர்
பூவிலை மடந்தையர் ஏவற்சிலதியர்...”
சிலப்பதிகாரம்.. புகார்க் காண்டம்...
சுட்ட ஓடுகளால் வேயாது, பொற்தகடுகளால் வேயப்பட்ட காவல்மிக்க மனைகளில் அரங்கக்கூத்தியர் வாழ்ந்தனர்... கூத்துகளை நிகழ்த்தி, மன்னர்களை மகிழ்விப்பதே அவர்கள் வேலை..
“ சுடுமண் ஏறா வடு நீங்கு சிறப்பின்
முடியரசு ஒடுங்கும் கடிமனை வாழ்க்கை...”
சிலப்பதிகாரம்.
அரசர்களின் காதற்கணிகையரான இம்மங்கையர்க்கு, மூடுவண்டியும், பல்லக்கும், மணிகள் பதித்த கால்களையுடைய கட்டிலும், சாமரையாகிய கவரியும், பொன்னாலான வெற்றிலைப்பெட்டியும், கூரியமுனை பொருந்திய வாளும் பரிசிலாகக் கொடுத்தனர்... அரசருடன் சேர்ந்து அக்கணிகையர் விளையாடி மகிழ்வதற்கு; விளையாட்டுப் பொழிலும் அமைத்துக் கொடுத்தனர்...
“ வையமும் சிவிகையும் மணிக்கால் அமளியும்
உய்யானத்தின் உறுதுணை மகிழ்ச்சியும்
சாமரைக் கவரியும் தமனிய அடைப்பையும்
கூர்நுனை வாளும் கோமகன் கொடுப்பப்
பெற்ற செல்வம் பிறழா வாழ்க்கை
பொற்றொடி மடந்தையர்....”
சிலப்பதிகாரம்.
பகைவர் மனையோராய்ப் பிடித்து வரப்பட்ட மகளிர், “ கொண்டி மகளிர் “ என்று அழைக்கப்பட்டனர்... இவர்களையல்லாது, பருவம் எய்தாச் சிறுமியருடனும் பாலியல் ரீதியான வல்லுறவு கொண்டுள்ளனர்... படிக்கப் படிக்க கொடுமையாக இருக்கிறது... விதவிதமாகப் பெண்களை அனுபவித்திருக்கிறார்கள்... அடியோடு பெண்சமூகத்தைச் சிதைத்திருக்கிறார்கள்...
சங்க இலக்கியங்கள் கூறும் செய்திகள்; புனைந்துரையாக, மிகையான கூற்றாக இருக்குமோ என்று நான் பலசமயம் கருதியதுண்டு... ஆனால் அரசர்களின் அந்தப்புரங்கள் குறித்து, வரலாற்று ஆவணங்களில் பதிவாகியுள்ள செய்திகள் சங்க இலக்கியங்களின் உண்மைத்தன்மையை உணர்த்துகின்றன...
மதுரையை ஆண்ட திருமலை நாயக்கர் இறந்தபொழுது, அவரது மனைவியர் மற்றும் காமக்கிழத்தியர் இருநூறுபேர் உடன்கட்டை ஏறினர்... இராமநாதபுரம் மன்னன் கிழவன் சேதுபதி இறந்தபோது, நாற்பத்தைந்து பேர் உடன்கட்டை ஏறினர்... தஞ்சை மராட்டிய மன்னர்களின் ஆசைநாயகியர்க்கு திருவையாற்றில், மங்கள விலாசம் “ என்ற பெயரில் மாளிகை அமைக்கப்பட்டது...
பெண்களுக்கு எதிரான கொடுமைகள் அன்றைய காலக்கட்டத்தில் மிக அதிகமாக இருந்திருக்கிறது.. சுதந்தர இந்தியாவில் பிறந்தது நம்முடைய கொடுப்பினை என்றுதான் சொல்லவேண்டும்... :) :)
தொடரும்...
 
 

No comments:

Post a Comment