Monday, September 28, 2015


முழுநிலவு நாளில், புகார் மக்கள் கடலாடி மகிழ்வது வழக்கம்…தாழை, புன்னை மரங்களடர்ந்த சோலைகளையுடைய கடற்கரையிலிருந்து; கடல்விளையாட்டைக் காண்பதற்குப் போகவேண்டும் என்று விரும்பினாள் மாதவி… கோவலனும் அழைத்துச் செல்ல இசைந்தான்..
 “ மடலவிழ் கானற் கடல்விளையாட்டு
 காண்டல் விருப்பொடு வேண்டினளாகி….”
 இரவுநேரம்… வானத்தில் முளைத்த வெள்ளி நிலத்தில் செறிந்த இருளை விலக்கியது… மாலையணிந்த மார்பினையுடைய கோவலனுடன், அழகான ஆபரணங்களை அணிந்த மாதவியும் புறப்பட்டாள்… கோவலன் குதிரையில் ஏறினான்… மாதவி பல்லக்கில் வந்தாள்…
புகார் நகரத்தின் பல தெருக்களையெல்லாம் கடந்து, நெய்தல்நிலத்துக் கடற்கரைச்சோலையை அடைந்தனர்… தன் தோழி வசந்தமாலையின் கையிலிருந்த யாழை வாங்கி மீட்டினாள்… கோவலனுடன் மகிழ்ச்சியாகப் பொழுதைக் கழித்தாள் மாமலர் நெடுங்கண் மாதவி… கோவலனிடத்து யாழினை நீட்டி இசைக்கச் சொன்னாள்..

கடற்கரையில் அங்கங்கே கூடாரம் போன்று அமைக்கப்பட்டிருந்தன… புன்னைமர நிழலில், வெண்மணல் பரப்பில், ஓவியங்களால் எழுதப்பட்ட சித்திரத் திரையைச் சுற்றிலும் சேர வளைத்துக்கட்டி, மேல்விதானமும் இடப்பட்ட, யானைத் தந்தத்தாலான கட்டிலின் மீது; கோவலனும், மாதவியும் அமர்ந்திருந்தனர்…( என்னவொரு ரம்மியமான சூழல்…! )
 “ புன்னை நீழற் புதுமணற் பரப்பில்
 ஓவிய எழினி சூழவுடன் போக்கி
 விதானித்துப் படுத்த வெண்கால் அமளிமிசை….”


கோவலன் கானல்வரிப் பாடல்களைப் பாடத் தொடங்கினான்…. காவிரியாற்றையும், புகார் நகரத்தையும் புகழ்ந்து பாடினான்… புகார் நகரத்தைப் பற்றிப் பாடும்போது; தலைவன், தலைவி, தோழி, பாங்கன் என்று அமைத்து அகப்பொருள் பாடல்களைப் பாடினான்… ஒன்றிரண்டு பாடல்களை உதாரணத்திற்கு எடுத்துக் கொள்ளலாம்..


” வெண்சங்கையும், வெண்முத்தினையும் கண்டு; வெண்திங்களும், விண்மீன் கூட்டமும் என மயங்கி, ஆம்பல் மலர்கள் பகலிலும் மலர்ந்ததாம்..( ஆம்பல் இரவில் மலரக்கூடிய மலர்.. ) அப்பேர்ப்பட்ட புகார் அன்றோ எம்முடைய ஊர்…?! உன்னுடைய பொய்ச்சொற்களை, மெய்ச்சொற்கள் என மயங்கினாள் என் தலைவி…” என்று தோழி, தலைவனிடத்து உரைப்பது போலப் பாடினான் கோவலன்…

அதேபோல, தலைவன்; தலைவியைப் பிரிதல் ஆற்றாதவனாய், தன் நெஞ்சுக்குக் கூறியவையாகச் சில பாடல்களைக் கோவலன் பாடினான்…
 “ வளைவளர் தருதுறையே மணம்விரி தருபொழிலே
 தளைஅவிழ் நறுமலரே தனியவள் திரியிடமே
 முளைவளர் இளநகையே முழுமதி புரைமுகமே
 இளையவள் இணைமுலையே எனைஇடர் செய்தவையே..”


கொஞ்சும் தமிழ்…! “ நெஞ்சையள்ளும்
சிலப்பதிகாரம் “ என்று இதனால்தான் சொன்னார்களோ…?! “ புகார் நகரத்தின் அழகைச்

சொல்லி, என் தலைவி உலவிய இடம்… இவையெல்லாமே என்னைத் துன்புறுத்தின…” என்று தலைவன் பாடுவதாகக் கானல்வரிப் பாட்டைப் பாடினான் கோவலன்…


கோவலனுடைய கானல்வரிப் பாட்டைக் கேட்ட மாதவி, அதன் உட்கருத்தைப் புரிந்து கொள்ளாமல், “ இவன் உள்ளத்தே வேறொரு பெண்ணைப் பற்றிய குறிப்புப் பொருள் உள்ளது.. இவன் தன் தன்மையிலே வேறுபட்டான்…” எனக் கருதினாள்…. அகத்தில் ஊடலோடு, கோவலனிடமிருந்து யாழை வாங்கி; தானும் வேறு குறிப்புடையாள் போல அவனுக்குத் தோன்றுமாறு, கானல்வரிப் பாடல்களைப் பாட ஆரம்பித்தாள்…. தலைவி, தலைவனை நினைத்துப் பாடுவதாகப் பாடல் அமைத்துப் பாடினாள் மாதவி…
 “ கானல் வேலிக் கழிவாய் வந்து
 நீநல் கென்றே நின்றார் ஒருவர்
 நீநல் கென்றே நின்றார அவர்நம்
 மானேர் நோக்கம் மறப்பார் அல்லர்….”
 “ புகார் நகரத்தின் சோலை

சூழ்ந்த கழியினிடத்தே தாமாகவே ஒருவர் வந்து, “ நீ எனக்கு அருள் செய்வாயாக..” என்று
வேண்டி நின்றார்… அவர் நம் மான்போலும் மருண்ட பார்வையை மறப்பாரல்லர்… மீண்டும் வருவார்…”
என்று தலைவி, தோழிக்கு உரைத்தவையாகப் பாடினாள் மாதவி…

மாதவியின் கானல்வரிப் பாட்டைக் கேட்ட கோவலன், “ நான் கானல்வரி பாடினேன்… அவள் அவ்வாறு பாடாது, வேறொன்றன் மேல் மனம் வைத்து, வஞ்சனையுடன் கூடிய பொய்கள் பலவற்றையும் கூட்டிப் பாடினாள்…” என எண்ணினான்….


யாழிசையைக் காரணமாகக் கொண்டு
ஊழ்வினை சினந்து வந்து பயனைத் தரத் தொடங்கியது….!

“ கானல்வரி யான் பாடத் தானொன்றின் மேல் மனம் வைத்து
 மாயப்பொய் பலகூட்டு மாயத்தாள் பாடினாளென
 யாழிசைமேல் வைத்துத்தன் ஊழ்வினை வந்து உருத்ததாகலின்…… “
 சிலப்பதிகாரம்…. புகார்க் காண்டம்…. கானல்வரி….

தொடரும்…..
 

No comments:

Post a Comment