Monday, September 28, 2015


மாதவியின் புகழ் சோழநாடெங்கும்
பரவியது… தன் காதலன் கோவலனோடு இன்பமயமான வாழ்க்கை வாழ்ந்து வந்தாள்…

“ நிலவுப் பயன்கொள்ளும் நெடுநிலா முற்றத்துக்
 கலவியும் புலவியும் காதலற்கு அளித்தாங்கு
 ஆர்வ நெஞ்சமொடு கோவலற்கு
  கோலங் கொண்ட மாதவி…. “
 சிலப்பதிகாரம்…. புகார்க்
காண்டம்….


வசந்தகாலத்தில், காவிரிப்பூம்பட்டினத்தில் இந்திரவிழா எடுப்பது வழக்கம்… இந்திரனுடைய கோவிலில் கொடியேற்றி விழாவைத் தொடங்கி வைப்பர்… புகார் நகர வீதியெங்கும் விழாக்கோலம் பூண்டிருக்கும்… காவிரிநீரை பொற்குடத்தில் ஏந்திவந்து, இந்திரனின் திருவுருவச்சிலைக்கு மஞ்சன நீராட்டுவர்…
 இந்திரன் தவிர; சிவபெருமான், ஆறுமுகவேள், திருமால், பிரமதேவன் கோவில்களும் மஞ்சன நீராட்டப்பெற்றன…. இந்தக்கடவுளர் தவிர; அருகர் ( சமணர் ), புத்தர் பள்ளிகளிலும் விழா ஏற்பாடுகள் சிறப்புடன் நிகழ்ந்தன…

இந்திரவிழாவன்று, சிறைப்பட்ட பகைவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்… இரவுபகல் ஓயாது முழவுகள்
முழங்கின… குறுந்தெருக்களும், நெடுஞ்சாலைகளும் இந்திரவிழாவின் களிப்பில் மூழ்கித் திளைத்தன….


கோவலனுடைய குணம் என்று ஒரு வரியைக் குறிப்பிடுகிறார் இளங்கோவடிகள்…. காமமொழிகளைப் பேசித் திரிகின்ற பரத்தரோடு, ஊர் சுற்றும் இயல்புடைய கோவலன்…( ரொம்ப நல்ல குணம்….! )
 “ நகரப் பரத்தரொடு தரிதரு
மரபிற் கோவலன் போல…”


இந்திரவிழாவின் கடைநாளில் காமதேவனுக்கு வழிபாடு நடக்கும்… சிலப்பதிகாரத்தில் சிருங்காரரசம் மிக்க பாடல்கள் ஏராளமாய் உண்டு… எதற்கு நான் இதைக் குறிப்பிடுகிறேன் என்றால், பண்டைய தமிழகத்தில்; நாம் அந்தரங்கம் என்று நினைக்கின்ற விஷயங்கள் எல்லாம் மிகவும் வெளிப்படையாக நடைப்பெற்றிருக்கின்றன…


இந்திரவிழாவில்; மாதவியின் ஆடல்சிறப்புப் பிறரைக் கவருமாறு அமைந்ததால், கோவலன் அவளிடம் சற்றே ஊடல் கொண்டிருந்தான்… அவனது ஊடலைப் போக்க எண்ணிய மாதவி, தன்னைப் பலவாறு ஒப்பனை செய்துகொண்டாள்…. இந்த ஒப்பனைகளைப் படித்தவுடன் எனக்கு மூச்சே நின்றுவிட்டது….!


“ பத்துத் துவரினும் ஐந்து
விரையினும் முப்பத் திருவகை ஓமா லிகையினும்
 ஊறின நன்னீர் உரைத்த நெய்வாசம்
 நாறிருங் கூந்தல் நலம்பெற
ஆட்டிப்
 புகையிற் புலர்த்திய பூமென்
கூந்தலை….”
 இப்படி இரண்டு பக்கத்திற்கு
நீள்கிறது ஒப்பனைப் பட்டியல்…! கண்ணகிக்கு இந்த ஒப்பனை தெரியாமல் போய்விட்டது பாருங்கள்….?!


அகிற்புகையூட்டி ஈரம் போக்கிய
கூந்தலை; வகையாக வகுத்து, வகைதோறும் கஸ்தூரிக் குழம்பு ஊட்டினாள்..( தடவினாள் )… அழகிய
சிவந்த சிறிய அடிகளில் செம்பஞ்சுக் குழம்பைத் தடவினாள்… நலத்தகு மெல்லிய விரல்களில்
நல்லணி ( மெட்டி போன்றது ) அணிந்தாள்…. கால்களில் பரியகம், நூபுரம், பாடகம், சதங்கை,
அரியகம் ( கொலுசு, சிலம்பு, தண்டை போன்றவை ) என்னும் அணிகளைப் பொருத்தமாக அணிந்தாள்….
குரங்குசெறி என்னும் அணிகளைத் துடைகளில் அணிந்தாள்..( ஒரு இடத்தைக் கூட விடவில்லை…! )


முப்பத்தியிரண்டு பெரிய
முத்துக்கோவைகள் கோர்த்து செய்த விரிசிகை என்னும் அணியுடன் கூடிய மேகலையை, அழகான இடையில்
உடுத்திக் கொண்டாள்… முத்துவளையைத் தோளுக்கு அணிந்தாள்… மாணிக்கமும், வைரமும் பதிக்கப்பட்ட
கடகமும் ( கையணி ), பொன் வளையலும், நவமணிகள் பதித்த வளையல்களும்,

“ அரிமயிர் முன்கைக் கமைவுற
அணிந்து…” அவளுடைய கையில் பூனைமுடி இருந்தது என்று சொல்கிறார்…( வேக்ஸிங் எல்லாம் அவர்களுக்குத்
தெரிந்திருக்கவில்லை..! )

கைவிரல்களில் மாணிக்கம் பதித்த மோதிரம் அணிந்தாள்… வீரச்சங்கிலியும் பொற்சரடும், முத்தாரமும் கழுத்திலே அணிந்து கொண்டாள்…. நீல வைரத்தால் கட்டப்பட்ட குதம்பை ( வைரத்தோடு ) என்னும் அணியைக் காதில் அணிந்து கொண்டாள்…. தொய்யகம் என்கிற தலையணியைக் கரிய கூந்தல் அழகு பெறுமாறு அணிந்து
கொண்டாள்….

இத்தகைய பேரழகுடன் வந்த மாதவி, கோவலனுக்கு இன்பத்துப்பால் பாடமெடுத்தாள்…!


“ கூடலும் ஊடலும் கோவலற்கு அளித்துப்
 பாடமை சேக்கைப் பள்ளியுள் இருந்தாள்….”
 ( முடியலைடா சாமி…. ! )

தொடரும்…..                                                                         
 

No comments:

Post a Comment