Monday, September 28, 2015


நிறைமதி நாளில், முழுத்திங்கள் போன்ற முகமுடைய மாதவியை அணைத்து வாழ்ந்த வாழ்க்கையை நெகிழவிட்டவன் ஆனான் கோவலன்….
 “ ஏவலாளருடன் சூழ்தரக் கோவலன்தான் போனபின்னர்க்
 கையற்ற நெஞ்சினளாய் வையத்தின் உள்புக்குக்
 காதலனுடன் அன்றியே மாதவிதன் மனைபுக்காள்…
 பொழுது போயிற்று. புறப்படலாம் எழுக. “ என்றான்.. ஆனால் அவளுடன் செல்லாது, ஏவலாளர் சூழ்ந்துவரக் கோவலன் குதிரையேறி வேறுபுறம் சென்றான்… அவன் சென்றபின்பு, ஏதும் பேசாது, யாதொன்றும் செய்வதறியாது திகைத்த நெஞ்சினளாய், மூடுவண்டியில் ஏறி உள்ளே அமர்ந்தாள்…. காதலனுடன் செல்வதன்றி வருந்தித் தனியே தன் மனை நோக்கிச் செல்லலானாள்….


இந்தச் சம்பவத்திற்குப் பிறகு; மாதவியும், கோவலனும் நேரில் சந்தித்ததாகக் குறிப்புகளில்லை…. அவன் வருவான் வருவான் என்று மாதவி காத்துக் கிடந்ததுதான் மிச்சம்…. அவனை நினைந்து நினைந்து ஏங்கினாள்…. தன்
பிரிவாற்றாமையை யாழிசை மூலம் வெளிப்படுத்தினாள்… கோவலன் நினைவு வரும்போதெல்லாம் பூங்கொடி
போன்ற மாதவி மயங்கினாள்….

இனியும் அவன் பிரிவைப் பொறுக்காதவளாய், கோவலனுக்கு ஒரு திருமுகம் ( மடல் ) வரைந்தாள்… முதிர்ந்த தாழம்பூவினது வெள்ளிய இதழிலே, பித்திகையின் கொழுவிய முகையை எழுத்தாணியாகக் கொண்டு; அதனை செம்பஞ்சுக் குழம்பில் தோய்த்து எழுதினாள்… தனிமைத்துயர் மிக்க அந்த அந்திமாலைப் பொழுதிலே, தோழி
வசந்தமாலையை அழைத்து, “ இத்தூய மலர்மாலையில் நான் வரைந்துள்ள சொற்களின் தெளிந்த பொருள்களையெல்லாம் கோவலன் மனம் ஏற்குமாறு எடுத்துக்கூறி, இங்கே, இப்பொழுதே அழைத்து வருவாயாக….” என்றுரைத்து, முடங்கல் அடங்கிய மாலையைக் கொடுத்தனுப்பினாள்….


“ பசந்த மேனியள் படருறு மாலையின்….” என்கிற வரிக்கு, காதலன் பிரிவால் பசலைநோய் படர்ந்தது என்று பொதுவாக உரை எழுதலாம்… ஆனால் என்னுடைய அனுமானத்தில், மாதவி அப்போது கருவுற்றிருந்திருக்கிறாள்….
( கோவலனின் மரணத்திற்குப் பின் பிறந்தவள் மணிமேகலை. )

வசந்தமாலை, அந்த முடங்கலைக் கொண்டுபோய், புகாரின் கூலக்கடை வீதியிடத்தே; கோவலனைக் கண்டு அம்மாலையைத் தந்தாள்…. அதனை ஏற்க மறுத்த கோவலன், இதுகாறும் தன்னுடன் மாதவி வாழ்ந்த வாழ்க்கையெல்லாம் வெறும் நடிப்புத்தான். உண்மையல்ல.. என்று பழித்துரைத்தான்…( பெண்மனம் அறியா மூடன்..) ” அவள் ஒரு நாடக மகள். என்னைக் காதலிப்பது போல நடித்து ஏமாற்றி விட்டாள்..’’ என்று கூறி வர
மறுத்துவிட்டான் கோவலன்…

அவன் வரமறுத்ததை அறிந்த மாதவி, “ அவர் ஏதோ என் மேலுள்ள கோபத்தால் அப்படிக் கூறியிருக்கிறார். எப்படியும் இம்மாலைப்பொழுதினுள் இங்கு வருவார்… இல்லாவிடினும், நாளைக்காலை இங்கு நிச்சயம் வருவார்…” எனக் கூறி, இமைப்பொருந்தாமல்; காதலனை எண்ணியெண்ணி ஏங்கிக் கிடந்தாள்… அவள் நினைத்த மாலைப்பொழுதும், காலைப்பொழுதும் வராமலேயே போய்விட்டது….!


கோவலன் கண்ணகியை அழைத்துக்கொண்டு, புகார் நகரத்தை விட்டுச் சென்றுவிட்டான் என்றறிந்த மாதவி, கோசிகன் என்கிற ஒரு பிரம்மசாரியிடம், கோவலனுக்கு ஒரு முடங்கல் எழுதி, அவனை எப்படியாவது கண்டுபிடித்து, அவனிடம் சேர்க்கும்படி வேண்டினாள்… கோசிகனும் கோவலனைத் தேடிக்கொண்டு, மதுரைக்குப் பயணமானான்….


காட்டுவழியில் கோவலனைக் கண்டுபிடித்தான்… மாதவியின் முடங்கலை அவளிடம் சேர்ப்பித்தான்… அன்பு மிகுந்து, அவள் கதறி எழுதியிருந்த( காதலால் கசிந்து கண்ணீர் மல்கி..! ) முடங்கலைப் படித்தபின்பு,
“ அவளிடம் குற்றமேதுமில்லை…” எனத் தெளிந்து, மாதவிக்காக மனம் வருந்தினான்…. அந்த முடங்கலில்
அவள் கூந்தலில் பூசியிருக்கும் நெய்யின் மணம் வீசியது அவனை நெகிழவைத்தது…. அவளோடு வாழ்ந்த
காதல் வாழ்க்கையை நினைத்து ஏங்கினான்…! “ மாதவி யோலை மலர்க்கையின்நீட்ட
 உடனுறை காலத் துரைத்த நெய்வாசம்
 குறுநெறிக் கூந்தல் மண்பொறி உணர்த்தி….”
 சிலப்பதிகாரம்…. மதுரைக் காண்டம்..


கோவலன் மனதில் எப்போதும் தனக்கோர் இடமிருக்கிறது என்பதைக் கோசிகன் மூலம் தெரிந்து கொண்டிருப்பாள் மாதவி…! அதைப்பற்றி இளங்கோவடிகள் எழுதவில்லையென்றாலும், அது மறைப்பொருளாக உணர்த்தப்படுகிறது….!


மதுரையில் கோவலன் கொல்லப்பட்ட செய்தியறிந்த மாதவி, மனம் உடைந்தாள்… அதற்கடுத்து அவள் செய்ததுதான், அவளின் காதலை உன்னத நிலைக்குக் கொண்டு சேர்த்தது…!


தான் அணிந்திருந்த தலைமாலையைக் கூந்தலுடன் ஒருசேரக் களைந்தெறிந்து விட்டு, தன் செல்வத்தையெல்லாம் புண்ணியம் தரும் தானம் புரிந்து, புத்தத்துறவியான அறவணஅடிகள் முன்பு துறவறம் பூண்டாள்…!
 “ இறந்த துயர்கேட்டு மாதவி மடந்தை
 கணிகையர் கோலம் காணா தொழிகெனக்
 கோதைத் தாமம் குழலொடு களைந்து
 போதித் தானம் புரிந்தறங் கொள்ளவும்….”
 சிலப்பதிகாரம்…. வஞ்சிக்காண்டம்….


இதையெழுதும் போது, சொல்லவொண்ணாத
துக்கம் ஏற்படுகிறது….

அவள் மகள் மணிமேகலையையும்
புத்தப்பள்ளியில் சேர்த்து, துறவற நெறியை மேற்கொள்ளச் செய்தாள்…. “ மணிமேகலைதன் வான்துறவு உரைக்கும் “ காப்பியம் மணிமேகலை….!


தன்னுடைய ஒப்பற்ற காதலால், தமிழ் இலக்கியத்தில் மிகவுயர்ந்த இடத்தைப் பிடித்த பெண்மணி மாதவி, கண்ணகியை விட ஒருபடி உயர்ந்து நிற்கிறாள்…..!

நிறைந்தது….!
 

No comments:

Post a Comment