Wednesday, February 10, 2016


உள்ளம் புகுந்தென்னை நைவித்து… (2 )

 கோதை தமிழுக்களித்த கொடை 173 பாடல்கள்… அதில் திருப்பாவை 30 பாடல்கள்….திருப்பாவை எழுதும்போது அவள் வாலைக்குமரிப்பருவத்தின் ஆரம்பநிலையில் இருந்திருக்கிறாள்.. நாச்சியார் திருமொழியில் அவள் காமம் கனிந்த பெண்ணாக இருக்கிறாள்….

 

“ செங்குழல்மேல் மாலைத்தொடை

தென்னரங்கருக்கீயும் சோலைக்கிளி…..”

கோதை சூடிக்கொடுத்த மாலைகளை அவள் உள்ளங்கவர் கள்வன் திருவில்லிபுத்தூர் உறையும் வடபத்ரசாயி அணியத்துவங்கிய நாளில், அவளும் திருப்பாவை எழுதத் தொடங்கியிருக்க வேண்டும்…. திருப்பாவையில் எல்லாப் பாடல்களுமே பொதுப்படையாக அமைந்த பாடல்கள்தான்…. ஓரிரு பாடல்களில்தான் எம்பெருமான் மீது அவளுக்கிருக்கும் அளப்பரிய காதலை வெளிப்படுத்துகிறாள்….

 

பாவை நோன்பு என்பது சங்ககாலம் தொட்டே, பண்டைய தமிழ்ப்பெண்கள் நோற்ற ஒரு நோன்பு…. “ தை நீராடல் ‘’ என்று அகநானூற்றில் வருகிறது…. அதை “ மார்கழி நீராடல் “ ஆக்கிய பெருமை கோதையையேச் சாரும்….

 

ஏன் எல்லா மாதங்களையும் விட்டுவிட்டு, மார்கழி மாதத்தைத் தேர்ந்தெடுத்தாள் கோதை….? காரணம்… உஷ்ணமான தமிழகத் தட்பவெப்பநிலையில், மார்கழி மாதந்தான் தண்மையான மாதம்…. பனி பொழிகின்ற காலம்…. தவிரவும், கிருஷ்ணனே, “ மாதங்களில் நான் மார்கழியாயிருப்பேன்…” என்று கீதையில் சொல்லிவிட்டான்…. பனிவிழும் இளங்காலையில் கன்னிப்பெண்கள் நீராடி, பாவை நோன்பு நோற்றால்; மனம் விரும்பும் கணவனை அடையப் பெறுவார்கள்….

 

கோதையின் பாவை நோன்பு, அவளுக்குப் பிறகு நூறாண்டுகள் கழித்து அவதரித்த மாணிக்கவாசகரையும் பாதிக்கவைத்து, திருவெம்பாவையைச் சைவத்திற்கென்று இயற்ற வைத்தது….!

 

திருப்பாவையில் வரும் புராண, இதிகாசக்குறிப்புகள், நுட்பமான இயற்கை வருணனைகளைப் படிக்கும்போது, கோதை ஒரு வாலைக்குமரி என்பதை மனம் ஏற்க மறுக்கும்…
“ ஓங்கு பெருஞ்செந்நெ லூடு கயலுகளப்

பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப…”

ஓங்கி உயர்ந்து வளர்ந்த நெற்பயிர்களின் ஊடே கயல்மீன்கள் துள்ளும்…. அழகிய குவளை மலர்களில் வண்டுகள் உறங்கும்…. எத்தனை அழகான வருணனை….?!

 

தமிழில் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்ட சொல் அல்குல்… இதைப்பற்றிய மிக நீண்ட பதிவினை என்னுடைய கம்பராமாயணக் கட்டுரைகளில் பார்க்கலாம்… அல்குல் என்பது, பெண்களின் உடலமைப்பில் இடுப்பையையும், தொடையையும் இணைக்கின்ற சற்றே விரிந்த பகுதி… இடையில் குறுகி அகலுதல் அல்குல்… திவ்யப்பிரபந்தத்தில் பல இடங்களில் இந்த சொல் மிகப் பொருத்தமாக எடுத்தாளப்பட்டிருக்கிறது…. திருப்பாவையில் 11—ம் பாடலான, “ கற்றுக் கறவைக் கணங்கள்….” பாடலில்,

“ புற்றரவு அல்குல் புனமயிலே போதராய்….” என்று பாடுகிறாள் கோதை… புற்றிலிருந்து வெளிப்படும் படம் விரித்த நாகம் போல அல்குலையுடைய மயிலன்ன நடையாள்….. எத்துணை கவித்துவமான வெளிப்பாடு இது….?!

 

“ உந்தன்னோடு உறவேல் நமக்கிங்கு ஒழிக்க ஒழியாது….”

உனக்கும், எங்களுக்குமான உறவை யாராலும் ஒழிக்க முடியாது.. அன்பினால் கட்டுண்ட உறவல்லவா….!

 

“ எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உந்தன்னோடு

உற்றோமே யாவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம்….”

இனி வருகின்ற எல்லாப் பிறவிகளிலும், உன் திருவடிப் பற்றுவது தவிர; வேறுகதி ஏது எங்களுக்கு….?!

 

அவன் இதழ்தேன் சிந்தும் ஒருவாயமுதம் பருகிடக் கெஞ்சிய கோதையின் காதல்…. மானிடவர்க்கு அல்லாதது…. மாலவனுக்கென்றே சொந்தமானது…..!

 

தொடரும்….

 

 

 

 

 

No comments:

Post a Comment