Tuesday, February 9, 2016


உள்ளம் புகுந்தென்னை நைவித்து… ( 1 )

” திவ்யப்பிரபந்தம் “ தொடர் எழுதும்போது, ”கோதை”யைப் பற்றி விரிவாக எழுதலாம் என்று நினைத்திருந்தேன்… ஆனாலும், அவளின் தனித்துவமான பாடல்களுக்காக; அவளுக்கு முன்னுரிமை அளித்து, தனிப்பதிவுகளாக எழுத நினைக்கிறேன்….

 

கோதையை பூமாதேவியின் மறுஅம்சம் என்கிற தெய்வநிலைக்கெல்லாம் கொண்டு போகாமல், தமிழின் ஆகச்சிறந்த பெண்பாற்புலவராக…. அவளின் தமிழாளுமைக்காக…. இலக்கிய மேதமைக்காக…. அவள்பால் பெருவிருப்பம் எனக்குண்டு…. எனக்கு நினைவு தெரிந்து தமிழ் வாசிக்கயறிந்த நாள் முதல், இன்றுவரை; அவளை நினைக்காத நாளேயில்லை… தினமும் ஒருமுறையாவது அவள் பாடல்களைப் பாடிக்கொண்டிருப்பேன்…!  கன்னல் தமிழில் காதலை இனிக்க இனிக்கப் பாடி, எல்லோர் உள்ளங்களையும் கவர்ந்த கள்வனின் காதலி அவள்….!

 

கோதையின் பிறப்புப் பற்றி வரலாற்றுத் தொன்மங்களில் பெரிதாக எந்தத் தகவலுமில்லை… அவள் பூமாதேவியின் அம்சம்… திருத்துழாய்ச் செடியின் ( துளசி ) அடியில் கண்டெடுக்கப்பட்டாள் என்பதெல்லாம் வைணவ குருப்பரம்பரைக்கதைகள் சொல்லும் விஷயங்கள்…..

 

அவளுடைய பிறப்பை தெய்வீகம் கலக்காமல் யோசித்துப் பார்த்தால், துளசிச்செடியின் கீழ் புறக்கணிக்கப்பட்ட குழந்தை என்பது தெளிவாகத் தெரிகிறது… பெரியாழ்வாரால் கண்டெடுக்கப்பட்டு, தன் சொந்தப்பெண் போல் வளர்க்கப்பட்டிருக்கிறாள்…. விஷ்ணுசித்தரிடம் தமிழ் இலக்கியத்தையும், இலக்கணத்தையும் பயின்று; அதிமேதாவிலாசத்தோடு இருந்திருக்க வேண்டும்… இதை நான் ஏன் குறிப்பிடுகிறேன் என்றால்…அவள் இயற்றிய சங்கத் தமிழ்மாலை ( திருப்பாவை ) தமிழ் இலக்கணத்தில் மிகக்கடினமான பாவகைகளுள் ஒன்றான “ இயற்றரவிணைக் கொச்சகக் கலிப்பா “வினால் பாடப்பட்டிருக்கிறது….

 

” பெரியாழ்வார் தனது கிருஷ்ண காமத்தை கவியுக்தியாக வெளிப்படுத்த கற்பனை செய்து கொண்ட ஒரு கற்பனை மகளே ஆண்டாள் “….என்பது மூதறிஞர் இராஜாஜியின் கருத்து…

“ ஒருமகள் தன்னையுடையேன்

உலகம் நிறைந்த புகழால் திருமகள் போல வளர்த்தேன்…” என்ற பெரியாழ்வாரின் கூற்றின் மூலம் இராஜாஜியின் அநுமானம் தகர்ந்து போனது… பெரியாழ்வாருக்கு ஒருமகனும் இருந்ததாகக் கருத இடமுண்டு… திருவரங்கக்கோவிலை நிர்வகித்துக் கொண்டிருந்த அவருடைய மரபினரே, “ உத்தம நம்பிகள் மரபு “ என “ உத்தம நம்பி வைபவம் “ கூறுகிறது…

 

நாச்சியார் என்ற பெயர் கூட பிற்காலத்தில் பயன்பாட்டுக்கு வந்ததுதான் என்பது என்னுடைய யூகம்… சங்கத் தமிழ்மாலை என்றுதான் தன்னுடைய பாசுரங்களுக்குக் கோதை பெயர் சூட்டியிருக்கிறாள்…. திருப்பாவை, நாச்சியார் திருமொழி என்பதெல்லாம் பிற்காலத்தில் வழங்கப்பட்ட பெயராக இருக்க வேண்டும்…

 

கோதை நள வருடத்தில், ஆடி மாதம், பூரம் நட்சத்திரத்தில் திருவில்லிப்புத்தூரில் பிறந்தவள்…. கி.பி. 716—ஆம் வருடமாக இருக்கலாம் என்பது மு. இராகவையங்காரின் கணிப்பு… திருப்பாவையின் 13—ம் பாடலான, “ புள்ளின்வாய் கீண்டானை….” பாடலில் வரும், “ வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று…” என்ற சொற்றொடரை வைத்து ஆராய்ச்சி செய்து அவள் பிறந்த காலத்தைக் கணித்திருக்கிறார்கள்…. அவ்வருடம் வானத்தில், முக்கியமான வானவியல் நிகழ்வொன்று நிகழ்ந்திருக்கிறது…

 

பதிமூன்று வயதிற்குள்ளாகவே பேரின்பநிலை அடைந்த வாலைக்குமரி கோதை….!

 

தொடரும்….

 

No comments:

Post a Comment