Friday, February 12, 2016


உள்ளம் புகுந்தென்னை நைவித்து…. ( 3 )

 

கோதையின் திருப்பாவைக்கும், வாரணமாயிரத்திற்கும் கொடுக்கும் முக்கியத்துவத்தை வைணவம் நாச்சியார் திருமொழிக்குக் கொடுப்பதில்லை…. காரணம்…. அதில் இழையோடும் பாலியல்…. காமத்துப்பால் பாடல்கள்தான்….

 

ஒருவிதமான பாசங்கற்ற உடற்சார்ந்த விருப்பம் எல்லாப் பாடல்களிலும் அமைந்திருக்கிறதுமறைமுகமான, ஊடுபொருளான, இலைமறைகாயான பக்தி என்று நான் சொல்வேன்….!

 

காமம் கனிந்த பெண்ணால்தான் இத்துணை ஈடுபாட்டோடு காமத்துப்பால் எழுதமுடியும்…. கற்பனையாக எப்படி அவள் எழுதினால் என்பதே எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது….! காமத்திற்கு என்ன உரை எழுதுவது….? அதீதக் காதல் என்று ஒருவார்த்தையில் சொல்லிவிடக் கூடுமோ….?

 

காமக் கடும்புனல் உய்க்குமே நாணொடு

நல் ஆண்மை என்னும் புணை..”

குறள்….. காமத்துப்பால்

காமத்துக்கு 250 பாடல்களில் விழா எடுத்த வள்ளுவன் என்ன சொல்ல விழைகிறான்….?

நாணம், ஆண்மை என்ற படகுகளைக் காமம் என்னும் கடும்வெள்ளம் அடித்துப் போய்விட்டது…” என்கிறான்….!

 

காமம் என்பது மனித வாழ்வின் மிக முக்கிய அங்கம்…. பிணைப்புக்கான காரணி…. காமத்தை எப்படி ஒதுக்கித்தள்ள முடியும்…? கோதையின் பாசுரங்களால் ஒருவர் காமவயப்பட முடியுமா….? தமிழில் மூழ்கி, முத்தெடுப்பவர்கள் நிச்சயம் காமுற முடியும்….!

 

ஆண்டாய்உனைக் காண்பதோர் அருளெனக் கருளுதியேல்

வேண்டேன் மனைவாழ்க்கையை விண்ணகர் மேயவனே….”

என்பது திருமங்கையாழ்வாரின் கூற்று…. மணவாழ்க்கையை நன்கு அனுபவித்துவிட்டுதான் இப்படி எழுதியிருக்கிறார்….! இல்லறவாழ்வில் இருப்பவர்கள் இறையை உணரமுடியாதாயென்ன….?!

 

இறைவனை அணுகத் தடையாக இருப்பது காமம் என்கிற உலகியல் உண்மையை முதன்முதலில் உடைத்தெறிந்தவள் கோதை…. இன்பத்துப்பாக்களால் பாற்கடலில் பயணம் செய்து, பரந்தாமனை அடைந்தவள் பட்டர்பிரான் கோதை….!

 

காதல் வழியாக பேரின்பநிலை அடைவது கோதைக்குக் கைகூடியது…. கட்டற்ற காமத்தைக் கன்னல் தமிழில் கடுகளவுகூட பாசாங்கில்லாமல் கொடுத்தவள்…. இறையைக் கண்டு அவள் அஞ்சவேயில்லை…. காதலில் கரைந்து போனவளுக்குக் கடவுள் பயமேது…?! வரலாற்றில் இறைவனுக்காகத் தன்னை அர்ப்பணித்துக்கொண்ட பெண்களுக்கெல்லாம் முன்னோடி கோதைதான்….!

 

ஊனிடை ஆழிசங்கு உத்தமர்க்கென்று

உன்னித் தெழுந்தவென் தடமுலைகள்

மானிடவர்க் கென்று பேச்சுப்படில்

வாழகில்லேன் கண்டாய் மன்மதனே….”

அவள் எப்பொழுதோ தன் வாழ்வை முடிவு செய்துவிட்டாள்…. அதையும்கூட போகிறபோக்கில் சொல்லிவிடுகிறாள்

அவரைப் பிராயந் தொடங்கி யென்றும்

ஆதரித் தெழுந்தவென் தடமுலைகள்

துவரைப் பிரானுக்கே சங்கற்பித்துத் தொழுது வைத்தேன்….”

எனக்கு நினைவு தெரிந்த நாளாக, என் பெண்மையை உணர்ந்த நாள் முதல், காதலில் கனிந்த என் கட்டுடலை அவனுக்கே தாரைவார்த்துக் கொடுத்துவிட்டேன்…. இப்படியொரு அசாத்தியமான பெண்ணை, காமக்கடும்புனலில் நீந்துகின்ற ஒரு பெண்ணை மானிடர் காதலிக்கக் கூடுமோ….?!

 

கள்ளவிழ் பூங்கணைத் தொடுத்துக் கொண்டு

கடல்வண்ணன் என்பதோர் பேரெழுதி….”

நான் மாலையாகத் தொடுக்கின்ற ஒவ்வொரு மலரிலும் அவன் பெயரை எழுதுகிறேன்….

வைத்துக் கிடக்கும் மலர்மார்பா…. உன் மார்பில் கிடக்கும் மாலை நானே ஆகுக….

 

தேசமுன் அளந்தவன் திரிவிக்கிரமன்

திருக்கைகளால் என்னைத் தீண்டும்வண்ணம்…..”

அவன் தீண்டுகிற ஸ்பரிசம் என் உள்மெலியப் புகுந்து, என்னுயிரை உறிஞ்சி விடாதா….

காமத்தீயில் நான் கரைந்து கொண்டே வருகிறேன்….

காமத் தீயுள் புகுந்து

கதுவப்பட்டு இடைக்கங்குல்

ஏமத்தோர் தென்றலுக் கிங்கு

இலக்காய் நானிருப்பேனே…..!....”

 

தொடரும்…..

No comments:

Post a Comment