Monday, February 8, 2016


தயரதன் புதல்வன், தாமரைக்கண்ணன், சீதாராமன், கோதண்டபாணி, அயோத்திராமனாய் அவதரித்து; இந்த அண்டத்தை உய்விக்க வந்த மெய்யமால் ஐயன் இவனே…! என்று விபீஷணன் இலங்கேஸ்வரனுக்கு மேலும் அறிவுரை கூறுகிறான்…

 

“ அரக்கர் தலைவனே… இராமபிரானின் கோதண்டத்திலிருந்து வரும் அம்புகள் எத்தகைய தன்மையுடையவை என்பதை அறிவாயா நீ…? அந்த அம்புகளாகிய நாகங்கள், தமது நாவினால் திக்குகள் அனைத்தையும் அளந்து கொள்ளற்குரியன…. தமது நச்சுப்பற்களில் தினந்தோறும் கடுமையான விஷத்தைக் கக்குவன… நெருப்பைக் கக்கும் பற்களையுடையன…. பாவிகளின் உயிராகிய உணவையன்றி; பிறிதோர் இரையைப் பெற விரும்பாதன….” எம்பெருமானின் அம்பறாத்துணியைப் புற்று என்கிறான் கம்பன்…. பாணங்களை நாகங்களாகவும், அவை தங்குகின்ற இடத்தைப் புற்றாகவும் உருவகிக்கிறான்….

 

“ இராம இலக்குவர்கள் கைக்கொண்டு நிற்கும் விற்களைப் பிறரால் அசைக்கவேனும் இயலுமோ….?! நம்முடைய விற்கள் உருவிற் பெரியவையாகக் காணப்படினும், அவர்களின் விற்களை ஒழிக்கக்கூடியன ஆகுமோ…? அந்த விற்கள் கற்பகத்தருவோ…? மூங்கிலோ…? பரம்பொருள்போல் உலகினைத் தழுவி நிற்கும் மேருமலையோ….?!...”

 

“ அந்த இராமபிரானது அம்புகளால் வாலியின் வன்மை அடங்கியது… ஒரே அம்பினால் மராமரங்கள் பிளக்கப்பட்டன… கரன் முதலானவர்கள் சிரங்கள் சிந்தின… இனி போர் நெருங்க நெருங்க பகைவர்களின் பாரம் குறைந்து கொண்டே வருகிறது….”

 

“ பிராட்டி சிறைப்பட்டிருப்பதால், என்ன தீங்கு எப்போது விளையுமோ…என்ற எண்ணத்தினால் ; இந்த அரக்கர்கள் உன்னிடம் தன் கருத்தை வெளியிடுவதற்குப் பயந்து, இரவும், பகலும் உறங்காமல் தவிக்கின்றனர்…. நம்மைக் கண்டு அஞ்சிய அமரர்கள், இப்பொழுது தமக்குப் புகல் கிடைத்ததென்று கவலை தீர்ந்திருக்கின்றனர்….”

 

“ பெருமை வாய்ந்த ஜானகி என்ற மிகவும் கொடியதான நஞ்சினை உட்கொண்டவர்களான அரக்கர் நரகத்தினை அடைவர்….என்று எண்ணியே பயமின்றியிருக்கிறார்கள்…” ”திட்டியின் விடமன்ன கற்பின் செல்வியை…” என்று கும்பகர்ணன், இராவணனுக்கு அறிவுறுத்தியதை இங்கே நினைவு கூறுகிறேன்….பிராட்டியின் கற்பைக் கொடிய நஞ்சுக்கு உவமையாக்குகிறான் கம்பன்…. கொடிய நாகத்தைக் கண்டு பயப்படுவது இயல்பல்லவா….

 

“ நீ முன்னர் வரம் வேண்டி நின்றபோது, மனிதர்களாலோ, குரங்குகளாலோ நீ முறியடிக்கப்படுதல் கூடாது என்று விரும்பி வேண்டவில்லை… அவர்களால் உனக்கு இறுதி நேரும்.. ஆகவே, அவர்களைப் பகைத்தல் நன்றன்று…. அமரர்கள்தான் வானரர் ரூபத்தில் திரண்டிருக்கிறார்கள் என்பது உனக்குப் புரியவில்லையா…? இராமன் வேறுயாருமல்ல…. ஆழிவலவன் ( சக்கரம் தாங்கிய திருமால் ) அவனே…!”

 

இசையும் செல்வமும் உயர்குலத்து இயற்கையும் எஞ்ச

வசையும் கீழ்மையும் மிக்கொளக் கிளையொடு மடியா

தசைவில் கற்பின் அவ்வணங்கை விட்டருளுதி அதன்மேல்

விசையம் இல்லெனச் சொல்லினன் அறிஞரின் மிக்கோன்.

யுத்த காண்டம்…. இராவணன் மந்திரப்படலம்….

அறிந்த ஞானிகளிற் சிறந்தவனாகிய விபீஷணன், “ புகழும், செல்வமும், உயர்குடியில் உதித்தற்கேற்ற நல்லொழுக்கமும் குறைந்தொழிய; நிந்தனையும், இழிவும் மிக, உன்வம்சம் அழியாமலிருக்க; தளராத கற்புடைய அந்தத் தெய்வவனிதையை விடுதலை செய்க… அவ்வாறு நீ செய்வாயேயானால் உனக்கு வெற்றி விளைக்கக்கூடிய செயல் பிறிதில்லை….” என்று நீண்ட அறிவுரை சொல்லி தன் ஆசனத்தில் அமர்ந்தான் விபீஷணன்….

 

“ களிமலர்சேர் பொழிலரங்கத் துரகமேறிக்

கண்வளரும் கடல்வண்ணர் கமலக்கண்ணும்

ஒளிமதிசேர் திருமுகமும் கண்டுகொண்டென்

உள்ளம்மிக என்றுகொலோ உருகும் நாளே…!...”

குலசேகராழ்வார்…. பெருமாள் திருமொழி….

 

 

 

 

 

No comments:

Post a Comment